வாழ்க்கை நமக்கு கற்றுத்தரும் பாடம்!

Life teaches us a lesson!
lifestyle articlesImage credit - pixabay
Published on

வாழ்க்கை என்பது பாடம் கற்றுக் கொடுத்துவிட்டு தேர்வு வைப்பதில்லை. தேர்வு வைத்த பின்புதான் பாடும் கற்றுத்தருகிறது. வாழ்க்கை என்பது இதுதான் என்று ஒருவர் கொடுக்கும் விளக்கத்தை வைத்து வாழ்க்கைக்கான அர்த்தத்தைத் தேட முயன்றால் தோல்விதான் மிஞ்சும். அவரவர் வாழ்க்கை அவரவர் கையில் உள்ளது.

ஒருவர் உயிரோடு இருக்கிறார் என்பதினால் அவர் வாழ்கிறார் என்று அர்த்தம் இல்லை. உயிரோடு இருப்பது வேறு உயிர்ப்போடு இருப்பது வேறு. வளர்வதுதான் வாழ்வு. வளர்வது என்பது பொருளாதார உயர்வை மட்டும் குறிப்பதில்லை. மனதளவிலும் உயர்ந்து நிற்பதுதான் உண்மையான வாழ்க்கை. அவரவர் வாழ்க்கை அவரவர் கையில்.

வாழ்க்கை நமக்கு நிறைய அனுபவ பாடங்களை கற்றுக் கொடுக்கிறது. ஆனால் நாம்தான் அவற்றை கவனிப்பதில்லை. வாழ்க்கை சொல்லித்தரும் பாடங்களை உற்று நோக்கினால் வாழ்வில் முன்னேற முடியும். எதிர்பார்ப்பை குறைத்துக் கொண்டால் ஏமாற்றம் பெரிதாக தெரிவதில்லை. வாழ்வில் நாம் நம்மை மட்டுமே நம்பி வாழவேண்டும். வாழ்வது ஒரு முறைதான் அதை அர்த்தமுள்ளதாக வாழ்ந்து விடுவது நல்லது.

வீண் பிடிவாதமும், வறட்டு கௌரவமும், சுயநலமான உணர்வும் கொண்டிருந்தால் வாழ்க்கை இனிக்காது. வாழ்வில் எதிர்ப்படும் இன்னல்களை எதிர்த்து நின்று சமாளிக்கும் திறன் பெற வேண்டும். துன்பத்தைக் கண்டு துவண்டு விடுதல் கூடாது. நம்மை மதிப்பவர்களிடம் தாழ்ந்து பேசவேண்டும். மிதிப்பவர்களிடம் வாழ்ந்து காட்ட வேண்டும். நம்பிக்கைதான் வாழ்க்கையின் ஆதாரம். வாழ்வில் நிறைய இன்னல்கள் வந்து நம்மை புரட்டிப்போட்டாலும் அதிலிருந்து உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவைபோல் இருக்க வேண்டும். வாழ்வை ரசித்து வாழப் பழகவேண்டும்.

வாழ்வில் யாரையும் சார்ந்து வாழப் பழகக்கூடாது. நம் நிழல் கூட வெளிச்சம் உள்ள வரைதான் நம் கூட வரும் எனவே தனித்து துணிந்து வாழவேண்டும். வலியில்லாமல் வாழ்க்கை கிடையாது. ஆனால் அந்த வலியிலும் வழி தெரியாமல், தடுமாறிப் போகாமல் செல்ல வேண்டும்.

வாழ்வின் நிச்சயமற்ற தன்மைகள் நமக்கு நிறைய கற்றுக் கொடுக்கின்றன. அவற்றை தவிர்க்க இயலாது. அவை நம் மன வலிமையை கூட்டுவதுடன் முடிவெடுக்கும் திறமையையும் அதிகரிக்கின்றது. கடினமான காலங்களில் நம்மை வழி நடத்துகின்றது.

இதையும் படியுங்கள்:
வெற்றிக்குத் தேவை திறமையே!
Life teaches us a lesson!

தடைகளும், சவால்களும் நிறைந்ததுதான் வாழ்க்கை. துன்பங்கள் எப்போதும் நீண்ட காலம் நீடிக்காது. அவற்றை எளிதில் கடந்து வெற்றியின் ருசியை நம்மால் அனுபவிக்க முடியும். அதற்கு தொடர் முயற்சியும், முன்னேறிச் செல்ல வேண்டும் என்ற உந்துதலும் அவசியம்.

எந்த விஷயத்தையும் தள்ளிப் போடுவதும், தவிர்ப்பதும் பிரச்சனைக்கு தீர்வாகாது. பிரச்னையிலிருந்து ஓடவோ ஒளியவோ முடியாது. என்றாவது ஒருநாள் எதிர்கொண்டேயாக வேண்டும். எனவே துணிந்து எதிர்த்து நின்று போராடி வெற்றிபெற வேண்டும்.

மாற்றம் ஒன்றுதான் மாறாதது. எனவே இதுவும் கடந்து போகும், இந்த நிலையையும் தாண்டி முன்னேறுவோம் என்று உறுதியாக நம்பி முன்னேற்றப் பாதையை நோக்கி செல்ல வேண்டும். எளிமையாய் வாழ்ந்திட பழக வேண்டும். அத்துடன் யாரையும் உதாசீனப்படுத்தாமல் வாழ்வது மிகவும் முக்கியம்.

வாழ்க்கை கற்றுத்தரும் பாடத்தில் மிகவும் முக்கியமான ஒன்று சமூகத்தில் நாம் மட்டும் தனித்து வாழ முடியாது என்பதுதான். தனி மரம் தோப்பாகாது. அனைவருடனும் அனுசரித்து வாழ பழகுவது தான் நல்லது. அதற்காக அடிமையாக வாழ வேண்டிய அவசியம் இல்லை. தேவையில்லாதபோது பேசுவதும், தேவையான இடத்தில் மௌனம் காப்பதும் கூடாது.

நம் வாழ்க்கை நம் கையில் அதை வாழ்ந்து முடித்திடுவோம் இனிதே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com