வாழ்க்கையின் வேதனைகளே சாதனைகள்! 

Life's pains are achievements.
Life's pains are achievements.

நானும் வாழ்க்கையில் இதை செய்த பிறகு மகிழ்ச்சியாக இருக்கலாம், அதை செய்த பிறகு மகிழ்ச்சியாக இருக்கலாம் என பல விஷயங்களை முயன்று, அதில் சிலவற்றில் வெற்றி பெற்ற பிறகும் மனம் அடுத்தடுத்த இலக்குகளை நோக்கி பயணித்துக் கொண்டேதான் உள்ளது. நிலையாக நாம் நமது வாழ்க்கைக்கான அர்த்தத்தையும் இலக்கையும் எட்டிவிட்டோம் என்ற திருப்தி எதிலுமே எனக்குக் கிடைக்கவில்லை.

உதாரணத்திற்கு நான் யூடியூபில் மிகப்பெரிய இடத்தை அடைய வேண்டும் என்ற ஆசையுடன் காணொளிகள் பதிவிட ஆரம்பித்தேன். தொடக்கத்தில் என்னிடம் இருந்தது ஒரே ஒரு சாம்சங் ஸ்மார்ட்போன். அதைப் பயன்படுத்தியே தொடர்ச்சியாக காணொளிகள் பதிவேற்றி வந்தேன்.

காலம் செல்லச் செல்ல, நமது வீடியோவில் வெளிச்சம் சரியில்லை எனவே ஒரு லைட் வாங்கினால் சரியாகிவிடும் என நினைத்தேன்.

பின்னர் வீடியோ பேக்ரவுண்ட் சரியில்லை, அதற்காக ஒரு இடம் அமைத்தால் சரியாகிவிடும் என நினைத்து, காணொளி எடுப்பதற்காகவே வீட்டில் ஒரு நல்ல பேக்ரவுண்ட் இருக்கும் படியான இடத்தை ஏற்பாடு செய்தேன்.

அதன் பிறகு நம்முடைய கேமரா குவாலிட்டி சரியாக இல்லை என கேமரா வாங்கினேன்.

கேமராவே வாங்கிவிட்டோம் அப்படியே மைக்கும் வாங்கினால் நன்றாக இருக்கும் என மைக்கும் வாங்கினேன்.

அடுத்ததாக எல்லா வேலைகளையும் செல்போனிலேயே செய்வதற்கு கடினமாக உள்ளது, ஒரு கம்ப்யூட்டர் இருந்தால் அனைத்தையும் வேகமாக முடித்து விடலாம் என கம்ப்யூட்டர் வாங்கினேன்.

இதன் பிறகும் மனதின் அடுத்த இலக்கு நிற்கவில்லை. அடிக்கடி கரண்ட் கட் ஆவதால், சரியாக வேலை செய்ய முடியவில்லை என வீட்டுக்கு இன்வெர்ட்டர் வாங்கினேன்.

கம்ப்யூட்டரில் சாதாரண வேலை தான் செய்ய முடிகிறது வீடியோ எடிட் செய்ய முடியவில்லையே. ஒரு எடிட்டிங் லேப்டாப் இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்து லேப்டாப்பையும் வாங்கியாயிற்று.

இப்போது என்னிடம் வீடியோ எடுப்பதற்கு கேமரா உள்ளது,

தனியான இடம் உள்ளது,

நல்ல வெளிச்சம் உள்ளது,

மைக் செட் அப் உள்ளது,

கன்டென்ட் உருவாக்க கணினி உள்ளது,

கரண்ட் கட் ஆனாலும் இன்வெர்ட்டர் உள்ளது,

வீடியோ எடிட் செய்ய நல்ல தரமான லேப்டாப் உள்ளது.

ஆனால் ஒரே ஒரு செல்போன் வைத்திருக்கும் போதே தொடர்ச்சியாக காணொளிகள் பதிவேற்றி வந்த நான், தற்போது உயர்தர காணொளிகள் உருவாக்கும் அளவுக்கு என்னிடம் சாதனங்கள் இருந்தாலும், கடந்த சில மாதங்களாக வீடியோ எதுவும் பதிவேற்றவில்லை.

நானோ தற்போது ஒரு கன்டென்ட் ரைட்டர். இது எத்தனை காலம் வரை என்னுடைய இலக்காக இருக்கும் எனத் தெரியவில்லை. இது நடந்தால் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் என நான் நினைத்த விஷயங்கள் அனைத்திலுமே பல கடினங்கள் இருப்பதை உணர்ந்திருக்கிறேன்.

அன்று இன்ஜினியர், பின்னர் யூடியூபர், அப்படியே நடுவில் கொஞ்சம் பாட்காஸ்ட், பிளாகிங், இப்போது எழுத்தாளர் அடுத்தது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். சொல்ல முடியாது நான் இல்லாமலே கூட போகலாம்.

இப்படி நான் எதுவாக இருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும், எல்லாவற்றிலும் உழைத்து தான் ஆக வேண்டும். எல்லாமே கஷ்டமாகதான் உள்ளது. இதை வேதனை என நினைத்தால் நான் நிச்சயம் ஒரு இடத்தில் முடங்கிப்போவேன். இது சுவாரசியமாக இருக்கிறது என தொடர்ந்து எதையாவது முயற்சித்துக் கொண்டிருந்தால்,

"வாழ்க்கை எதையாவது ஒன்றை நோக்கி சுவாரஸ்யமாக பயணித்துக் கொண்டு தானே இருக்கும்."

வாழ்க்கையின் வேதனைகளே சாதனைகள்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com