
வானத்து நட்சத்திரங்களில் இருந்து வெளிப்படும் சக்தி வீணாகி விடுவதில்லை. அது மறு சுழற்சியில் மற்ற நட்சத்திரங்களின் அமைப்புப்பகுதியையே சென்றடைகிறது. உண்மையில் இந்தச் செயல்முறைக்குப் பலகோடி ஆண்டுகள் ஆகும்.
வானவெளியில்தான் என்றில்லை. இம்மண்மீது இறைவன் படைத்த எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கு இருக்கிறது.
''ஒவ்வொன்றும் இடைவிடாமல் மாறிக் கொண்டேயிருக்கிறது. அந்த மாற்றத்தில் ஒரு ஒழுங்கு இருக்கிறது"
தாவரங்களாகட்டும், விலங்குகளாகட்டும், மீன்கள். பறவைகள் என்று எதுவாகட்டும் மாற்றத்துக்குட்படாமல் எதுவுமேயில்லை. அவற்றின் பிறப்பில், வளர்ச்சியில் ஏன் இறப்பிலும் ஒரு செயல்முறை ஒழுங்கு இருக்கிறது.
மண்ணில் விழுகிற ஒரு விதை முளைப்பதிலிருந்து அதன் வாழ்க்கை ஆரம்பமாகிறது. அது செடியாய் படர்கிறது. மரமாய் கிளைக்கின்றது. வளர்ச்சியில் விரிவதும் மரணத்தில் சுருங்குவதும் வாழ்க்கை .ஆனால் ஒரு விந்தை,மண்ணில் விழுந்து படும் தாவரங்கள் மட்கி புதிதாய் எழுகின்ற தாவரங்கள் வாழ்வதற்கு உரமாகிறது.
உயிர்வாழ்கிற ஒவ்வொன்றும் தொடர்ந்து வாழ முயற்சிக்கும். அது ஒரு முடிவற்ற தேடல்" என்பார் சார்லஸ்டார்வின். ஒவ்வொரு வகை உயிரினமும் வளர்கிறது. மடிகிறது என்றாலும் அடுத்த தலைமுறை மாறிவிடும் சூழ்நிலையோடு பொருந்திக்கொள்வதற்கான பண்புக் கூறுகளை அவை விட்டுச்செல்லும். அதன் விளைவாகவே தொடர்ந்து வாழ்கிறவைகள் மிகுந்த பலத்தோடும், திறமையோடும் இருக்க முடிவது.
உயிர்களின் பரிணாம வளர்ச்சி பற்றி ஆராய்வது நம்முடைய நோக்கமல்ல. நம்முடைய அக்கறையெல்லாம் இங்கு மாற்றம் விடாமல் நிகழ்வது. அது மட்டுமே மாறாதது என்பதைச் கட்டுக்காட்டுவதுதான், நமது தலைமுறையில் அதை நாம் கவனிக்காமல் விட்டிருக்கலாம். மிகச்சிறிய மாற்றத்தைக் கண்டுணர பலதலைமுறைகள் ஆகலாம். ஆனாலும், மாற்றம் என்பது நிகழவே செய்கிறது.
நாம் இன்று நமது முன்னோர்களைவிட அதிக உயரத்துடன், ஆரோக்கியம் உடைய நவீன மனிதர்களாய் இருக்கிறோம். நமது மூதாதையரைவிட நம்முடைய உணவுப் பழக்கம் சிறப்பாயிருக்கிறது, அவர்களை விட நாம் நீண்ட ஆயுளைப் பெற்றிருக்கிறோம்.
"மாறிவரும் சூழ்நிலையோடு பொருத்திக்கொள்வதால் வரும் வளர்ச்சியிது."
நம்முடைய பரிணாம வளர்ச்சிக்கு இதுவொரு காரணம் என்றால் இன்னொரு காரணம் விரிவடைந்து வரும் அறிவு. நோய்கள், அவற்றின் விளைவுகள் பற்றி நாம் அதிகம் தெரிந்து கொண்டிருக்கிறோம். ஏற்ற சிகிச்சை முறைகளும் பெரிய அளவில் வந்தாயிற்று. இன்றைய மருத்துவமனைகள் சகலவசதி களோடும் பொருந்தியிருப்பதை பார்க்கிறோம்.
காரணங்கள் எதுவாயினும் மாற்றம் என்பது எங்கும் எதிலும் நிகழ்ந்து கொண்டுதானிருக்கிறது. இலட்சோபலட்சம் ஆண்டுகளாய் தொடரும் கதையிது. இது உலகம் உள்ளவரை தொடரும்.