
பிறவிக் குணத்தை மாற்ற முடியுமா, முடியாதா என்று கேள்வி கேட்டால் நிச்சயமாக மாற்றி அமைக்க முடியும். "ஐந்தில் வளையாதது ஐம்பதில் விளையுமா?, என்ற முது மொழிக் கருத்துக்கள் அந்நாளில் ஒரு செடியையோ, கொடியையோ அல்லது மரத்தையோ பார்த்துச் சொல்லியிருக்க வேண்டும். நிச்சயமாக மனிதர்களைச் சொல்லியிருந்தால் அது அர்த்தமற்றது. மனிதர்கள் ஆறு உணர்வு கொண்டவர்கள். இந்த ஆறு உணர்வு கொண்ட மனிதர்களின் மனம் ஐந்திலும் வளையும், ஐம்பதிலும் வளையும், நூறிலும் வளையும்.
காரணம் மனித மனம் மாறக்கூடியது. சூழ்நிலைகளுக்குட் பட்டது. அளவிட முடியாத ஆக்கபூர்வ ஆற்றல்மிக்கது. அதனுடைய ஆற்றல் செயல்பட்டுக் கொண்டேயிருக்கக் கூடியது. நிரம்பி வழியும் கூடியது. அதனுடைய செயல்பாட்டை தடுக்கவோ நிறுத்தவோ முடியாது. அத்தகைய ஆற்றல் மிக்க மனதை கொண்டுபோய் "தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்" என்று வெறுமனே கட்டிப்போட்டு வைக்கக் கூடாது. மனிதனின் பிறவிக் குணத்தை மாற்றி அமைக்க முடியும். எந்தக் குழந்தையின் எப்பேர்ப்பட்ட குணநலத்தையும் மாற்ற கண்டிப்பாக முடியும்.
பிறவிக் குணத்தோடு குழந்தையாக வந்த ஒருவர் அவர் தன் குழந்தைப் பருவத்திலிருந்தே அவரைச் சுற்றியுள்ள மற்றவர்களால், மற்றவர்களைக் கொண்டு மாற்றி அமைத்து, திரித்து அமைத்து உருவாக்கிக் கொடுக்கப்படுகின்ற, மற்றவர்களின் குணநலனை, குணங்களையும் கொண்டு வளர்கின்றனர். அதன் பிறகு அத்தகைய மனநலன்களோடு, குணநலன்களோடே வாழ ஆரம்பித்து அதன்படியே தங்கள் வாழ்க்கையை வாழ்கின்றனர். இதுதான் உண்மையான ஆக்கபூர்வமான உண்மை.
இறைவன் எந்த நல்ல குணத்தையோ தீய குணத்தையோ மனிதனுக்கு போடவில்லை. அப்படி இறைவன் செய்கின்றான் என்றால் இறைவன் போட்டதை மனிதனால் மாற்ற முடியாது. அப்படி இறைவன் போட்டதை மனிதன் மாற்றி அமைக்கிறான் என்றால் அவன் இறைவனுக்கு மேல் பல படிகள் உயர்ந்து விடுவான். அப்படி நடக்கவும் நடக்காது. மனிதனின் வாழ்க்கையில் நடக்கிற நல்லது கெட்டதுக்கு அவனே காரணமின்றி இறைவன் கிடையாது.