உங்கள் செயல்கள் உங்களுக்கு மகிழ்ச்சியை தரவில்லை என்றால் நீங்கள் வெற்றி பெற்றதாகக் கருதமுடியாது. செயல்களைத் துவங்கும்போதும், தொடர்ந்து செய்யும்போதும், அச்செயலினை முடிக்கும்போது மகிழ்ச்சியாக இருந்தால் உங்களின் செயல்திறன் மிகவும் அதிகமாகும். பயணத்தின் முடிவைவிட பயணமே முக்கியமானது என்று ஒரு சீன பழமொழி உண்டு.
ஒரு செயலை செய்து முடிக்க பல வருடம் உழைத்து இறுதியாக அந்த காரியத்தை சாதிக்கும்போது மகிழ்ச்சி ஏற்படுகிறது. இறுதியாக கிடைக்கும் இந்த மகிழ்ச்சியை விட பல வருடம் உழைக்கும் உழைப்பும் மகிழ்ச்சியாக இருக்குமேயானால், அந்த நீண்ட உழைப்பு இன்னும் மேன்மை பெற்றதாகி விடுகிறது.
ஒரு இலக்கை அடைவதையும் ஒரு செயலை செய்து முடிப்பதையும் வெற்றியாக கருதுகிறோம். வெற்றியினை பல வழிகளில் அடைய முடியும். வெற்றிக்கான செயல்முறைகள் மனதிற்கு நிறைவையும் மகிழ்ச்சியையும் தருமேயானால் வெற்றிக்கான வாய்ப்பு அதிகரித்து விடும். செயலின் வேகம் அதிகரிக்கும். அர்ப்பணிப்பும் ஈடுபாடும் உயரும். மகிழ்ச்சியாக செயல்படும்போது நாம் சந்திக்கும் எதிர்ப்புகளின் வீரியம் குறையும். மனம் இதமாக இருக்கும்போது குணம் சிறப்படையும். நற்பழக்கங்கள் கூட வரும். முகம் தொடர்ந்து புன்னகை பூக்கும். உதட்டில் இருந்து நல்ல வார்த்தைகள் வெளிவரும். மனதின் எண்ணங்களும் சிறந்து விளங்கும். எனவே மகிழ்ச்சியாக செயலாற்றுவதை பழக்கமாக்குங்கள்.
இலக்கை நோக்கிய பயணமே உங்களின் வாழ்க்கை எந்த திசையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை வெளிப்படுத்தும். அந்த பயணம் மகிழ்ச்சியாக இருக்கும்போது வாழ்க்கையே ஒரு இன்பப் பயணமாக மாறும். கடினமான செயல்களை மகிழ்ச்சியாக செய்யும்போது மொத்த செயல் திறனும் மேம்படும். மகிழ்ச்சியாக செயல்களை செய்வதும் மகிழ்ச்சியற்ற செயல்களை செய்வதும் மனம் ஏற்படுத்தும் தேர்வே. மகிழ்ச்சியாக செயலாற்ற வேண்டும் என்று உறுதியுடன் செயல்படும்போது மொத்த சூழலும் நெகிழ்ச்சி உடையதாகிறது. மற்றவர்களும் நம்முடன் இசைந்து இணைந்து செயல்படத் துவங்குவர்.
வெற்றியாளர்கள் தங்கள் செயல்களை மகிழ்வுடனும் துடிப்புடனும் மேற்கொள்கின்றனர். மகிழ்ச்சி உள்ளபோது தோல்விகள் இவர்களை கலங்கடிப்பது இல்லை. தங்கள் செயல்களில் முனைப்புடன் தொடர்ந்து ஈடுபடுகின்றனர். வெற்றிகரமாகச் செயல்களை செய்து முடிக்க தேவையான பல பண்புகளில் மகிழ்ச்சியுடன் செயலாற்றுதல் மிகவும் முக்கியமானது. நல்வாழ்வு என்ற ரகசியமும் இதுதான். மகிழ்ச்சி பழக்கமாகும்போது செயல்திறன் அதிகரித்தும் விடுகிறது.
"நீங்கள் நேசிக்கும் வேலையை தேர்ந்தெடுத்து செய்தால் உங்கள் வாழ்க்கையில் ஒரு நாள் கூட நீங்கள் வேலை செய்ய வேண்டியதில்லை" என்ற கன்பியூசியஸின் கொள்கைப்படி செயல்பட்டால் வேலை என்ற வார்த்தைக்கு வேலையே இல்லாமல் போய்விடும்.