இளமையாக இருக்கும்போது பின்னாளில் எப்படி இருக்க வேண்டும் என்று நிறைய கனவுகள் இருக்கும். 18ல் இருந்த கனவெல்லாம் 30 வயதில் வறண்டுபோய் எதையும் சாதிக்க வேண்டாம், இருப்பதை பிடுங்கிக் கொள்ளாமல் இருந்தால் சரி என்று தோன்றிவிடும். வயது ஏற ஏற கனவுகளை கையகப்படுத்தும் தைரியமின்றி கோழையாகி விடுவீர்கள். அவை நிறைவேறுமா, நிறைவேறாதா என்ற சந்தேகத்தினால் உங்கள் முயற்சிகள் முழுமையாக இருப்பதில்லை.
ஒரு ஜென்குரு தன் சீடனை அழைத்து தான் குளிப்பதற்கு தொட்டியில் தண்ணீர் நிரப்பச் சொன்னார். தண்ணீரை இறைத்து சீடன் மர வாளிகளில் நிரப்பி தொட்டியில் கொட்டினான். வாளியில் அடியில் மிச்சமிருந்த நீரை கீழே வீசிவிட்டு அடுத்த வாளி தண்ணீரைக் கொண்டு வர கிணற்றடிக்குப் போனான். உடனே குரு ஒரு பிரம்பை எடுத்து அவனை நன்றாக அடித்து "எதற்காக தண்ணீரை கீழே கொட்டினாய். அதை செடிக்காவது ஊற்றியிருக்கலாமே" என்றார்.
உடனே சீடன் "இந்த ஒரு டம்பளர் தண்ணீர் ஊற்றுவதால் செடி வானம் வரை வளர்ந்து விடப் போகிறதா" என்றான்.
அதற்கு அவர் "முட்டாளே, உன் வளர்ச்சிக்காக சொன்னேன். அரைத் துளியானாலும் அதைக் கேவலமாக நினைக்காமல், அதற்கு மதிப்பு கொடுத்து வீணாக்காமல் இருந்தால்தான் நீ வளர முடியும்" என்றார்.
உங்கள் கனவு நனவாக வேண்டுமென்றால், மிகச் சிறிய சந்தர்ப்பத்தை கூட அலட்சியம் செய்யாமல் பயன்படுத்திக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். கனவுக்கு உரம் போட்டு வளர்த்து சாதனையாக்கிக் கொள்ளத் தெரிந்தவர்கள்தான் வாழ்கிறார்கள். மற்றவர்கள் இந்த உலகில் சும்மா வசிக்கிறார்கள். ஒரு தலைமுறையே கனவு காண்பதை நிறுத்திவிட்டால் சமூகத்தில் என்ன அற்புதங்கள் நடத்தப்பட்டாலும் அவை எல்லா வீண்தான். வாழ்க்கையை ரசிக்கத் தெரியாமல் வறண்டு விட்டவர்களுக்கு எதைக் கொடுத்தாலும் அர்த்தமில்லை. தீவிரமான வளர்ச்சிக்கான கனவுகள் காண ஆசை வேண்டும்.
உங்கள் கனவை நனவாக்கிக் கொள்ள முழுமையாக உழைத்தால் ஆச்சர்யமான உயரங்களைத் தொட முடியும்.
ரஷ்யாவில் பாலே நடனம் பிரபலம். பாலே நடனத்திற்காக தன்னையே அர்ப்பணித்தவர் லின்கின்ஸ்கீ என்ற கலைஞர். அவர் பங்கு பெறும் நிகழ்ச்சிகளில் சுழன்று ஆடித் துள்ளி குதிப்பார். புவியீர்ப்பு விசை எல்லோர்க்கும் பொதுவானதுதான். ஆனால் அவர் நடனத்தில் துள்ளிக் குதிக்கும்போது அசாதாரண உயரங்களுக்குப் போவதைப் பார்த்து பலரும் வியந்திருக்கிறார்கள்.
இதைப்பற்றி அவரிடம் கேட்டபோது அவர் "என்னால் முடியுமா என்று நான் யோசிக்காத தருணங்களில் என்னையும் மீறிய ஒரு சக்தியோடு செயல்படுவதை உணர்கிறேன்" என்றாராம். அவர் கூறியது போல் முழு முயற்சி செய்யும்போது உங்களையும் மீறியதொரு சக்தி பிறக்கும். உங்கள் கனவை நனவாக்க என்ன செய்ய வேண்டும். முதலில் 5 வருடங்களில் நீங்கள் என்ன சாதிக்க நினைக்கிறீர்கள் என்று தீர்மானியுங்கள்.அதை நோக்கி திட்டமிட்டு அடியெடுத்து வையுங்கள். ஒவ்வொரு 5 வருடங்களிலும் உங்கள் கனவு விரிவடைந்து கொண்டே போகட்டும்.
உச்சியை அடைய நினைத்தால் ஏறித்தான் ஆகவேண்டும். கால்கள் வலிக்கும். களைப்பாகும். இதெல்லாம் உனக்கு சாத்தியமில்லை என்று மனம் அச்சுறுத்திப் பார்க்கும். ஓய்வெடுத்துக்கொள் என்று சபலம் காட்டும். தளராதீர்கள். செய்வதை முழுமையான விருப்பத்துடன் செய்தால் எந்த வலியும் வேதனை தராது. உச்சியை அடைந்ததும் அத்தனை களைப்பும் சுகமாகும்.