
வாழ்வு வளம் பெற, கிடைத்த வாழ்க்கையை சுவைபட வாழ்வதும், பிறருக்கு இயன்றவரை உதவி செய்வதும் சிறந்தது. வாழ்வை சிக்கலாகிக்கொள்ளாமல் சுவாரசியமாக எடுத்துச் செல்ல முயற்சித்தால் வாழ்வில் ஜெயித்து விடலாம். வாழ்க்கை என்பது மிகவும் அழகானது. வாழ்வில் எதுவுமே நிரந்தரம் இல்லை. இருப்பதைக் கொண்டு நிறைவாக மன உறுதியுடன், மகிழ்ச்சியுடன் இருப்பதே சிறந்தது.
வாழ்வு வளம் பெற நல்ல சிந்தனை தேவை. நம் எண்ணம் போல் வாழ்க்கை அமையும். நம் வாழ்வு சிறப்பாக அமைய திறமை மட்டும் இருந்தால் போதாது. நல்ல சிந்தனையும், நல்ல எண்ணங்களும் தேவை.
செடி கொடிகள் வளர எப்படி நல்ல மண்ணும், உரமும் தேவையோ அது போல் நம் வாழ்வு வளம் பெற நல்ல எண்ணங்கள் தேவை. நம்மைப் பற்றி மற்றவர்கள் என்ன எண்ணுவார்கள் என்று தேவையற்று சிந்திப்பதை விட நம் வளர்ச்சிக்கான பாதையை நோக்கி சிந்தித்து செயல்பட வேண்டும். மற்றவர்களுக்காக வாழ்வதோ, மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டு பார்ப்பதோ மன நிம்மதியைை, சந்தோஷத்தைத் தராது.
வாழ்வில் நேர்மறை எண்ணங்கள் மிகவும் அவசியம். எதிர்ப்படும் தோல்விகளை எந்தவித மன உளைச்சலும் இன்றி இயல்பாக கடந்து செல்ல வேண்டும். நமக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அந்த வழியில் எந்த வித தயக்கமும் இன்றி முன்னேறி கொண்டே இருக்க வேண்டும்.
வாழ்வில் ஜெயிக்கும் வரை பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். அப்பொழுதுதான் வாழ்வில் ஜெயித்த பிறகு நம் பேச்சை மற்றவர்கள் கூர்ந்து கவனிப்பார்கள். நம் மதிப்பும் உயரும். நம் வாழ்க்கையை யாருக்கும் நிரூபிப்பதற்கான அவசியம் இல்லை. நம்மை குற்றம் காண்பவர்களுக்காக நம் வாழ்க்கையை அடமானம் வைக்காமல் நமக்காகவும், நம்மைச் சுற்றியுள்ள நல்ல உள்ளங்களுக்காகவும் உழைப்பதும், சுவைபட வாழ்வதும் வாழ்வில் வளம் பெற உதவும். வாழ்வில் எத்தனை முறை கீழே விழுந்தாலும் கவலைப்படாமல் மீண்டும் மீண்டும் எழுவதே ஜெயிப்பதற்கான வழி.
வாழ்வில் வளம் பெற முக்கியமாக நாம் செய்ய வேண்டியவை பொய்யர்களுடனும், பொறாமை கொள்பவர்களுடனும் தோழமை கொள்வதை தவிர்க்க வேண்டும். அத்துடன் பொறுமை, அன்பு, அறிவு, சாந்தமான குணம் ஆகிய நான்கு சிறந்த அணிகலன்களை ஆபரணங்களாக அணிந்து செயலாற்ற வேண்டும். சோம்பல், தேவையற்ற பேச்சு, அதிக தூக்கம் ஆகியவற்றை குறைக்க வேண்டும்.
வாழ்வில் செழிப்பும் வளமும் பெற முதலில் தெளிவான இலக்குகளை அமைத்துக் கொள்ள வேண்டும். அதனை குறுகிய கால மற்றும் நீண்ட கால இலக்குகளாக பிரித்து செயல்படுவது அவசியம். வலுவான உறவுகளையும், சிறப்பான தகவல் தொடர்புகளையும் அமைத்துக் கொள்வதுடன், மன அழுத்தமின்றி, தேவையற்ற மனச்சிக்கலின்றி இருக்க தியானம் போன்ற மன அழுத்த மேலாண்மை நுட்பங்களை பயிற்சி பெறுவது உடல் ஆரோக்கியத்தை பேண மிகவும் அவசியம். உடல் நலத்தையும், உள்ள நலத்தையும் பேணி காப்பது வாழ்வில் வளம் பெற மிகவும் இன்றிமையாதது.