

அனுபவமும் நினைவுகளும் சேர்ந்தது தான் வாழ்க்கை. அந்த அனுபவமும் நினைவுகளும் அசைபோடும் போது இன்பத்தை, சுகத்தை அமைதியைப் பெருமிதத்தைத் தருகிறதா அல்லது சோகத்தை, துக்கத்தை, குற்றயுனர்ச்சியை, சுமையாக அமைகிறதா? இதனைப் பொறுத்துத் தான் நமது வாழ்வு நிறைவானதா குறைகளுடன் தொடர்கிறதா என்பதை நிர்ணயிக்க முடியும்.
நிறையும் குறையும் சேர்ந்ததுதான் வாழ்க்கை. அது யாருக்கும் முழு நிறைவோ, முழுவதும் குறைவானதாகவோ அமைந்துவிடுவதில்லை.
குணம் நாடி குற்றம் நாடி அதில் மிகை
நாடி மிக்க கொளல்
என்ற வள்ளுவன் சொல்லுக்கு ஏற்ப, மிகுவதை ஏற்பதே சரி.
நாட்கள் என்பது வாழ்க்கை நமக்கு அளித்திருக்கும் கொடை. எவ்வளவு என்ற கணக்கு யாருக்கும் தெரியாது. கிடைத்த நாட்களை நாம் எப்படி எதனால் நிரப்புகிறோம் என்பதே நமக்கான கேள்வி .
நமக்கோ பிறருக்கோ நாம் சார்ந்து இயங்கும் தொழிலுக்கோ, சமூகத்துக்கோ பயன் தரும் வகையில் அமைத்துக் கொள்கிறோம் என்றால் அது மேம்பட்ட, நன்மை பயக்கும், மாற்றத்தை ஏற்படுத்தும் வாழ்க்கையாக அமையும் (social good).
அதில் பயனடைந்த சிலருக்காவது அத்தகைய செயல்கள் நன்மையைப் பயக்கும். அது காலம் கடந்தும் நினைவில் நிற்கும். அந்தச் செயல் சிலரைத் தாண்டி பலரை, சமூகத்தை நல்வழியில் பாதிக்கும் போது பேசப்படும் வரலாறாகவும் ஆகி நிற்கும். சமூகத்தில் மாற்றங்கள் எப்போதும் புரட்சியாக வெடிப்பதில்லை. ஆனால் அடிக்க அடிக்க அம்மியும் நகரும் நிகழ்வுகளால் தான் ஏற்படுகிறது.
நித்திய தேவைகள் கடமைகள் செயல்கள் எல்லாம் ஒவ்வொருவரின் வாழ்விலும் கணிசமான நேரத்தை எடுத்துக்கொள்கிறது. அதனை தாண்டி மிச்ச சொச்ச நேரத்தில் சில மேம்படுத்தக்கூடிய செயல்களில் ஈடுபடுவது அவசியம். அவை நம்மிலும் சமூகத்திலும் சிறு அசைவை, மாற்றத்தை மெதுவாகவாவது நிச்சயம் ஏற்படுத்தும். அதன் பயன்கள் உடனுக்குடன் தெரியாவிட்டாலும் காலப்போக்கில் உணர்ந்தியே தீரும்.
பெரிதாக யோசித்து நாட்டுக்கு சுதந்திரம் எல்லாம் நீங்கள் வாங்கித்தர வேண்டாம். அதையெல்லாம் நாம் பெற்றுவிட்டோம். சிறு சிறு முன்னெடுப்புகள் இருந்தால், மற்றவர்களை புன்சிரிப்பால் எதிர்கொண்டால், நம் செயல்கள் அவர்களுக்கு ஆறுதலை தந்தால் போதுமானது.
அழைத்தவர்களின் வீட்டு விஷேஷத்திற்கு போகிறீர்கள். வழக்கமாக நாம் செய்வது போல சென்றிருந்து, வாழ்த்தி சாப்பிட்டுவிட்டு, பரிசை அளித்துவிட்டு வருவது என்பது நிகழ்வு. அதே சமயத்தில் அவர்களுக்கு தேவைப்படும் ஒரு வேலையை செய்து, பொறுப்பை ஏற்று, செயல்பட்டால் நமக்கும் அவர்களுக்கும் அது நிறைவையும் நல்ல நினைவுகளையும் தரும். நெருங்கியவர்களுக்கு தான் இதை செய்ய வேண்டும் என்பதில்லை.
இதை செய்துவிட்டாலே நாம் நெருங்கியவர்கள் ஆகி விடுவோம். இப்படிப் பட்ட சிறு சிறு நல்ல செயல்களின் தொகுப்பே நம் வாழ்கையை மேம்படுத்தும்.
ஆறுதல் சொல்லப் போகிறோம் என்றால், துக்கத்தை கிளறாமல், அவர்களது சோகத்தின் வடிகாலாக, தோள் கொடுத்து நிற்கும் போது மிகுந்த நன்மையை விதைக்கும். அந்த துக்க சோக நினைவுகளில் அவர்கள் மூழ்கியிருக்கும்போது அவர்களால் செய்ய இயலாத மறந்து போன, செய்யத் தவறிய செயல்களில் நாம் நம்மை ஈடுபத்திக் கொள்ளலாம். அப்படி செய்தால், பயன் பெற்றவர் நினைவுகளில் நாம் நிலைத்து நிற்போம். அவருக்கு துணை நின்றோம் என்பதை விட நாமே நமது வாழ்வை உயர்த்திக் கொண்டோம் என்று பெருமைப்படலாம்.
அறிந்தவருக்கு, தெரிந்தவருக்கு தான் நமது உதவி நற்செயல்கள் அவசியம் என்பதில்லை. தேவைப்பட்டவர்கள் எல்லோருக்கும் நம்மால் முடிந்தவற்றை செய்யலாம். அது வார்த்தைகளாக இருக்கலாம், பொருள்களாக இருக்கலாம், அவசியமான தேவையாகவும் இருக்கலாம். நம் பார்வையை கடந்து அவர்களுக்கு என்ன அப்போதைய தேவை, அவசியம் என்பதை உணர்ந்து அதை நம்மால் செய்ய முடிந்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும். கொடை வள்ளலாக இருக்க வேண்டிய அவசியமில்லை, சமயங்களில் குடைப் பிடித்து நின்றாலே போதுமானது. அக்குடை அவர்களையும் நம்மையும் காக்கும் என்பதில் ஐயமில்லை.
நமது நாட்குறிப்பு, சம்பவங்களின் தொகுப்பாகாமல், சாதித்ததின் நினைவு குறிப்பாக இருக்குமென்றால், நிச்சயமாக நாம் வாழ்ந்த வாழ்க்கை அர்த்தம் உடையதாக நிலைத்து நிற்கும்.
நினைவுகளால் செயல்களால் நம் வாழ்வை நமக்கும் பிறருக்கும் சேமிக்கிறோமா அல்லது வெறும் நிகழ்வுகளால கடத்தி அதை வீணாக்கிக் கொண்டிருக்கிறோமா என்பது நம் செயல்களின் மூலம் வெளிப்படும். நமது பொறுப்பாகவே அதனை ஆக்கிக்கொண்டால் நாம் நிறைந்த வாழ்வை வாழ்ந்ததாக நமக்கும் பிறருக்கும் அது நினைவில் நிற்கும். நமது காலம் கடந்துவிட்டாலும் நாம் அவர்களது நினைவில் அமரராவோம்.