வித்தியாசமாக சிந்திப்பவர்களே வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள். ஒரு விஷயத்தை வித்தியாசமாக யோசிப்பது செய்வது எழுதுவது பேசுவது என்பது நிலைத்த வெற்றிக்கு மிக முக்கியமானது.
புதிய முறையில் ஒரு விஷயத்தை முயற்சி செய்வதை பலரும் ரிஸ்க்கான விஷயம் என்று ஒதுங்குவார்கள். ஒரு சிலர் மட்டும் துணிந்து அதிலுள்ள வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டு தங்களுடைய வெற்றியை அடைய முயற்சிப்பார்கள். இவர்களே பெரிய சாதனையாளர்களாக மாறியிருக்கிறார்கள்.
வித்தியாசமான முயற்சி என்கிற திறமையை நாம் சின்ன வயசிலிருந்து நமக்குள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
சிறுவயதில் நம் குழந்தைகள் ஒரு விஷயத்தை வித்தியாசமாக யோசிக்கிறது என்றால் அவர்களை தவறு என சொல்லாமல் மேலும் உற்சாகப்படுத்த வேண்டும். வித்யாசமாக சிந்திப்பவர்கள் சாதனையாளர்களாக மாறமுடியும் என்பதற்கு வரலாற்றில் நிறைய உதாரணங்கள் உள்ளன.
அப்படி படித்ததில் பிடித்த ஒரு சாதனை வரலாறு இங்கு. வித்தியாசமான பொருட்களுக்கும் புதிய ஆராய்ச்சி களுக்கும் முக்கியத்துவம் தரக்கூடிய நிறுவனம்தான் த்ரீ எம். இதில் பணிசெய்யும் டாக்டர் ஸ்பென்சர் சில்வர் என்பவர் இரும்பு முதல் பிளாஸ்டிக்வரை அனைத்தையும் ஒட்டும் நவீன கம் ஒன்றை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். பல ஆண்டுகளாக பல ஆயிரம் டாலர்கள் செலவு செய்து செய்த ஆராய்ச்சி முடிவில் அவர் கண்டுபிடித்த பசை எதையுமே ஒட்டவில்லை. பேப்பரை கூட பேப்பருடன் ஒட்ட வைக்க முடியவில்லை. வெறும் காகிதமே ஒட்டாத நிலையில் மற்ற பொருட்களை எப்படி ஒட்ட முடியும்?
1968 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இந்த பசை கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் சொந்த முயற்சியில் பல ஆராய்ச்சிகளில் பயன்படுத்தி மிகவும் வருத்தத்துடன் தான் கண்டுபிடித்த பொருள் உபயோகத்திற்கு வரவில்லையே தன்னால் கம்பெனிக்கு இத்தனை ஆண்டுகளும் பல ஆயிரம் டாலர்களும் நஷ்டம் ஆயிற்றே என்று அவர் நினைத்து மனம் வேதனைப்படுகிறார்.
வாராவாரம் சர்ச்சுக்கு போகும் அவரது போகும்போது ஒரு விஷயத்தை அவர் கவனிக்கிறார் சர்ச்சில் பாட்டு பாடும்போது எந்தெந்த பாட்டு பாடவேண்டும் என்பதற்காக பாட்டு புத்தகத்தின் நடுவே சிறு துண்டு பேப்பரை வைப்பதைப் பார்க்கிறார். அப்போதுதான் ஸ்பென்சருக்கு பொரி தட்டுகிறது. உடனே கொஞ்ச நேரம் மட்டும் ஒட்டும் தனது பசையை பயன்படுத்தி பாட்டு புத்தகங்கள் நடுவே வைக்கப்படும் பேப்பர்களை ஒட்டுகிறார். இப்போது பாடும்போது பாட்டு எங்கே இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க வசதியாக இருந்தது. பின் அந்த பேப்பரை எளிதாக எடுத்து விடவும் முடிந்தது.
இதை அவருடைய கம்பெனிக்கு எடுத்து சொல்கிறார். அதன் பின்னான முயற்சிகள் இதற்கு பெரும் வரவேற்பைத் தந்தது. ஸ்டேஷனரி கடைகளில் மஞ்சள் கலரில் குட்டி குட்டி ஸ்டிக்கர் போல இருக்கும் போஸ்ட் இட் பேப்பர்கள்தான் இப்போது இந்த த்ரீ எம் ப்ராடக்ட் கம்பெனிக்கு பல மில்லியன் டாலர்களை வருமானமாக ஈட்டிக் கொண்டிருக்கிறது.
இது ஒரு உதாரணம்தான். வித்யாசமான முயற்சிகளுக்கு என்றும் தோல்வி இல்லை. காலம் கடந்தும் வெற்றி கிடைக்கும் என்பதையே இதிலிருந்து அறியலாம்.