சாதாரண நபரையும் சிறப்பாக மாற்றும் 3 மனநிலைகள்!

Motivation Image
Motivation Image

சாதாரண மக்களும் எப்படி பணக்காரர்களாக மாறலாம் என்பதற்கான உத்திகள் பற்றி நாம் பல விஷயங்களைக் கேள்விப்பட்டிருப்போம். அதில் பெரும்பாலானவை சேமிப்பு, முதலீடுகள், வரவு செலவுத் திட்டங்கள் மற்றும் அதிகம் சம்பாதிக்க கடின உழைப்பு தேவை போன்ற வற்றையே பலரும் கூறுவார்கள். ஆனால் சாதாரண மனிதர்களையும் பணக்காரர்களாக மாற்றுவதில் மனநிலையின் பங்கு அதிகமாகும். அதாவது ஒருவர் பணக்காரராக மாற வேண்டும் என மனநிலையை மாற்றி செயல்பட்டால் மட்டுமே, அதற்குரிய இலக்குகளை அடைய முடியும். 

எனவே, இந்த பதிவில் ஒருவரை பணக்காரர்களாக மாற்றும் 3 மனநிலைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

1. Comfort Zone உள்ளேயே இருந்து வேலை செய்யுங்கள்.

வாழ்க்கையில் சாதிக்க உங்களுடைய கம்போர்ட் சோனை விட்டு வெளியே வாருங்கள் என்றுதான் பலர் கூறுவார்கள். ஆனால் ஒரு சாதாரண வாழ்க்கை வாழும் நபர் அவ்வளவு எளிதில் அந்த நிலையிலிருந்து வெளிவந்து புதிய விஷயங்களைத் தொடங்க முடியாது. அதேநேரம் பெரும்பாலான ஏழைகள் ஒரே விஷயத்தையே மீண்டும் மீண்டும் செய்வதால் வாழ்வில் எந்த முன்னேற்றமும் இன்றி ஏழையாக இருக்கிறார்கள். ஆனால் இதை காரணமாக வைத்துக்கொண்டு எதைப் பற்றியும் சிந்திக்காமல் வேலையை விட்டுவிட்டு, சொந்தமாக தொழில் தொடங்கி சாதித்துக் காட்டவேண்டும் என்ற அவசியம் இல்லை. இருக்கிற இடத்தில் இருந்துகொண்டே, செய்யும் வேலையை செய்து கொண்டே கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் விஷயங்களில் முயற்சிக்கலாம். கண்ணை மூடிக்கொண்டு ரிஸ்க் எடுக்காமல், அனைத்தையும் அலசி ஆராய்ந்து கால்குலேட்டட் ரிஸ்க் எடுப்பது சிறந்தது.

2. சுற்றுச்சூழல் வடிவமையுங்கள்.

நீங்கள் வாழ்க்கையில் பணக்காரராக வேண்டுமென்றால் முதலில் உங்கள் சுற்றுச்சூழலை சிறப்பாக வடிவமியுங்கள். குறிப்பாக நீங்கள் எங்கு வாழ்கிறீர்களோ அதைப்போன்றுதான் உங்களுடைய நிதிநிலைமை இருக்கும். சாதாரண ஒரு நபர், செலவு அதிகமாகும் நகர்ப்புறத்தில் வாழ்வதால் ஒருபோதும் சாதிக்க முடியாது. எனவே முதலில் உங்களுடைய வருவாய்க்கு ஏற்ற இடத்தில் வசிக்க கற்றுக் கொள்ளுங்கள். அடுத்ததாக நீங்கள் யாருடன் பழகுகிறீர்கள், வேலை செய்கிறீர்கள் என்பதை சரியாகத் தேர்வு செய்யுங்கள். தவறான நபர்களுடன் ஒருபோதும் கூட்டு சேர்ந்து எந்த செயலிலும் ஈடுபடாதீர்கள். இறுதியாக உங்களுக்கான சரியான நபரைத் தேர்வு செய்து திருமணம் செய்து கொள்ளுங்கள். உங்களுடைய சுற்றுச்சூழல் என்பது பெரும்பாலும், வாழும் இடம், பழகும் நபர்கள், வாழ்க்கைத் துணை இவை மூன்றை அடிப்படையாகக் கொண்டே இருக்கும் என்பதால், இவற்றை சரியாக தேர்வு செய்து அமைத்துக் கொள்வது நல்லது.

இதையும் படியுங்கள்:
பச்சை வெங்காயத்தின் மருத்துவ குணங்கள் இத்தனையா?
Motivation Image

3. செலவு செய்யும்போது 80 சதவீதம் சிந்தியுங்கள்.

பெரும்பாலான ஏழைகள் எப்போதும் ஏழையாகவே இருப்பதற்கு அவர்கள் எப்படி செலவு செய்கிறார்கள் என்பதில் கவனம் செலுத்தாமல் இருப்பதால்தான். ஏதாவது விலை உயர்ந்த எலக்ட்ரானிக் பொருட்களோ, உடைகளோ, காரோ, பர்னிச்சர்களோ வாங்க நினைக்கும்போது, அந்த விஷயம் எந்தெந்த வகையில் உங்களுக்கு பயன்படப்போகிறது என்பதை ஆழமாக சிந்தித்து வாங்குங்கள். ஒருவேளை பிறரிடம் நம்மை சிறப்பாகக் காட்டுவதற்காக அதை வாங்குகிறீர்கள் என்றால், அதுபோன்ற பொருட்களை வாங்காமல் இருப்பதே நல்லது. பணக்காரர்களுக்கு பணம் ஈட்டுவது எளிது, ஆனால் செலவு செய்வது கஷ்டம் என்பார்கள். எவன் ஒருவன் செலவு செய்ய கஷ்டப்படுகிறானோ அவனால் மட்டுமே கொஞ்சம் கொஞ்சமாக தன் நிதி நிலையை உயர்த்த முடியும். 

இந்த மூன்று மனநிலைகளை நீங்கள் சரியாகப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு செயல்பட்டாலே, வாழ்க்கையில் நிச்சயம் சாதிக்க முடியும். நீங்களும் ஒரு நாள் பணக்காரன் ஆவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரிக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com