

நாம் சிலரைச் சந்தித்த சில நிமிடங்களிலேயே அவர்களைப் பிடித்துவிடும். ஆனால், சிலரிடம் எவ்வளவு நேரம் பேசினாலும் ஒரு ஒட்டுதல் இருக்காது. ஏன் இப்படி நடக்கிறது என்று யோசித்திருக்கிறீர்களா? உளவியலின்படி, மக்கள் தங்களைப் போலவே இருக்கும் நபர்களைத்தான் அதிகம் விரும்புகிறார்கள். இந்த உளவியல் உண்மையை அடிப்படையாகக் வைத்து, எதிரில் இருப்பவரை நமக்குத் தெரியாமலேயே ஈர்க்கும் ஒரு அற்புதமான கலையைத்தான் 'மிரரிங்' (Mirroring) என்று உளவியலாளர்கள் சொல்கின்றனர்.
அது என்னது 'மிரரிங்'?
பெயரிலேயே இதற்கான அர்த்தம் இருக்கிறது. 'கண்ணாடி' (Mirror) எப்படி நம் பிம்பத்தை அப்படியே பிரதிபலிக்கிறதோ, அதேபோல் நாமும் எதிரில் இருப்பவரின் செய்கைகளை, பேச்சுவழக்கை, உடல்மொழியைப் பிரதிபலிப்பதுதான் மிரரிங். இரண்டு நெருங்கிய நண்பர்கள் அல்லது காதலர்களைக் கவனித்துப் பாருங்கள். அவர்கள் அறியாமலேயே ஒரே மாதிரியாக உட்கார்ந்திருப்பார்கள், ஒரே நேரத்தில் கையை அசைப்பார்கள், ஒரே மாதிரியான வார்த்தைகளைப் பயன்படுத்துவார்கள். இதை நாம் செயற்கையாக, செய்வதன் மூலம் அறிமுகமில்லாத ஒருவரைக் கூட நம் நண்பராக்க முடியும்.
உடல்மொழியில் மிரரிங்!
ஒருவர் உங்களிடம் பேசும்போது காலின் மேல் கால் போட்டு உட்கார்ந்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். நீங்களும் அதேபோல உட்காரும்போது, அவர் ஆழ்மனதில் "இவன் என்னைப் போலவே இருக்கிறான், இவன் பாதுகாப்பானவன்" என்ற எண்ணம் உருவாகிறது. அதேபோல் அவர்கள் முன்னோக்கிச் சாய்ந்து பேசினால், நீங்களும் சாயலாம். அவர்கள் கைகளை அசைத்துப் பேசினால், நீங்களும் பேசும்போது அதே பாணியைக் கடைப்பிடிக்கலாம். இது ஒரு மிகச் சிறந்த பிணைப்பை உருவாக்கும்.
குரல் மற்றும் வார்த்தைகள்!
உடல்மொழி மட்டுமல்ல, குரலையும் மிரரிங் செய்யலாம். எதிரில் இருப்பவர் மெதுவாக, நிதானமாகப் பேசுகிறவர் என்றால், நீங்கள் மட்டும் படபடவெனப் பேசினால் அவருக்குப் பிடிக்காது. நீங்களும் உங்கள் வேகத்தைக் குறைத்துப் பேச வேண்டும். அவர்கள் உற்சாகமாகப் பேசினால், நீங்களும் அந்த உற்சாகத்தைக் காட்ட வேண்டும். மேலும், அவர்கள் அடிக்கடி பயன்படுத்தும் சில வார்த்தைகளைக் கவனித்து, அதே வார்த்தைகளை நீங்களும் உங்கள் பேச்சில் பயன்படுத்தும்போது, அவர்கள் உங்களை தங்களில் ஒருவராக உணர ஆரம்பிப்பார்கள்.
எச்சரிக்கை!
இந்த வித்தையில் மிக முக்கியமான விஷயம் 'நேர்த்தியாக' செய்வது. அவர் மூக்கைத்தொட்டால், உடனே நீங்களும் மூக்கைத்தொட்டால் அது அவரைக் கிண்டல் செய்வது போலாகிவிடும். அவர் ஒரு செயலைச் செய்த சில வினாடிகள் கழித்து அல்லது மெதுவாக நீங்களும் அதைச் செய்யவேண்டும். இது இயற்கையாக நடக்க வேண்டும். அவர்கள் கண்டுபிடித்துவிட்டால், அது மிகப்பெரிய எதிர்மறை விளைவை ஏற்படுத்திவிடும். எனவே, இதை ஒரு கலையாகப் பயிலவேண்டும்.
எதிரில் இருப்பவரின் உடல்மொழி மற்றும் பேச்சுக்கு ஏற்ப உங்களை நீங்கள் மாற்றிக்கொள்ளும்போது, உலகம் உங்களை ரசிக்கத் தொடங்கும். உங்களைப் போலவே இருக்கும் ஒருவரை உங்களுக்குப் பிடிக்காமல் போகாது என்பதுதான் இதன் அடிப்படை உளவியல்.