
இன்றைய நவீன உலகில், இந்தியாவைத் தாண்டி, உலகம் முழுவதும் இருக்கும் இளைஞர்கள் மூட் அவுட் (Mood out) என்ற வலையில் சிக்குவது சர்வசாதாரணம் ஆகிவிட்டது. அதிலிருந்து வெளிவந்து புத்துணர்ச்சி அடைவதற்கும், மாற்றத்தை அடைவதற்கும் பல புதுமையான, தனித்துவமான வழிகள் உள்ளன. மூட் அவுட் (Mood out) மனநிலையை மேம்படுத்தக்கூடிய சில சுவாரசியமான விஷயங்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
1. தன்னார்வலர்களாக:
தன்னார்வப் பணிகளில் நாம் ஈடுபடலாம். குறிப்பாக பொதுமக்களுக்கு உதவுவது அல்லது பிற உயிரினங்களுக்கு உதவுவது போன்ற விஷயங்களைச் செய்வது புதிய நண்பர்கள் வட்டாரத்தை உருவாக்கவும் செய்யும். புதிய நண்பர்களுக்கு உதவிகள் செய்வதினால் பல அனுபவங்களையும் பெற உதவும்.
2. டிஜிட்டல் டிடாக்ஸ் முகாம்கள் (Digital Detox Camps):
தொழில்நுட்பம் வளர வளர நாம் அதற்கு அடிமையாகிக்கொண்டு வருகிறோம். அதிலிருந்து சற்று 'பிரேக்' எடுப்பதற்காகவே ‘டிஜிட்டல் டிடாக்ஸ் முகாம்கள்’ இருக்கின்றன. தொழில்நுட்பப் பிடியிலிருந்து விடுபட்டு இயற்கை அழகுடன் மீண்டும் இணையவும், உடல் செயல்பாடுகளில் ஈடுபடவும், நினைவாற்றலை மேம்படுத்த பயிற்சி செய்யவும் இந்த முகாம்கள் அனுமதிக்கின்றன.
3. கலை:
கலை சம்பந்தமான விஷயங்களில் பங்கேற்கும்போது நம்முள் ஒளிந்திருக்கும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் அது ஒரு சிகிச்சைபோல் செயல்படும். ஓவியம், மட்பாண்டங்கள் செய்வது (pottery) அல்லது நடனம் போன்றவை நம் எதிர்மறை எண்ணைகளை விரட்டி நம்முடைய ஆக்கப்பூர்வமான திறமையை வெளிக்கொண்டு வரும்.
4. ஆரோக்கியத்தைத் தேடிய பயணம்:
யோகா மற்றும் ஆயுர்வேத மையங்கள் போன்ற ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் இடங்களுக்குச் செல்வது ஒரு வித புத்துணர்ச்சியை அளிக்கும். கேரளா, ரிஷிகேஷ் மற்றும் அந்தமான் தீவுகள் போன்ற இடங்கள் நம்மை நாமே குணப்படுத்த ஒரு அமைதியான சூழலை வழங்குகின்றன.
5. சாகச விளையாட்டுகள்:
பாராகிளைடிங் (paragliding), ஸ்கூபா டைவிங் (scuba diving) அல்லது ட்ரெக்கிங் (trekking) போன்ற சாகச விளையாட்டுகளில் ஈடுபடுவது உங்கள் அட்ரினலின் (Adrenaline) சுரப்பியை அதிகரித்து மன அழுத்தத்தைக் குறைக்க உதவும். மணாலி, கோவா மற்றும் லடாக் போன்ற பல இடங்கள் இதுபோல் செயல்படுகின்றன.
6. இசை மற்றும் நடனம்:
இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்பது உங்கள் மன அழுத்தத்தைப் போக்கி ஒரு மகிழ்ச்சியான பாதைக்கு வழிவகுக்கும். பிடித்த உற்சாகமளிக்கும் இசையைக் கேட்பது அல்லது புதிய நடனத்தை கற்றுக்கொள்வது ஒருவரின் மனநிலையை நேர்மறையாக வைத்துக்கொள்ளும்.
7. சமையல் ஜாலங்கள்:
புதிய உணவு வகைகளை ருசிப்பது அல்லது பல்வேறு உணவுகளை சமைக்கக் கற்றுக்கொள்வது உங்கள் அன்றாட மன அழுத்தத்திலிருந்து வெளியேற ஒரு நன்மை தரும் வழியாகும்.
8. தோட்டம் அல்லது நகர்ப்புற விவசாயம்:
ஒரு சிறிய தோட்டத்தை உருவாக்கி பராமரிப்பது அல்லது நகர்ப்புறம் சார்ந்த விவசாய திட்டங்களில் (Terrace gardening) பங்கேற்பது உங்களை இயற்கையுடன் இணைவதற்கும் மன அழுத்தத்தைக் குறைக்கவும் ஒரு நிறைவான வழியாகும். குறிப்பாக மூலிகைகள், காய்கறிகள் அல்லது பூக்களை வளர்ப்பது உங்களுக்கு ஒரு அமைதியான உணர்வை அளிக்கும்.
9. செல்லப்பிராணிகளுடன் பழகுவது:
செல்லப்பிராணிகளுடன் நேரத்தைச் செலவிடுவது அல்லது செல்லப்பிராணி சம்பந்தமான சிகிச்சை முகாம்களில் பங்கேற்பது ஒரு அமைதியான உணர்ச்சியை உங்களுக்கு வழங்கலாம். காரணம் விலங்குகளுடன் பழகுவது இயற்கையாகவே மன அழுத்தத்தைக் குறைத்து மகிழ்ச்சியை வரவைக்கும்.