நாம் பல சமயங்களில் ஒரு காரியத்தில் இறங்கி ஒரு அதை செய்யும் பொழுது ஆமாம் அப்புறம் பார்த்துக் கொள்வோம் என்று பின்வாங்குவோம் அல்லது இது நம்மால் முடியாது என்றும் ஒரு நம்பிக்கையின்மையை மனதுக்குள் விதைப்போம். அப்படி விதைக்கும் பொழுது நம்பிக்கை அந்த இடத்தில் இறந்து போகிறது.
மனரீதியாக இந்த காரியத்தில் நாம் வென்றே தீரவேண்டும் என்று வைராக்கியத்தோடு இருப்பவர்கள் இதுவரை யாரும் தோற்றதாக சரித்திரமே கிடையாது. சில சமயங்களில் அவர்களுக்கு ஆரம்பத்தில் சில சறுக்கல்கள் ஏற்படலாம். ஆனால் அந்த சறுக்கல்களை ஏணி மரமாக மாற்றி அதில் ஏறிவிடுவார்கள். இதுவே சாதனையாளர்களின் மிகப்பெரிய பலம்.
பனாமாக் கால்வாயைக் கட்டுவதற்கான முயற்சியில் வெற்றி பெற்றவர் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட். பல ஆண்டுகளாக இப்படியொரு கால்வாய் கட்டப்பட வேண்டும் என்று பலரும் முயற்சித்துக் கொண்டேயிருந்தார்கள். ஆனால் அவர்களது முயற்சி முழுமையாக இல்லாததால் அது நடக்கவில்லை. அமெரிக்க ஜனாதிபதியாக ரூஸ்வெல்ட் பதவியேற்றவுடன் தீர்மானமாக இதைக் கொண்டு வந்தார். அமெரிக்க காங்கிரஸ் சபையில் அனுமதி பெறுவதற்கான மசோதாவையும் அவர் உருவாக்கி வைத்திருந்தார்.
மசோதா நிறைவேறியதும் அந்த மசோதாவைச் செயல்படுத்துவதற்கான பணத்தை வழங்கவும் தீர்மானங்களைக் கொண்டு வந்தார். பல ஆண்டுகளாகக் கனவுத் திட்டமாகப் பேச்சளவில் இருந்த பனாமாக் கால்வாய் என்பது செயலளவில் உருவானது. ரூஸ்வெல்ட்டின் திட்டமிட்ட நடவடிக்கையும் செயல்படுத்தும் திறமுமே அங்கே வெற்றி பெற்றன.
ஒரு வேலையைச் செய்தே தீரவேண்டும் என்ற தீர்மானத்தோடு செயல்படும் மனிதர்கள் பெரும்பாலும் அதை நிறைவேற்றி விடுகின்றார்கள். மனவியல் வல்லுநர்கள் சொல்வதுபோல உறுதியான தீர்மானங்கள் நிச்சயமான பலனைக் கொடுக்கிறது.
இனியாவது எந்த காரியத்தில் நீங்கள் இறங்கினாலும் சரி நிச்சயமாக முடியும் முடிந்தே தீரும். நான் முடித்துக் காட்டுவேன் என வைராக்கியத்தோடு அந்த காரியத்தில் இறங்கி செயல்படுங்கள். நாம் என்ன சொல்கிறோம் என்பதை விட என்ன செய்யப் போகிறோம் என்று செயலில் காட்டுவதே புத்திசாலித்தனம்.
"ஒரு மனிதன் என்ன சொல்கிறான் என்பது முக்கியமல்ல, என்ன செய்கிறான் என்பதுதான் முக்கியம்."