
இந்த உலகத்தில் பிறந்த எல்லோருக்குமே நல்ல வழக்கம் கெட்ட வழக்கம் என இரண்டும் கலந்துதான் இருக்கிறது. யாருமே நான் 100% என்று தனக்குத்தானே கூறிக்கொள்ள முடியாது. அதைப் போலவே முழுவதும் கெட்ட குணமே நிறைந்த மனிதர்களும் கிடையாது.
காலத்தின் மாற்றத்தாலும் சில சந்தர்ப்ப சூழ்நிலையாலும் நாம் எல்லோருமே எதாவது ஒரு கெட்ட வழக்கத்திற்கு ஆளாகி விடுகிறோம். நம்மை பொறுத்த வரையில் நமக்கு நல்ல பழக்கத்தை பிடித்து கொள்வதற்கு அதிக நாள் எடுக்கிறது, ஆனால் அந்த பழக்கத்தை விரைவிலேயே நாம் விட்டும் விடுகிறோம். அதைப்போல நமக்கு கெட்ட பழக்கம் விரைவிலேயே நம்மோடு ஐக்கியமாகி விடுகிறது. அதை விட்டு விடுவதற்கு நாம் முயற்சிப்பதுமில்லை. அப்படியே முயற்சித்தாலும் விட முடிவதில்லை என்பதே நம்மில் பல பேரின் கருத்து.
இந்த நல்ல பழக்கத்தை பிடிக்க முடியாமல் போவதும் கெட்ட பழக்கத்தை விட முடியாமல் போவதும் நம் கைகளில் தான இருக்கிறது. எப்படி என்று பார்க்கலாமா...
இதை விவரிக்க நான் ஒரு உதாரணத்தைக் கூறுகிறேன்.
உங்களின் ஒரு உள்ளங்கையில் ஒருபிடி உப்பை எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு உள்ளங்கையை ஐந்து விரல்களால் நன்றாக மூடிக்கொள்ளுங்கள். நினைவில் இருக்கட்டும், உங்கள் கையில் உப்பு இருக்கிறது என்று.
இப்போது இந்த உப்பை உங்கள் கையிலிருந்து அகற்றுவதற்காக நீங்கள் உங்களது கையை நன்றாக மூடிக்கொண்டே குழாயில் கையை அலும்புகிறீர்கள், அலம்பிய பிறகு உள்ளங்கையை பார்த்தால் உப்பு அப்படியே இருக்கிறது. இதற்கு என்ன காரணம்? நீங்கள் உப்பை அகற்ற வேண்டும் என்று நினைத்து கையையும் நன்றாக அலம்பினீர்கள், முயற்சி செய்தீர்கள், ஆனாலும் உப்பு கரையவில்லை, ஏனென்றால் நீங்கள் கையை இறுக்கமாக மூடி வைத்து கொண்டிருந்தீர்கள். அதுதான் உப்பு கரைவதற்கு தடையாக இருந்தது.
அதைப்போல நீங்கள் மேலோட்டமாக நினைத்து கொண்டு உங்களிடமிருக்கும் கெட்ட வழக்கத்தை விட வேண்டும் என்று எத்தனை முயற்சி செய்தாலும் அதை விடுவதற்கு உங்களால் ஒரு போதும் முடியாது. உள் மனதிலிருந்து இந்த பழக்கத்தை விட்டு விட வேண்டும் என்கிற எண்ணம் மிக ஆழமாக தோன்றினால்தான் முடியும்.
சரி, இப்போது இதே உப்பை நல்ல பழக்கமாக எடுத்து கொள்வோம். உங்கள் கையிலிருக்கும் உப்பை நீங்கள் கரையாமல் பார்த்து கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் நீங்கள் கையை அலம்பும்போது கையை இறுக்கி மூடாமல் திறந்து அலம்பினால், என்ன ஆகும். உப்பு கரைந்துவிடும். பிறகு ஐயோ... கையில் இருந்த உப்பு போய்விட்டது என்று புலம்பி ஒரு லாபமுமில்லை.
இதைப் போலவை நம்மிடமிருக்கும் நல்ல பழக்கத்தை இறுக்கமாக பிடித்து வைத்துகொள்ள வேண்டும். எக்காரணத்தை கொண்டும் அதை கரையவிடாமல் நாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டும்.
ஆகவே, எந்த பழக்கத்தை விடவேண்டுமோ அதை இறுக்கி பிடிக்காமலும், எந்த பழக்கத்தை தக்க வைத்து கொண்டால் நமக்கு நல்லதோ அதை நன்றாக கூடியவரை இறுக்கி பத்திரமாக பொக்கிஷத்தைபோல் பிடித்து வைத்துகொள்ள வேண்டும்.