கண்ணா, லட்டு தின்ன ஆசையா? அள்ளிக் கொடுப்பார் ஆண்டவன்!

Motivation image
Motivation imageImage credit - pixabay.com

-தா. சரவணா

துன்பத்தில் இருப்பவர்களுக்கு இறைவன் கூடவே இருந்து உதவுகிறார் என்பது நம்மை ஆறுதல் படுத்துவதற்காகக் கூறப்பட்டது. ஆனால், நிச்சயமாக அது உண்மையல்ல. என்ன ‘ஷாக்’ ஆயிட்டீங்களா? மேலும் படியுங்க... புரியும்.

துன்பப்படுபவர்களை இறைவன் காப்பாற்றவே மாட்டார். ஏனெனில், அந்தக் கவலைகளை கொடுப்பதே இறைவன்தான். அது எப்படி என்கிறீர்களா?

எல்லாம் அவன் செயல் என்றால், கவலைகளைக் கொடுப்பதும் இறைவன்தான் என்று பொருளாகிறது. அப்படியானால் கவலைகள் மறைய இறைவனை வேண்டிக் கொள்ளக்கூடாது என்றும் பொருளாகிறது. மேலும், கூர்ந்து நோக்கும்போது, பல ஆச்சரியங்கள் கிடைக்கும்.

இறைவன் எல்லோருக்கும் கவலைகளைத் தந்து விடுவதில்லை.  நமது கணிப்பின்படி லாரி லாரியாக கவலைகளை நம்மிடத்திலும், லாரி லாரி ஆக இன்பங்களை நமக்கு வேண்டாதவர்கள் இடத்திலும் அள்ளி அள்ளி கொடுத்துவிடுகின்றார். அநியாயம்,  அக்கிரமம்,  அராஜகம் பிறரைத் துன்புறுத்துதல், ஏமாற்றுதல் போன்ற அதர்மச் செயல்களில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு எல்லாம் இறைவன், வெற்றி லாபம் இன்பம் இவற்றை வாரி வழங்குகிறார்.

அதற்குக் காரணத்தைக் கேட்டாலும் நீங்கள் ஆச்சரியப்பட்டு போவீர்கள்! உண்மையான காரணம் அவர்கள் எல்லாம் இறைவனால் கைவிடப்பட்டவர்களே!  ஆடம்பரங்களோடும், வசதிகளோடும் வாழ்கின்றவன் எப்படி கைவிடப்பட்டவன் என்கிறீர்களா? 

மனிதனின் வாழ்க்கை என்று சொல்லப்படுவது அவனது மீதமுள்ள எதிர்காலம் மட்டுமே. எதிர்காலம் மட்டும்தான் மனிதனுக்குத் தேவைப்படுகின்ற அனைத்திலும் மேலானது. உங்களுக்குத் தெரியுமா? அந்த எஞ்சி இருக்கும் எதிர்காலம்தான் அவர்களுக்குத் திருடப்படுகிறது. ஆடம்பரம் என்கிற தற்காலிக இன்பங்கள் என்கிற  போதையில் மூழ்கி இருப்பதால், அவர்களது வாழ்க்கை திருடப்படுவதை அவர்களால் உணர முடிவதில்லை.

காரணம் என்னவென்றால், லட்டு உங்களுக்குப் பிடித்திருந்தால்கூட, இரண்டாவது லட்டு அதிக சுவை தருவதில்லை. மூன்றாவது லட்டு சுவையையே தருவதில்லை. நாலாவது லட்டு தண்டனையாகி விடுகிறது. ஐந்தாவது லட்டை கண்டால் ஓட்டம் பிடித்து விடுவார்கள். ஓடி ஒளிந்து கொள்வார்கள். தோன்றி மறையக்கூடிய நிரந்தரமற்ற தற்காலிக இன்பங்களைத் தருகின்றார். அநித்தியங்களை நாடும் இவர்களது மனமானது, எப்பொழுதுமே விரக்தியாகவே இருக்கும். அவர்களது மனம் போராட்டங்களால் நிறைந்திருக்கும். 
மதுவுக்கு அடிமையானவன் எத்தனை கோப்பைகள் குடித்தாலும் அவன் மனம் மற்றொரு கோப்பையைக் கேட்கும் தன்மை கொண்டது.

அதே மாதிரிதான் பண போதையில் இருப்பவர்கள்கூட எத்தனை கோடிகளை பெற்றாலும் அவர்களது மனம் மேலும் ஒரு கோடி கிடைக்காதா என சாகும் வரை ஏங்குவார்கள். எந்த ஒரு உயர்ந்தப் பொருளை அடைந்தாலும் அவர்களது மனம் மற்றொன்றைக் கேட்கும் தன்மைகொண்டது. 

அது சரி, நியாயம், தர்மம், அன்பு, கருணை, இரக்கம் என நற்குணங்களால் நிறைந்து, எப்போதும் நற்செயல்களிலேயே ஈடுபட்டுக்கொண்டிருக்கும் நமக்கு மட்டும், எப்போதுமே ஏன் வேதனைகளைத் தர வேண்டும்?   காரணத்தைக் கேட்டால்,  அசந்து போவீர்கள்.

இதையும் படியுங்கள்:
குன்றில் கோயில் கொண்ட பிறைசூடி பெருமான்!
Motivation image

உண்மையான காரணம், நாமெல்லாம் இறைவனுக்குச் செல்ல பிள்ளைகளாம். அது எப்படி என்றால்,  கவலை களைக் கொடுப்பதன் மூலம் இறைவன் நமக்கு ஏதோ அறிவைக் கொடுக்க விரும்புகிறார். அப்படியானால், அந்த அறிவு எனப்படும் ஞானத்தை உங்களுக்குக் கொடுப்பதன் மூலம் அதாவது ஞானங்களில் உயர்ந்த ஞானமான ஆத்ம ஞானத்தை உங்களுக்குக் கொடுப்பதன் மூலம் நிரந்தரமாகவே பேரானந்தத்தில் உங்களை நிலை நிறுத்த எண்ணுகிறார்.

பழுக்கக் காய்ச்சிய பின்பு சம்மட்டியால் அடித்தால்தான் இரும்புகூட தேவைப்பட்ட உருவத்தைக் கொடுக்கும். அதுபோலதான் பெரும் துன்பங்களால் உன் மனது பாதிப்புக்குள்ளானால்தான், அது தேவைப்பட்ட பக்குவத்தை அடையும்.

அதாவது மனதுக்குத் தேவைப்படும் பக்குவம் என்பதே ஆத்ம ஞானத்தைப் பெறுகின்ற அனுபவமாகும். ஏனெனில் எந்த ஒரு ஞானத்தை நீ பெற்றால் அதற்கும் மேலான ஒரு ஞானத்தை நீ பெற வேண்டியது இல்லை என்கிற மனநிறைவைத் தருகிறதோ, அதுவே ஆத்ம ஞானம் ஆகும். இதன்மூலம் மட்டுமே மனிதன் அனைத்துவிதமான கவலைகளிலிருந்தும் விடுபட்டு, நிரந்தர பேரானந்தத்தில் திளைக்க முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com