வெற்றி வேண்டுமா? விட்டுத் தள்ளுங்கள் சபைக் கூச்சத்தை!

motivation image
motivation imageImage credit - pixabay.com

னிதர்களிடையே பல உணர்வுகள் உண்டு. கோபம், துக்கம், மகிழ்ச்சி போன்ற பல குணங்களில் கூச்ச சுபாவம் என்பது பலரிடையே இருக்கும் வெற்றிக்கு தடையாக இருக்கும் ஒரு குணாதிசயமாக உள்ளது.

“கூச்ச சுபாவம் ஒருவரை கோழையாக்கிடும். அதிலிருந்து வெளியே வர்றதுங்கிறது சாதாரண விஷயமில்லை, நெஜமாவே ரொம்ப ரொம்ப கஷ்டம்.”​

“என்னோட வளரும் பருவத்தில கூச்ச சுபாவத்தினால நான் ரொம்பவே கஷ்டப்பட்டேன். ஏதோ வேற ஒரு உலகத்துல நாமட்டும் தனியா வாழ்ந்த மாதிரி இருந்துச்சு.”—இந்த இரண்டும் கூச்ச சுபாவம் கொண்ட கல்லூரி மாணவமணிகளின் ஸ்டேட்மெண்ட்.

கூச்சம் என்பது பொதுவாக தெரிந்த அல்லது தெரியாத நபரை அணுகும்போது அல்லது மற்றவர்களால் அணுகப்படும்போது எழும் உணர்வாகும். குறிப்பாக நேர்காணல், பொதுப் பேச்சு அல்லது வேறு ஏதேனும் ஒரு சூழ்நிலையில் சிலருக்கு ஏற்படும் மோசமான உணர்வு அல்லது பயம் என வரையறுக்கலாம்.

நண்பர்களிடையே மணிக்கணக்காக அரட்டை அடிக்கும் பலர் அறியாத நான்கு பேர் கூடி இருக்கும் இடத்தில் பேசச் சொன்னால் தட்டு தடுமாறி மறைந்து போவார்கள். காரணம் கூச்சம். சில சந்தர்ப்பங்களில் நல்ல பணியில் உள்ளவர்கள் தலைமை பொறுப்பில் மேடைகளில் ஏறி பேச வேண்டும் எனில் அவ்வளவுதான் வார்த்தைகள் வராமல் வியர்த்துக் கொட்டுபவர்களும் உண்டு. மைக்கை பார்த்ததும் மயங்கி விழுந்தவர்கள் கூட இருக்கிறார்கள். இதனால்  தலைமை பொறுப்பை ஏற்க முடியாமல் வருந்துபவர்களும் உள்ளனர்.

வேலைக்கான நேர்முகத் தேர்வுகள் கலந்துரையாடல்கள் போன்ற பல விஷயங்களில்  இந்த கூச்சத்தினால் தொடர்ந்து தோல்விகளையே சிலர் சந்திக்கின்றனர். இந்த கூச்சம் மட்டுமில்லாமல் இருந்திருந்தால் வாழ்க்கையில் பல உன்னதமான இடங்களுக்கு சென்று இருப்பேனே என்று பலர் புலம்புவதை கேட்டு இருப்போம்.

கூச்சம் இயல்பானது என்று நினையுங்கள். மூளையில் செரட்டோனின் (serotonin) என்ற ரசாயனம் குறையும்போது இயல்பாகவே மனிதருக்கு பயம், பதற்றம், குற்ற உணர்சி, தாழ்வு மனப்பான்மை, தயக்கம் போன்ற உணர்ச்சிகள் இயற்கையாகவே உருவாகிறது என்பதை முதலில் உணருங்கள். அதே சமயம் அதிகமான கூச்சம் வெற்றிக்குத் தடை என்பதையும் நினையுங்கள்.

கலந்துரையாடலில் இயல்பாக சேர்ந்து கொண்டு பேச கிடைக்கிற வாய்ப்பை தவிர்க்காமல் பேசுங்கள் தன்னாலும் தனிப்பட்ட ஒரு கருத்தை வெளிப்படுத்த முடியும் என்று நம்பி உரையாட வேண்டும்.

இந்த உணர்வினால் எழும் தாழ்வு மனப்பான்மையை உதறித் தள்ளுவதுதான் முக்கியம். நம்மால்  அனைவரிடமும் பழக முடியும் என்று உங்களுக்கு நீங்களே அடிக்கடி சொல்லிக் கொள்ளுங்கள்.

தினம் கண்ணாடி முன் நின்று மனதில் என்ன தோன்றுகிறதோ அதைப்  பேசி வாருங்கள்.பேசப் பேசத் தயக்கங்கள் கரைந்து போகும். சின்ன தயக்கம் நமக்குள் இருக்கும் திறமையை உணராதபடி செய்து விடுகிறது.

தங்களுக்குள் ஏற்பட்ட தயக்கத்தை தாண்டி தங்களுக்குள் தங்களை கண்டுபிடித்தவர்களின் அனுபவங்களைத் தேடித் தேடி படியுங்கள். உங்களைப் பற்றி நன்கு அறிந்தவர்களிடம் பேசிப் பழகுங்கள்.

இறுதியாக கூச்சப்படுபவர்களால் தங்களின் அறிவுக்கும் திறமைக்கும் ஏற்ற வாழ்க்கையை அடைய முடியாது என்பதையும் கூச்சம், தயக்கம் எதுவும் இல்லாதவர்கள் தான் வாழ்க்கையில் உயர்ந்த இடத்துக்குச் செல்ல முடியும் என்பதையும் அடிக்கடி நினைவு கூருங்கள். நீங்களுமா வெற்றியாளரே..!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com