
'மனம் இருந்தால் மார்க்கம் உண்டு' என்பது பழமொழி. இதற்கு இணங்க ஒரு நபரை சந்திக்க முடிந்தது. அதை ஒரு பெரிய சந்தோஷ நிகழ்வு என்றுதான் கூற வேண்டும்.
ஒருமுறை ஆட்டோவில் ஏறி அமர்ந்த போது அந்த ஆட்டோ முழுவதும் விதவிதமான வித்தியாசமான புத்தகங்கள் இருந்தன. அதை எடுத்து பார்த்துவிட்டு ஆட்டோ ஓட்டுனரிடம், 'இந்த புத்தகங்கள் எல்லாம் எங்களைப் போல் வருபவர்கள் படிப்பதற்காக வைத்திருக்கிறீர்களா?' என்று கேட்டேன்.
அதற்கு அவர், 'நீங்களும் படிக்கலாம். நானும் அவற்றை விரும்பி படிப்பேன். நிறைய பத்திரிகைகளுக்கு எழுதுகிறேன். நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் அந்த புத்தகத்தை படிப்பதால் எனக்கு நிறைய விஷயங்கள் புரிகிறது. எழுதுவதற்கு அவை உறுதுணையாக இருக்கின்றன. அதனால் தான் அதை வைத்திருக்கிறேன்' என்று கூறினார்.
ஒரே இறைச்சல், பேசிக் கொண்டிருக்கும் பொழுதே அத்தனை ஃபோன் கால்கள் அவருக்கு வருகிறது. இவ்வளவுக்கு இடையிலும் அவரால் எப்படி எழுத முடிகிறது என்று நினைத்த பொழுது அவரின் செயல் ஆச்சரியமாக இருந்தாலும், பெருமிதம் அடைய வைத்தது. அவரின் அயராத உழைப்பு எல்லாவற்றிற்கும் மேலாக அவரின் ஆர்வம் மெய்சிலிர்க்க வைத்தது. ஆதலால் அவரைப் பாராட்டி விட்டு அவரின் எழுத்து பணி தொடர வாழ்த்தி விடைப் பெற்றேன்.
எனது பக்கத்து வீட்டு பெண்மணி ஒரு முறை பேசிக் கொண்டிருக்கும் பொழுது, 'எனக்கு நன்றாக எழுத வரும். நான் எந்த பத்திரிக்கைக்கு எழுதி அனுப்பினாலும், அவர்கள் அதை திருப்பி அனுப்பி விடாதபடிக்கு நேர்த்தியாக எழுதி பிரசுரம் செய்ய என்னால் முடியும். அவ்வளவு திறமை இருந்தும் வீடு சிறியதாக இருப்பதால் உட்கார்ந்து எழுத இடம் இல்லாததால் நான் எழுதுவதில்லை' என்று கூறினார்.
இதைக் கேட்டவுடன் மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நான் சந்தித்த ஆட்டோ டிரைவர் நினைவுக்கு வந்தார். என்ன முரண்பாடு என்று தோன்றினாலும், அவரிடம், 'நேரு, பாலகங்காதர திலகர், ஓ.ஹென்றி என்ற சிறுகதை மன்னன், சர்வாதிகாரியான ஹிட்லர், அமெரிக்கர்களின் எதார்த்த உணர்ச்சியை தட்டி எழுப்பிய தாமஸ் பெயின் போன்றவர்கள் சிறைச்சாலையில் இருந்த பொழுது தான் தங்களது புகழ்பெற்ற நூல்களை எழுதி முடித்தார்கள். ஆதலால் ஒரு வசதியும் இல்லாத சிறைச்சாலையில் இருந்து கொண்டே அவர்களால் எழுத முடிந்திருக்கிறது என்றால், வீட்டில் இருக்கும் நம்மால் எழுத முடியாதா என்ன? இரண்டு பெட்ரூம் இருக்கிறது. உங்களின் பெண்ணும் ஹாஸ்டலில் தங்கி படிக்கிறார். ஏதாவது ஒரு பெட்ரூமில் அமர்ந்து ஸ்டூலை வைத்துக்கொண்டு அதன் மீது பேனா, பேப்பரை வைத்து எழுதி விடலாம். இல்லையேல் டைனிங் சேரில் நீங்கள் எப்படி சாப்பிடுகிறீர்களோ அப்படியே அதை இடத்தில் அமர்ந்து தட்டுக்கு பதிலாக பேப்பர் பேனாவை வைத்து எழுதி விடலாம்.
அல்லது சோபா செட்டில் அமர்ந்து டீபாயில் வைத்து எழுதலாம். இல்லையென்றால் எங்கள் வீட்டிற்கு வந்து நான் எழுதும் இடத்தில் அமர்ந்து எழுதுங்கள். ஆனால், உங்களுக்கு இருக்கும் ஆர்வத்தை மட்டும் விட்டு விடாமல் எப்படியாவது இருக்கும் திறமையை வெளிப்படுத்துங்கள்,' என்று கூறினேன். அவரும் ஆர்வமுடன் கேட்டுக் கொண்டார்.
ஆனால் அடுத்த நாளிலிருந்து எழுதுவதை தவிர்த்து மற்ற விஷயங்களை பேசுவதில் ஆர்வம் காட்டினார். மறந்தும் கூட எழுத்தைப் பற்றி எதுவும் பேசவில்லை. பிறகு நானும் அவரிடம் எழுத்தைப் பற்றி எதுவும் விசாரிக்கவில்லை. அவருக்கு உண்மையாக எழுத்தில் ஆர்வம் இருந்ததா? என்பதும் தெரியாது.
என்றாலும் தோழிகளே! உங்களில் இது போல் எழுத்தில் ஆர்வம் உள்ளவர்கள் யாராவது இருந்தால் ஏதாவது ஒரு இடத்தில் அமர்ந்து எழுதுவதை விரும்பி செய்யுங்கள். இடம் இல்லை என்று மட்டும் திறமையை வெளிப் படுத்தாமல் விட்டு விடாதீர்கள். எப்பொழுதும் உழைக்கத் தயாராக இருக்க வேண்டும். உழைக்கும் பொழுதே அதில் வரும் இன்னல், இடைஞ்சல்களை சகித்துக் கொள்ளும் திறமையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு மனம் செம்மையாக இருக்க வேண்டும். மனம் வைத்தால் எதையும் செய்வதற்கு வழி கிடைக்கும். அதனால் உழைக்கத் தயாராகுவோம். வழி தானாக கிடைக்கும்.