

நம் வாழ்க்கையில் நமக்கு அதிகமாக வலி தரக்கூடியது துரோகம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், அது துரோகம் இல்லை எதிர்பார்ப்பு. Expectations தான் அதிகமாக நமக்கு வேதனையையும், வலியையும் தரும். நம் மனது எப்போதுமே நான் இதை அவர்களுக்கு செய்தேன். அவர்கள் இதை எனக்கு செய்வார்கள் என்று ஒரு கணக்கை போடுகிறது. ஆனால், அது ஏமாற்றத்தில் முடியும்போது ஏற்படும் வலியிருக்கிறதே அது நரக வேதனை.
நீங்கள் இப்போது கற்பனை செய்துக்கொள்ளுங்கள். ஒரு பெரிய ஆற்றில் நீங்கள் மட்டும் தனிமையில் ஒரு படகில் சென்றுக் கொண்டிருக்கிறீர்கள். கண்களை மூடி அந்த இயற்கை அழகை ரசித்துக் கொண்டிருக்கும்போது திடீரென்று இன்னொரு படகு உங்கள் படகின் மீது வந்து இடிக்கிறது. அவ்வளவுதான் உங்களுக்கு கோபம் தலைக்கு ஏறுகிறது. ஆனால், அந்த படகில் ஆளேயில்லை என்பதை நீங்கள் பிறகுதான் கவனிக்கிறீர்கள்.
இப்போது உங்களுக்கு வந்த கோபம் அப்படியே போய்விடும். நடந்தது ஒரு விபத்து என்று கடந்து விடுவீர்கள். இதைப்போல தான் நம் வாழ்க்கையில் நமக்கு வலியை தருபவர்களை, நம்மை உதாசீனப்படுத்து பவர்களை அந்த காலியான படகுப்போல நினைத்து கடந்துவிட வேண்டும்.
உண்மையிலேயே நம்மை யாரும் வேண்டுமென்றே காயப்படுத்த வேண்டும் என்று நினைக்கவில்லை. அவர்களின் ஈகோ, பயம், வளர்ப்பு, சூழ்நிலை என்று ஏதோ ஒரு காரணத்தால் நம்மை புண்படுத்தலாம். அத்தகைய வெற்றுப் படகுகளோடு போராடி நேரத்தை வீணாக்க வேண்டாம்.
இதை எப்படி நிஜ வாழ்க்கையில் செய்ய முடியும் என்று கேட்கிறீர்களா? மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்று சொல்வார்கள். சரியான பயிற்சியை கடைப்பிடித்தல் கண்டிப்பாக சாத்தியப்படும். அதற்கு இந்த நான்கு விஷயத்தை உங்கள் மனதில் ஆழமாக பதிக்க வேண்டும்.
1.Acceptance of nature
உங்களை ஒரு பாம்பு கொத்திவிடுகிறது என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் அதற்கு முதலில் முதலுதவி செய்வீர்களா இல்லை பாம்பிடம் ஏன் என்னை கடித்தாய் என்று சண்டைக்கு செல்வீர்களா? பாம்பிடம் சண்டைக்கு போவது முட்டாள் தனம். ஏனெனில், கடிப்பது பாம்பினுடைய குணம் என்று நமக்கு தெரியும். அதைப்போலதான் ஒருவரின் குணம் தெரிந்தும் அவரிடம் எதிர்ப்பார்ப்பு வைப்பது தவறு என்று புரிந்துக்கொண்டால் பாதி பிரச்னை சரியாகிவிடும்.
2. Stop expecting mind reading
நம் மனதை மற்றவர்கள் புரிந்து நடந்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கக்கூடாது. உதாரணத்திற்கு மனைவி தன்னுடைய திருமண நாளை கணவர் நியாபகம் வைத்திருப்பார் என்று நினைத்து அன்று ஆவலாக காத்திருக்கிறார். ஆனால், கணவர் அதை மறந்து விடுகிறார். இதனால் மனம் உடைந்த மனைவி கணவருக்கு தன் மீது அன்பேயில்லை என்று சொல்லி அழத்தொடங்குகிறார். அதற்கு கணவனோ, 'நீ காலையிலேயே என்னிடம் சொல்லியிருந்தால், வேலைக்கு செல்லாமல் மகிழ்ச்சியாக கொண்டாடியிருக்கலாமே!' என்று கேட்கிறார்.
நமக்கு என்ன வேண்டும், வேண்டாம் என்பதை நாம் சொல்லாமலேயே மற்றவர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பது தவறு.
3. Control what you can
வாழ்க்கை என்பது டீ.வி கிடையாது. அது வீடியோ கேம் மாதிரி நம்மிடம் இருக்கும் ஜாய் ஸ்டிக்கை மட்டும்தான் நாம் பயன்படுத்த முடியும். நாம் பிறருக்கு ஒரு விஷயம் செய்துவிட்டு அவர்கள் நமக்கு ஏன் நாம் செய்ததுப்போல திருப்பி செய்யவில்லை என்று நினைத்து வருத்தப்படுவது சரியாகாது.
நான் ஒரு வெஜிட்டேரியன் அதனால் சிங்கம் என்னை சாப்பிடக்கூடாது என்று நினைப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம். உங்களுடைய செயலுக்கு மட்டுமே உங்கள் அதிகாரம் இருக்கிறது. அடுத்தவர்கள் அதற்கு எப்படி ரியாக்ட் செய்கிறார்கள் என்பது நம் கையில் இல்லை.
4. The 50% rule
இந்த உலகத்தில் எந்த உறவாக இருந்தாலும் நட்பு, காதல் போன்றவற்றில் உங்களுடைய பங்கு 50 சதவீதம் மட்டும் தான் மீதி 50 சதவீதம் அடுத்தவர்கள் கையில்தான் உள்ளது. 'நான் பத்து அடி பாய்ந்தால் அவனும் பத்து அடி பாய வேண்டும்' என்று நினைக்காதீர்கள். எதிர்ப்பார்ப்புகள் இல்லாத வாழ்க்கை பாரம் இல்லாத பயணம் மாதிரி. எனவே, வாழ்க்கையில் எதிர்ப்பார்ப்பதை விட்டு மகிழ்ச்சியாக வாழுங்கள்.