
நாம் ஒரு பணியில் இருப்போம் அல்லது ஒரு செயல்பாட்டில் இருப்போம். ஆனால் அந்த செயல்பாட்டில் நமக்கு திருப்தி இருக்காது. வேறொரு காரியம் செய்தால் அதில் நிச்சயம் நம்மால் வெற்றி காணமுடியும் என தெரிந்தும் சிலர் அந்த வட்டத்துக்குள் இருந்து வெளியே வரமாட்டார்கள். இப்படிப்பட்ட மனிதர்களால் என்றைக்கும் வாழ்க்கையில் வெற்றிபெற முடியாது.
ஒரு இலக்கை நோக்கி பயணிக்கிறோம். அந்த இலக்கை அடைகிறோம். அடைந்த பிறகு நாம் அடைந்த இலக்கை விட இன்னும் பிரகாசமாக ஒரு இலக்கு தெரிகிறது என்றால் அந்த இலக்கை நோக்கியும் நாம் பயணிக்க கற்றுக்கொள்ள வேண்டும் அப்பொழுதுதான் நம்மால் ஒரு வெற்றியாளராக உலா வரமுடியும்.
உரிய நேரத்தில் புத்திசாலித்தனமாக எடுக்கப்படும் முடிவுகள் அனைத்துமே நிச்சயம் வெற்றி கண்டுள்ளது அதை உணர்த்தும் ஒரு சின்ன கதைதான் இப்பதிவில்...
கேரல் ஃபார்மல் என்ற பெண்மணி ஆசிரியையாகத் தன் பணியைத் தொடங்கினார். ஆறு மாதம் கடந்தபோது அவருக்கு அது பிடிக்கவில்லை. தான் ஒரு டிசைனர் ஆகவேண்டும் என்று ஆசைப்பட்ட அவர் அந்தத் தொழிலைத் தொடங்கினார். முதல் ஆண்டிலேயே தன் ஆசிரியத் தொழிலில் கிடைத்த வருமானத்தை விட அதிகம் கிடைத்தது. சொந்தமாக ஒரு விளம்பர நிறுவனத்தைத் தொடங்கினார். ஆண்டுக்கு ஐந்தாயிரம் டாலர் சம்பாதித்த அவர் அதன்பிறகு ஆண்டுக்கு ஒரு லட்சம் டாலர் சம்பாதித்தார்.
தன் விருப்பமுள்ள தொழிலைத் தேர்வு செய்ததால் இந்த மாற்றம் என்று உணர்ந்தார். அவர் தொடங்கிய ஒரு விளம்பர நிறுவனம் முதல் மூன்று ஆண்டுகளில் பதினைந்து மில்லியன் டாலர்களுக்கு வியாபாரம் செய்தது. முதலில் ஆறு நபர்களைக் கொண்டு தொடங்கப்பட்ட நிறுவனம் மூன்று ஆண்டுகளில் இருநூறுக்கும் மேற்பட்ட நபர்களைக் கொண்டு லாபகரமாக இயங்கியது.
பிடிக்காத ஒன்றைச் செய்து கொண்டு காலத்தை வீணடிப்பதை விட நமக்குப் பிடித்ததைச் செய்யும்போது மகிழ்ச்சி கிட்டுகின்றது. நமது வெற்றிக்கான வாய்ப்புகளை நாம் தேடித்தான் பெறவேண்டும். சில தோல்விகள் இங்கு நல்ல படிப்பினைகளையும் தரும்.
"உரிய தருணத்தில் புத்திசாலித்தனமாக நடந்து கொள்வதில்தான் 90 சதவிகிதப் புத்திசாலித்தனம் அடங்கியுள்ளது."