
சிலருக்கு எந்த நேரத்தில் என்ன பேசவேண்டும், எந்த நேரத்தில் அமைதி காக்கவேண்டும் என்பது தெரிவதில்லை. இதனால் பல பிரச்னைகளுக்கு உள்ளாகிறார்கள். அதிகப்படியான பேச்சு பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.
கோபமாக இருக்கும் சமயங்களில் வாயைத் திறக்காமல் அமைதி காப்பது நல்லது. இல்லையெனில் தேவையற்றதை பேசி பிரச்னைகளை அதிகமாக்கிக் கொள்வார்கள். கோபத்தில் என்ன பேசுகிறோம் என்பதை மறந்து இஷ்டத்திற்கு பேசிவிடுவதும், கோபம் தணிந்த பின் வருத்தம் தெரிவிப்பதும் சிலருடைய வழக்கமாக இருக்கும். இதனால் நம் மீது உள்ள மதிப்பு குறைந்துவிடும் என்பதை உணரவேண்டும். எனவே கோபமாக இருக்கும் சமயங்களில் பேச்சை தவிர்த்து விடுவது புத்திசாலித்தனமாகும்.
பேசும் பேச்சை நிர்வகிக்க தெரியவேண்டும். பேச்சு நிர்வாகமே வாழ்க்கை நிர்வாகம். கவனமாக சிந்தித்துப் பார்த்தால் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் நிர்வாகம் ஈடுபட்டிருப்பதைக் காணலாம். அவற்றை சுற்றியுள்ள பணிகளையும், நம் வாழ்க்கையையும் சரியாக நிர்வகிக்கவில்லை என்றால் நம்மால் எதையும் சாதிக்க முடியாது.
எனவே, தேவையற்ற பேச்சுகளை தவிர்த்து விடுவது நல்லது. பொதுவாக எதையாவது சிந்திக்கும் பொழுது அல்லது யோசனையில் ஆழ்ந்திருக்கும் பொழுது புத்திசாலிகள் அதிகம் பேச விரும்பமாட்டார்கள். அமைதியாக யோசிக்கும் பொழுதுதான் தெளிவு பிறக்கும். தெளிவான முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்.
அதேபோல் நமக்கு தெரியாத விஷயங்களை பிறர் பேசும் பொழுது அமைதிகாப்பது மிகவும் அவசியம். சிலர் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைத்து அவர்களின் கருத்தை சொல்வார்கள். இது முற்றிலும் தவறு.
நமக்கு தெரியாத அல்லது அதைப் பற்றிய தெளிவு இல்லாத விஷயங்களை பிறர் பேசும்பொழுது அமைதிகாத்து அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை கூர்ந்து கவனிப்பது நம் அறிவுத்திறனை வளர்க்கும். அரைகுறை அறிவு என்றுமே ஆபத்தானது என்பதை உணர்ந்து தெரியாத விஷயங்களைப் பற்றி பேசாமல் இருப்பது நல்லது.
சிலர் தேவையற்ற விஷயங்களை, தேவையற்ற சமயங்களில், தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற எண்ணத்தில் வாதம் செய்வார்கள். அம்மாதிரி சமயங்களில் நாம் அவர்களுடன் வாதம் புரிவது சரியில்லை. அதனால் எந்த பயனும் இருக்கப் போவதுமில்லை.
எந்தவித புரிதலும் இல்லாமல் வாதம் செய்பவர்களிடம் பேசாமல் அமைதி காப்பது நல்லது. வாதம் செய்வது என்பது சரியான புரிதலுடன் அறிவு சார்ந்து இருக்க வேண்டும். தேவையற்ற விஷயங்களில் வாதம் செய்வது வீண் செயல்.
பேசுவதை விட அதிகம் கேளுங்கள். நம் கேட்கும் திறனை மேம்படுத்த சிறிது நேரம் தினமும் மௌனமாக இருந்து பழகுவது நல்லது. சிலர் தங்கள் பிரச்னைகளை நம்மை நம்பி கூறுவார்கள். நாம் அவர்களுக்கு தகுந்த ஆலோசனைகளைக் கூறுவோம் என்ற நம்பிக்கையில். அம்மாதிரி சமயங்களில் அவர்கள் கூறுவதை அமைதியாக கேட்பதும், முடிந்தால் தகுந்த ஆலோசனைகளை வழங்குவதும் சிறப்பு. சிலருக்கு ஆலோசனை கூட தேவைப்படாது.
அவர்கள் கூறுவதை நாம் காது கொடுத்து கேட்டாலே போதும் என்று நினைப்பார்கள். அதன் மூலம் அவர்களின் மனபாரம் குறைவதாக நம்புவார்கள். எனவே பிறர் தங்கள் பிரச்சனைகளைக் கூறும் பொழுது அமைதியாக அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து கேட்பதே நல்லது.
எந்த நேரத்தில் எப்படி பேச வேண்டும், எப்போது பேசாமல் அமைதி காக்க வேண்டும் என்பதில் கவனம் தேவை. சண்டைகள் நடைபெறும் இடத்திலும், தேவையற்ற வாக்குவாதம் நடைபெறும் இடங்களிலும், வீண் பேச்சு பேசுபவர்களிடம் இருந்தும், நமக்கு பொருந்தாத இடத்தில் இருந்தும் விலகிச் செல்வதும், அமைதி காப்பதும் நம் மன அமைதியை குறைக்காது.