

துன்பங்கள், தாமதங்கள் மற்றும் சவாலான சூழ்நிலைகளில் உணர்ச்சி வசப்படாமலும், கோபப்படாமலும் அமைதியாக இருப்பது தான் பொறுமை. பொறுமையுடன் இருப்பவர்கள் இறுதியில் வெற்றி பெற்று உலகை ஆளும் அளவிற்கு உயர்ந்த நிலையை அடைவார்கள். இது பொறுமையால் கிடைக்கும் பலனாகும்.
பொங்கினார் காடாள்வார் என்பது கோபப்படுபவர்கள் எதையும் இழந்து விடுவார்கள் என்பதைக் குறிக்கும். கோபப்பட்டு ஆத்திரப்படுபவர்கள் எந்தவித நன்மையும் இன்றி தனிமை படுத்தப்பட்டு துன்பப்படுவார்கள். கோபம் என்பது ஒருவரின் நல்ல குணங்களையும் அறிவையும் அழிக்கும் சக்தி கொண்டது. எனவே வாழ்வின் எந்த சூழ்நிலையிலும் குறிப்பாக சவால்களை எதிர்கொள்ளும் பொழுது அமைதியாகவும், நிதானமாகவும் செயல்படுவதன் மூலம் நாம் நினைத்ததை அடைய முடியும்.
பொறுமையின் அவசியத்தையும், கோபத்தின் தீய விளைவுகளையும் உணர்த்தும் இந்த சிறந்த தமிழ் முதுமொழி. பூமி பொறுமைக்கு உதாரணமாக சொல்லப்படுகிறது. பூமியை எத்தனை ஆழமாக தோண்டினாலும் தன்னிடம் உள்ள அனைத்து இயற்கை வளங்களையும் தயக்கமின்றி தந்து கொண்டே இருக்கிறது. தங்கம், வைரம் போன்ற விலை மதிப்பற்ற உலோகங்களாகட்டும், நிலக்கரி, பெட்ரோல் போன்ற எரிவாயு பொருட்களாகட்டும், இனிமையான சுவை கொண்ட நீராக இருக்கட்டும் எதுவாக இருந்தாலும் பூமியானது இயற்கை வளங்களை தங்கு தடையின்றி தந்து கொண்டே இருக்கிறது.
பூமியிடம் இருந்து நாம் கற்க வேண்டிய மிகவும் சிறப்பான பண்பு பொறுமைதான். பொறுமையின்றி பேசும்பொழுது சொல்லின் அர்த்தத்தை இழக்கிறோம். பதட்டமான நிலைக்கு தள்ளப்படுகிறோம். பொறுமை இழந்து பேசும்பொழுது பிறருடைய கருத்தினை காது கொடுத்து கேட்க வேண்டும் என்ற எண்ணம் கூடத் தோன்றாது. தான் சொல்வதே சரி என்ற எண்ணம் மட்டுமே மேலோங்கும். நாம் பணிபுரிகின்ற அலுவலக சூழலாக இருந்தாலும் சரி, உறவுகளை மேம்படுத்துகின்ற குடும்ப சூழலாக இருந்தாலும் சரி, பொறுமையை கடைப்பிடித்து பெருமை பெற வேண்டும்.
வலிமையும் உணர்ச்சியும் சாதிப்பதைவிடப் பொறுமையும் காலமும் அதிகமாய் சாதித்து விடும் என்று கூறுவார்கள். பொறுமை கடலினும் பெரிது. திருவள்ளுவர் திருக்குறளில் தன்னைத் தோண்டுபவரை பொறுத்து தாங்கிக் கொள்ளும் நிலம் போல, தம்மை இகழ்ந்து பேசுபவரை பொறுத்துக்கொள்ளுதல் முதன்மையான அறமாகும் என்று கூறியுள்ளார்.
'அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை
இகழ்வார் பொறுத்தல் தலை'
பொறுமைதான் ஒருவரின் தரத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்கான அளவுகோல். நிதானம் தவறினால் தடுமாற்றம்தான் உண்டாகும். நிலைத்த புகழ் வேண்டுமா? பொறுமையாக இருக்க பழகுங்கள். எண்ணிய காரியம் ஈடேறவேண்டுமா? பொறுமையாக காத்திருங்கள். தீமையில் இருந்து நம்மை காத்துக் கொள்ள வேண்டுமா? பொறுமையாக செயல்படுங்கள். பொறுமை கடலினும் பெரிது!
நான் சொல்வது சரிதானே நண்பர்களே!