
நேரம் பொன்னானது என்பார்கள். நேரம் பொன்னானது இல்லை. ஏனென்றால் பொன்னை விலை கொடுத்து வாங்கிவிட முடியும். ஆனால் காலத்தை வாங்கவே முடியாது. போனால் போனதுதான். மீண்டும் திரும்ப வரவே வராது. அதனால்தான் முடிந்த காலத்தை இறந்தகாலம் என்று சொல்கிறோம்.
ஒருக்கால் போன உயிரைக்கூட திருப்பிக் கொண்டு வரலாம். இன்றைய மருத்துவ மற்றும் அறிவியல் ஆராய்ச்சிகளில் ஏற்பட்டிருக்கின்றன. அற்புத வளர்ச்சிகளின் வழியாக அப்படிக் கொண்டு வந்தாலும் சிலகாலம் வாழவைத்திட முடியும்.
ஆனால் மீண்டும் ஒரு நாள் உயிர் போய்த்தான் ஆகும். பிறப்பின் வாசலை கடந்து வந்த ஒவ்வொருவரும் இறப்பின் வாலைக் கடந்துதான் ஆகவேண்டும். நம் வாழ்நாட்கள் எவ்வளவு என்று யாருக்குமே தெரியாது. பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் உள்ள இடைவெளிதான் நாம் இப்பூமியில் இருக்கின்ற கால எல்லை. எனவே காலம் உயிரானது.
அதை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு வினாடியையும் முழுமையாக பயன்படுத்த வேண்டும். காரணம் மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருப்பதே விநாடிக்கு விநாடி வாழ்க்கை.
நாம் சாதிக்க வேண்டிய சாதனைகள், அடைய வேண்டிய குறிக்கோள்கள் நோக்கி நாம் இலட்சியப் பயணம் மேற்கொள்ள வேண்டும். இப்படியிருக்க நல்ல விஷயங்களை இறைவன் நமக்குக் கொடுத்திருக்கின்ற ஒரு மிகப்பெரும் வரப்பிரசாதமான பகுத்துணர்வு எனும் மாபெரும் பொக்கிஷத்தைக் கொண்டு சுயமாக பகுத்துணர்ந்து தெளிவான உண்மையை உணர்ந்து கொள்வதை விட்டு விட்டு வீண் விதண்டாவாதங்கள், வீண் தர்க்கங்கள் என நம் நேரத்தை வீணடிக்கக்கூடாது.
அதற்காக வாதம் செய்யாமல் இருக்க வேண்டும் என்பதில்லை. விவாதம் செய்யலாம். பல உண்மைகளை கண்டு உணர்ர்ந்திடவும், உணர்ந்த உண்மைகளை நிலைநாட்டவும் விவாதம் அவசியம். எந்த ஒரு விஷயத்திற்காக, விளக்கத்திற்காக, தெளிவிற்காக, உணர்ந்து கொள்வதற்காக வாதம் விவாதம் செய்கிறோம் என்பதுதான் மிகமிக முக்கியம்.
அதை விட்டு விட்டு தேவையற்ற, பிரயோஜனமற்ற, அர்த்தமற்ற விஷயங்களுக்காக விவாதம் செய்து, வீண் விதண்டாவாதமாக்கி பிரச்னைகளையும் போராட்டங்களையும் உருவாக்குவதில் அர்த்தமே இல்லை. காரணம் வீண் விதண்டாவாதத்திற்கு முடிவே இராது. தெளிவும் பிறக்காது.