
மற்றவர்கள் நம்மைப் புரிந்துகொள்ளவில்லை என்ற ஆதங்கம் நிறைய இருக்கிறது. அவர்கள் நம்மை புரிந்துகொண்டு என்ன நடந்து விடப்போகிறது.
முதலில் நம்மைப் புரிந்து கொண்டோமா? என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். நாமே நம்மைப் புரிந்து கொள்ளாமல்தான் அடுத்தவருடன் பிரச்னை செய்கின்றோம். நம்மை மற்றவர் புரிந்து கொள்ளவேண்டும் என்று கட்டாயப்படுத்தும் போதுதம் பிரச்னைகள் முளைவிடத் துவங்குகின்றன.
நம் நிலைமை என்ன? இப்பொழுது என்ன செய்து கொண்டு இருக்கிறோம்? நாளை என்ன செய்யப் போகிறோம் என உங்களைப் பற்றி முழுமையாகச் சிந்தித்துப் பாருங்கள்.
உங்களைப் பற்றிய முழுக்கவனம். உங்களுக்குள் சிந்தாமல் சிதறாமல் திருப்பப்படுமானால் உங்களைய புரிந்து கொண்டீர்கள் என்றுதான் அர்த்தம்.
உங்களின் திறமையை செயல்பாடுகளைப் புரிந்து கொண்டு மற்றவர்களும் பாராட்ட வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா? ஆனால் ஒருவரும் உங்களை இப்பொழுது கண்டுகொள்ளவில்லை எனவும் மனதுக்குள் வேதனைப்படுகிறீர்கள். இதற்காகவெல்லாம் உட்கார்ந்து கவலைப்பட்டுக் கொண்டு இருக்க வேண்டாம்.
உங்களைப் பிறர் மதிக்கவேண்டும். பாராட்டவேண்டும் என்பது இல்லை. அப்படி நீங்கள் ஆசைப்பட்டதும் ஒரு காலத்தில் நடக்கும்.
உங்களின் உழைப்பின் மூலம் போராடி, வெற்றிபெறும் வரை, உலகம் உங்களைக் கவனிக்காமல்தான் இருக்கும். இன்று அவர் உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர். கவிஞர்! இன்று அவரின் படைப்புகளைப் போட்டி போட்டுக் கொண்டு வெளியிட இருக்கின்றனர்.
ஆனால் அவரின் ஆரம்பகால சூழ்நிலையில் அவரின் படைப்புகள் வாசித்துப் பார்க்காமலேயே தவிர்க்கப்பட்டன.
ஆள் பாதி, ஆடை பாதி என்பது போலத்தான் மதிப்பு. மரியாதையும் போய்ச் சேருகின்றன. ஒருவர் வளரும்வரை போராடும் சூழ்நிலையைச் சந்தித்துத்தான் ஆகவேண்டும்.
போராட்டம் இல்லாமல் வாழ்க்கை இல்லை. போராடுவதற்குப் பயந்து. ஒதுங்கிவிட்டால் வாழ்வில் வெற்றிபெற முடியாது. இன்று வெற்றி பெற்றவர்கள் அனைவரும் போராடித்தான் வந்தனர் யாரும் இரவில், அதிர்ஷ்ட தேவதையின் ஆசியில் உயர்ந்து விடவில்லை.
உங்களை வளர்த்துக் கொள்வதில் அக்கரை கொள்ளுங்கள். உங்களுக்குத் தேவை இல்லாத செயல்களில் கவனம் செலுத்தாதீர்கள். ஏனெனில் கவனம் சிதறிவிட்டால் உங்களின் வெற்றிப் பாதையும் மாறிவிடும் உலகில் தினமும் ஏதாவது நடந்து கொண்டுதான் இருக்கும் எனவே அச்செய்திகளில் ஐக்கியமாகிவிடாதீர்கள்.
இப்பொழுது உங்களின் இலட்சியம் மட்டும்தான் கண்களுக்குத் தெரியவேண்டும். அதற்காக இலட்சியத்தை எட்டும் நோக்கில், குறுக்கு வழியைத் தேர்ந்து எடுக்காதீர்கள்.
உங்களை முழுமையாய்ப் புரிந்துகொண்டு. பின்னர் செயல்படுங்கள். உலகத்தில் ஆயிரம் தொழில்கள் நடந்து கொண்டிருக்கலாம். அத்தனை தொழிலுமே இலாபமானதுதான். ஆனால் அதைச் செய்கின்ற முறையில் செய்யவேண்டும் அப்பொழுதுதான் இலாபம் கிடைக்கும்.
சில நேரங்களில் சுற்றமும், நட்பும் நம்மைச் சரியாக மதிப்பது இல்லை என்ற ஆதங்கம். மனதை ஆளுமை செய்யும். அவர்கள் மதிக்காவிட்டால போகிறது. இதற்காக ஏன் கவலைப்பட்டுக் கொண்டு இருக்கவேண்டும். தேவைபின்றிக் கவலைப்பட்டால் உள்ளமும் உடலும்தான் கெடும்.
யார் மதித்து என்ன ஆகப்போகிறது. அப்படிப் பட்டவர்களைக் கணக்கில் வைத்துக்கொள்ளாதீர்கள் அவர்கள் அனைவரும் வழிப்போக்கர் என நினைத்துக் கொள்ளுங்கள். அப்படி நினைத்துவிட்டால் அவர்களைப் பற்றிய எந்தச் சிந்தனையும் உங்கள் மனதில் பதியாது.
இப்பொழுது உங்கள் சிந்தனையெல்லாம். உங்களைப் பற்றி மட்டும் இருக்க வேண்டும். உங்களின் எதிர் கால வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என சிந்தியுங்கள். அதற்கான உழைப்பை உருவாக்கிச் செயல்படுத்துங்கள். என்றும் உங்களுக்கு நல்ல துணை நீங்களாக மட்டுமே இருக்கமுடியும்.