

வாழ்க்கையில் பெரிய மகிழ்ச்சி, சிறிய மகிழ்ச்சி என வேறுபடுத்திப் பார்க்க வேண்டுமா?
மகிழ்ச்சி என்பது எந்த அளவில் கிடைத்தாலும் அது மனதுக்கு ஒரு புத்துணர்வு தரும் அல்லவா?
இதை விளக்கும் ஒரு கதை.
ஒரு துறவியும், அவரின் சீடனும் நீரோடை ஒன்றைக் கடந்து சென்றார்கள்.
அந்த நீரோடையைக் கடக்க பாலம் இல்லை.
ஆங்காங்கே பெரிய பாறாங்கல்லைப் போட்டு வைத்திருந்தார்கள். அந்தக் கற்களின் மீது தாவித் தாவி அவர்கள் அக்கரைக்குச் சென்றனர்.
சீடன் அந்த பாறாங்கற்களைக் கூர்ந்து பார்த்தான்.
நீரோடையின் வேகத்தை சமாளித்து அவை உறுதியாக நின்றிருந்தன.
அவற்றை சுற்றிலும் சின்ன சின்னதாக, ஏராளமான கற்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன.
அவை நீரோடைக்குள் மூழ்கி கிடந்தன.
'இந்த கற்கள் எதற்கு?' அவனுக்குப் புரியவில்லை.
"நாம் நீரோடையை கடப்பதற்கு இந்த பெரிய பாறாங்கற்களே போதுமே! எதற்கு இங்கே சின்ன சின்ன கற்கள் இருக்கின்றன?" என்று துறவியுடன் கேட்டான் சீடன்.
துறவி சிரித்தபடியே, அவனுக்கு விளக்கினார்.
"நீரோடையின் வேகத்தை இந்த சிறிய கற்களே தாங்கிக் கொள்கின்றன. இவைகள் தரும் ஒத்துழைப்பில்தான் பெரிய பாறாங்கற்கள் உறுதியாக நிற்கின்றன.
பெரிய கற்களை மட்டுமே பார்க்கும் நாம், இந்த சிறிய கற்களின் முக்கியத்துவம் என்ன என்பதையும் உணர்வதில்லை.
வாழ்க்கையில் இப்படித்தான் பலர் இருக்கிறார்கள். திருமணம், குழந்தை பிறப்பது, புதுவீடு கட்டுவது, புது வேலை கிடைப்பது என்று பெரிய பெரிய விஷயங்கள் மட்டுமே மகிழ்ச்சி தரும் என நினைக்கிறார்கள்.
அந்த பெரிய மகிழ்ச்சிகளை தேடித் தேடி, தினசரி கிடைக்கும் சின்ன சின்ன மகிழ்ச்சிகளை அனுபவிக்க மறக்கிறார்கள்.
ஒரு சிறிய பயணம், திடீரென பெய்யும் மழை, பாலிய நண்பருடன் ஒரு திடீர் சந்திப்பு, குடும்பத்துடன் கோயிலுக்கு செல்வது என்று எல்லாமே நமக்கு மகிழ்ச்சி தருபவை தான்!
ஆனால், இந்த சிறிய மகிழ்ச்சிகளை நாம் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. இந்த சின்ன சின்ன மகிழ்ச்சி தருணங்களே நம் வாழ்க்கையை இனிமையாக்குகின்றன..." என்றார் துறவி.
"மிகச் சிறிய விதையிலிருந்துதான், மிகப்பெரிய விருட்சம் வளர்கிறது. ஒரு கிணறு தோண்டும் போது சிறிதாக குமிழ் விட்டு சுரக்கும் ஊற்று தான் அந்தக் கிணற்றை நிறைக்கிறது.
'சிறு துளி பெருவெள்ளம்' என பழமொழி சொல்லி வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள். சிறுசேமிப்பு தரும் பலன்களை உணர்ந்தவர்கள் நாம்.
மிகப் சிறிய அச்சாணியே மிகப்பெரிய வண்டியை இயல்பாக ஓட செய்கிறது. அதனால் சின்ன சின்ன சந்தோஷங்களும், சின்ன சின்ன வெற்றிகளுமே நமக்கு பயணத்தை இனிமையான அனுபவமாக்குகின்றன. அவற்றை நாம் இழந்து விடக்கூடாது என்பது முக்கியம்," என்றார் துறவி.
ஒவ்வொரு நாளிலும் கிடைக்கும் அனுபவங்களையும், மகிழ்ச்சியையும் சேகரித்து வாழ்வை வளமாக்குவோம் ! சபதம் எடுப்போம்!