
நம் வாழ்க்கையில் அனைவரின் குறிக்கோள் வெற்றி பெறுவதாகவே இருக்கிறது. வெற்றி பெற்று வாழ்வில் உயர்ந்து சீரும் சிறப்புமாக பிறர் பாராட்டு வகையில் வாழ வேண்டுமென்பது நம் அனைவரின் முதல் விருப்பமாக உள்ளது. ஆசைப்பட்டால் மட்டும் போதுமா ? அதற்கான சில வழிகளை முறையாக பின்பற்றுபவரை மட்டுமே வெற்றி எளிதில் வந்து சேருகிறது. இனி வாழ்வில் வெற்றி பெற வித்திடும் ஆறு எளிய மந்திரங்களைப் பற்றி இந்த பதிவில் நாம் பார்ப்போம்.
இலக்கு : உங்கள் வெற்றிக்கான இலக்கு என்ன என்பதை நீங்கள் முதலில் தீர்மானிக்க வேண்டும். உதாரணமாக உங்கள் அலுவலகத்தில் உயர்பதவியை அடைய விரும்புகிறீர்கள். இதையே உங்கள் வாழ்வின் வெற்றியாகக் கருதுகிறீர்கள். அப்படியென்றால் இதுதான் உங்கள் இலக்கு. இதற்காக இந்த பதவியை ஏற்கெனவே அடைந்தவர்கள் என்னென்ன வழிமுறைகளைக் கையாண்டார்கள் என்பதை நீங்கள் தெரிந்து அதை நீங்கள் சரியான முறையில் பின்பற்ற வேண்டும்.
தளராத உழைப்பு : எல்லோருமே ஏதோ ஒரு வகையில் உழைக்கிறார்கள். ஆனால் சில சமயங்களில் தொய்வு ஏற்பட்டு மனம் தளர்ந்து போகிறார்கள். வெற்றி என்பது அவ்வளவு எளிதில் உங்களிடம் வந்து சேராது. மனம் தளராத உழைப்பும் ஒருமுகப்படுத்திய உழைப்பும் மிகமிக அவசியம். தேவையில்லாத விஷயங்களைப் பற்றி நீங்கள் யோசிக்கக் கூடாது. இத்தகைய யோசனைகள் உங்கள் இலக்கை திசைதிருப்ப அதிக வாய்ப்புள்ளது.
பணிவு : ஒரு துறையில் வெற்றி பெற முதலில் அவசியம் தேவைப்படுவது பணிவு எனும் முக்கிய பண்பு. முக்கியமாக வியாபாரத் துறையில் வெற்றி பெற நினைப்பவர்களுக்கு இந்த பண்பு அவசியம் தேவை. அனைவரிடமும் பணிவாக நடந்து கொள்ளுங்கள். யாராவது உங்கள் மீது கோபப்பட்டால் பதிலுக்கு உடனே நீங்கள் அவர்கள் மீது கோபப்படாதீர்கள். உங்கள் பக்கம் உள்ள சிரமம் மற்றும் நியாயத்தை எடுத்துக் கூறி அவர்கள் உங்கள் மீது கோபப்பட்டது தவறு என்பதை அவர்களுக்குப் புரிய வையுங்கள்.
நேர்மை : வாழ்வில் அனைவருக்கும் மிகவும் அவசியமான ஒரு பண்பு நேர்மை. நேர்மை உங்களை எந்நாளும் காக்கும். சமுதாயம் நீங்கள் நேர்மையானவராக இருந்தால் உங்களை மரியாதையோடு பார்க்கும். பணியிடத்திலும் வியாபாரத் துறையிலும் நீங்கள் நேர்மையாக நடந்து கொண்டால் அனைவரின் அன்பை சம்பாதிக்கலாம். பிறருக்கு உங்கள் மீது இருக்கும் நேர்மையானவர் என்ற நல்ல மதிப்பு உங்களை பலவழிகளில் உயர்த்தும்.
விடாமுயற்சி : வெற்றி என்பது ஒரே ஒரு முயற்சியில் கிடைத்துவிடுவதில்லை. பல சாதனையாளர்கள் பலமுறை தோற்று பின்னரே தங்கள் விடாமுயற்சியால் வெற்றியை அடைகிறார்கள். இதற்கு அறிவியல் முதல் பல துறை சாதனையாளர்கள் உதாரணமாக உள்ளார்கள். ஒருமுறை தோற்றால் துவண்டு விடாமல் அடுத்த முறை முயற்சி செய்யுங்கள். தோல்விக்கான காரணத்தைக் கண்டறிந்து பிறகொருமுறை முயலும்போது வெற்றிக்கான வாய்ப்புகள் பிரகாசமாகத் தென்படும்.
எளிமை : அனைவரிடமும் எளிமையாக நடந்து கொள்ளுங்கள். எளிமையான வாழ்க்கை முறையைப் பின்பற்றுங்கள். எளிமை சமுதாயத்தில் உங்களுக்கு நன்மதிப்பைப் பெற்றுத்தரும். எளிமையின் மூலம் மனவலிமையும் உங்களுக்குக் கிடைக்கும். மனவலிமை சாதனைகளைச் செய்ய ஒரு பெரிய உந்துகோலாக அமையும்.
இந்த ஆறு மந்திரங்களை மனதில் பதித்து முயன்று பாருங்கள். எளிதில் வெற்றி உங்களைத் தேடிவரும்.