
பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவில் உள்ள ஓஹயோ என்ற இடத்தில் வோர்த்தி டைலர் என்பவருடைய பண்ணைக்கு ஒரு பதினேழு வயது சிறுவன் வேலை தேடி வந்தான். அவனுடைய பெயர் ஜிம் என்பதை தவிர பண்ணையாருக்கு அச்சிறுவனைப் பற்றி எதுவும் தெரியாது. அவனைப் பசுக்களை பராமரிக்கும் வேலைக்கு அமர்த்தினார். பையனும் பசுக்களை மேய்ப்பது மற்றும் விவசாய சம்பந்தமான வேலைகள் செய்வதுமாக இருந்தான். அவன் உறங்கியதோ வைக்கோல் மற்றும் தானியம் சேகரிக்க போடப்பட்டிருந்த பரண்.
இப்படி இருக்கையில் பண்ணையார் மகள் மீது ஜிம்முக்கு காதல் உண்டானது. தைரியமாக பண்ணையாரிடம் சென்று 'நான் உங்கள் மகளை கல்யாணம் செய்துகொள்ள விரும்புகிறேன்' என்றான் ஜிம். பண்ணையாருக்கு வந்ததே கோபம். 'என் பெண்ணை கல்யாணம் செய்ய என்ன தகுதி இருக்கிறது? உன்னிடம் சொத்து இருக்கிறதா; படிப்பு இருக்கிறதா; புகழ் இருக்கிறதா? நீ ஒரு அனாதை' என்று அடுக்கிக் கொண்டே போனார்.
ஜிம் மறுவார்த்தை பேசாமல் தன்னிடம் இருந்த இரண்டொரு துணி மணிகளைதான் வைத்திருந்த ஒரு பழைய கான்வாஸ் பையில் திணித்து கொண்டு பண்ணையை விட்டு வெளியேறினான்.
இது நடந்து 25 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. ஒரு நாள் பண்ணையார் ஆங்கிலத்தில் பார்ன் என்று அழைக்கப்படும் வைக்கோல் மற்றும் தானியங்கள் அடைத்து வைக்கும் அறையை மாற்றி அமைக்க இடிக்க துவங்கினார்.
அப்போது அந்த அறையை தாங்கும் மரத் தூணில் ஜிம் தன்னுடைய முழு பெயரையும் James A. Garfield (ஜேம்ஸ் ஏ கார்ஃபீல்ட்) என்று செதிக்கி வைத்திருந்தது தெரிந்தது. அப்போது ஜிம் என்ற ஜேம்ஸ் ஏ காரிபீல்ட் அமெரிக்க அதிபர் (20th U.S. President) ஆகிவிட்டிருந்தான்!