
சிலர் தங்கள் வாழ்க்கையில் நடந்த கடந்த கால விஷயங்களை மறக்காமல், அவற்றைத் தூக்கி சுமந்துக் கொண்டே செல்வார்கள். ஆனால், நடந்ததை மாற்ற முடியாது என்பதை புரிந்துக் கொண்டு இன்றைக்கான வாழ்க்கையை வாழ முயற்சிப்பதே சிறந்தது. இதைப் புரிந்துக் கொள்ள ஒரு குட்டிக் கதையைப் பார்ப்போம்.
ஒரு ஊரில் வாழ்ந்து வந்த அழகான குருவிக்கு விசித்திரமான பழக்கம் இருந்தது. அது என்னவென்றால், அந்த குருவி தினந்தோறும் தன் வாழ்க்கையில் சந்திக்கும் நல்ல விஷயத்தையும், கெட்ட விஷயத்தையும் சின்ன சின்ன கற்களில் எழுதிக்கொண்டே வந்தது. இந்த பழக்கத்தை குருவி தினமும் செய்வது மட்டுமில்லாமல் அது போகும் இடத்திற்கும் அந்த கற்களை ஒரு பையிலே போட்டு எடுத்துச் சென்றது.
ஆரம்பத்தில் இது நன்றாக இருந்தாலும், போக போக அந்த பையும் கனமானது; குருவியின் வேகமும் குறைந்தது. ஒரு நாள் பெரிய ஆந்தை ஒன்று குருவியைப் பார்த்து, 'நீ எங்கே போனாலும் எதற்காக அந்த பையையும் சேர்த்து சுமந்து செல்கிறாய்?' என்று கேட்க, அதற்கு அந்த குருவி, 'என் வாழ்க்கையில் நடந்த எல்லா நிகழ்வுகளும் என் கூடவே இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அப்போ தான் நான் எதையும் மறக்க மாட்டேன்' என்று கூறியது.
இதைக்கேட்ட ஆந்தை சிரித்துக் கொண்டே சொன்னது, 'இன்றைய நாளை நீ சந்தோஷமாக வாழ்கிறாயா? அல்லது நேற்று நடந்ததை உன் முதுகில் சுமந்துக்கொண்டு பறக்கிறாயா?' என்று கேட்டது. அந்த குருவியோ, ஆந்தை சொன்னது எதுவுமே புரியாமல் அங்கிருந்து பறந்து சென்றது. சில வாரங்களில் குருவியின் பை நிரம்பி வழிகிறது. கடைசியாக குருவியால் அந்த பையை தூக்க தெம்பில்லாமல், பறக்க முடியாமல் கீழே விழுந்து இறந்து விடுகிறது.
அன்றைக்கு இரவு ஆந்தை குருவியின் உடலைப் பார்த்து, 'நீ எல்லாவற்றையும் சுமக்க முயற்சி செய்தாயே தவிர, வாழ முயற்சி செய்யவில்லை!' என்று கூறியது.
இந்தக் கதையில் வந்ததுப் போல நாம் தினந்தோறும் நம் வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயங்களையும், கெட்ட விஷயங்களையும் நினைத்துப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.
ஆனால், கடந்து செல்வது தானே வாழ்க்கை. நேற்று நடந்ததை நம்மால் மாற்ற முடியாது. ஆனால், இன்று நடப்பதை நம்மால் மாற்ற முடியும். எனவே, தலையில் இருக்கும் பாரத்தை இறக்கி வைத்துவிட்டு Forgive, Forget and Move on.