
வாழ்க்கையில் வரும் பல வாய்ப்புகளை ஏதாவது காரணம் சொல்லி நாம் தவிர்த்து விடுவதுண்டு. அவ்வாறு செய்யும் போது, 'சரி அடுத்த வாய்ப்பு வரும் போது பார்த்துக் கொள்ளலாம்' என்று நம் மனதை நாமே தேற்றிக் கொள்வோம். ஆனால், வாய்ப்பு என்பது நமக்கு கிடைக்கும் போதே பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில், அடுத்தமுறை நமக்கு வாய்ப்பு கிடைக்காமலே கூட போகலாம். இதை புரிந்துக் கொள்ள ஒரு குட்டி கதையைப் (motivation story) பார்க்கலாம்.
ஒரு அழகான இளைஞன், விவசாயி ஒருவரின் மகளைத் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று அவரிடம் சென்று அனுமதிக் கேட்டான். அதற்கு அந்த விவசாயி, 'இளைஞனே! நீ என் மகளை மணம் முடிக்க வேண்டும் என்றால், என்னிடம் இருக்கும் மூன்று காளைகளை அடுத்தடுத்து அவிழ்த்து விடுவேன். அந்த மூன்று காளைகளில் ஏதேனும் ஒன்றினுடைய வாலை நீ தொட்டால் போதும். என் மகளை நான் உனக்கு மணம் முடித்து வைக்கிறேன்!' என்று கூறினார்.
இதைக்கேட்ட இளைஞனுக்கு மகிழ்ச்சி; உடனே ஒப்புக் கொண்டான். மாடுகள் அடைக்கப்பட்டிருக்கும் தொழுவத்தின் கதவுகள் திறக்கப்பட்டன. முதலில் ஒரு மாடு வந்தது. மிகவும் முரட்டுத்தனமான தோற்றத்தைக் கொண்ட அந்த மாடு சீறியப்படி பாய்ந்து வந்தது. அதைப் பார்த்த இளைஞன் பயந்து வாலைப் பிடிக்க தயங்கி அடுத்த மாட்டை பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டான்.
சிறிது நேரத்தில் அதைவிட பெரிய மாடு வந்தது. பார்க்கவே பயங்கரமான தோற்றத்துடன் இருந்தது. அவனை முட்டி மோதிக் கொல்வதற்காக ஓடி வந்தது. இளைஞன் அச்சப்பட்டு இதுவும் வேண்டாம், மூன்றாவதாக வருவதைப் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்து வேகமாக ஓடி பாதுகாப்பான இடத்தில் சென்று மறைந்துக் கொண்டான்.
மூன்றாவது முறையாக கதவு திறக்க மூன்றாவது மாடு வந்தது. அந்த மாட்டை பார்த்ததும் இளைஞனின் முகத்தில் புன்சிரிப்பு அவன் வாழ்க்கையில் பார்த்ததில் இதுவே பலவீனமான மாடாக இருந்தது. பார்ப்பதற்கு எலும்பும், தோலுமாக இருந்தது. 'இந்த மாட்டை விடக்கூடாது இதைத்தான் பிடிக்க வேண்டும்!' என்று தீர்மானித்து அதன் வாலை தொடுவதற்கு தயாராக இருந்தான் இளைஞன்.
மாடு அருகில் வந்ததும் ஒரு தாவுத்தாவி மாட்டினுடைய வாலை தொடப்போனான். ஆனால் அதிர்ச்சியடைந்தான். ஏனெனில், அந்த மாட்டுக்கு வாலேயில்லை!
நம் வாழ்க்கையிலும் இப்படித்தான் பல வாய்ப்புகள் நமக்கு வழங்கப்படுகிறது. அதில் சில வாய்ப்புகள் எளிமையாக தோன்றலாம். சில வாய்ப்புகள் கடுமையாக தோன்றலாம். எப்படி வாய்ப்புகள் வந்தாலும் அதை நழுவ விடாமல் பயன்படுத்திக் கொண்டால் நிச்சயம் வெற்றி பெறலாம். முயற்சித்துப் பாருங்களேன்.