வெற்றி மீது வெற்றி சர்வ நிச்சயம்!

எம்.ஜி.ஆர் - சிவாஜி...
எம்.ஜி.ஆர் - சிவாஜி...

திரைத்துறையில் எம்.ஜி.ஆருக்கு நம்பியார் அல்லது எம்.ஆர் ராதா தான் வில்லன். தொழில் ரீதியாக அவர்களுக்குள் போட்டி கிடையாது. சிவாஜிதான் தொழில் முறையில் போட்டி.

இருவரும் நட்பாக இருந்தாலும் ஒருவரை ஒருவர் வெற்றி பெறுவதற்கான அறிவிக்கப்படாத யுத்தம் எப்போதும் நடந்து கொண்டே இருந்தது. மாபெரும் திறமைசாலி, பிறவிக் கலைஞன், நடிப்பில் இமயம் என்று சிவாஜி வெற்றி பெற்றார். எம்.ஜி.ஆர் அடைந்த அரசியல் உயரத்தை சிவாஜி எட்டாமல் போனதற்குக் காரணம் என்ன? சிவாஜியின் கலை உலக இடத்தை எம்.ஜி.ஆர். எட்டாதது ஏன்? திறமைசாலிகள் தங்கள் திறமைகளை மட்டுமே. நம்புகிறார்கள். மற்றவர்களின் லாப நஷ்டங்களைவிட தம்முடைய திறமை மீதான கர்வம் அவர்களை மெல்ல மெல்ல பிறரிடமிருந்து  தனிமைபடுத்துகிறது. மக்கள் யாரைத் தேர்ந்தெடுத்து வெற்றி பெறச் செய்கிறார்கள். திறமைசாலிகளை அல்ல. நீங்கள் மக்கள் மீது அன்பு மரியாதை நட்பு  வைத்திருந்தால் மக்கள் நேசிப்பார்கள். அப்படிப்பட்ட எம்.ஜி.ஆரை புரட்சித் தலைவராக உயர்த்தியது மக்கள்தான்.

பல லட்சம் மக்களின் அபிமானத்திற்கும் அன்பிற்கும் உரிய எங்கள் வீட்டுப் பிள்ளையாகி, தலைவராகி  முதல்வராகி  கடற்கரையில் அவர் தலைவர் அறிஞர்  அண்ணாவுக்கு நிகராக  நினைவிடம் கொள்ளும் அளவில் வெற்றி பெற்றார்.

காந்தியால் அறிவாளி என்று ஒப்புக் கொள்ளப்பட்ட இராஜாஜியின் பின்னால் மக்கள் திரளவில்லை. மக்கள் மீது எல்லையில்லா பரிவு வைத்திருந்த காந்தியின் பின்னால்தான் மக்கள் திரண்டார்கள். அன்பின் மூலமாகவே உலகை வெல்லலாம். ஆற்றலுக்கு வெற்றி தோல்வி உண்டு அன்பிற்கு தோல்வியே இல்லை.

பண்டிட் ஜவஹர்லால் நேருவின் புகழுக்கு பல காரணங்கள்  உண்டு. ஒரு நாள் இரவு நேரு மாடியில் உள்ள தன் அறைக்குப் போனபோது அவரது அறையைக் காவல் காத்துக் கொண்டிருந்த காவலர் தூங்கிக் கொண்டிருந்தார். அவரை தொந்திரவு செய்ய வேண்டாம் என்ற  நேரு தன்னிடம் இருந்த மாற்று சாவி மூலம் ஓசைப்படாமல் கதவைத் திறந்தார். இந்த மனிதாபிமானத்தையே  மிகப்பெரிய வெற்றி ரகசியம்  என்று வெளிநாட்டுப் பத்திரிகையாளர் ஒருவர் குறிப்பிடுகிறார்.

இதையும் படியுங்கள்:
கோடை வெப்பத்தைத் தணிக்கும் அருமருந்து வெள்ளரிக்காய்!
எம்.ஜி.ஆர் - சிவாஜி...

மனித நேயம் உடையவர்கள் பெரும் புகழ் பெறுகிறார்கள். தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை தமது அரசின் முரசுக்  கட்டிலில் களைப்பால் உறங்கிய மோசிகீரன் என்ற புலவரைக் கண்டதும்  காவலரிடம் கையை நீட்டினான். வெட்டவோ என்ற வாளை வீசிவிட்டுப் புலவருக்கு வீசவே  என்று வெண்சாமரம் கேட்டான். அந்த பண்பல்லவா பாராட்டு பெற்றது.   

இயேசு பிரான் தமது அறிவின் முலம் உலகை வென்றார் என்பதைவிட ஆழமான  அன்பின் மூலமே உலகை வென்றார் என்பதே உண்மை. திறமை உள்ளவர்களுக்கு வெற்றி நிச்சயம்.

திறமை உள்ளவர்கள் மக்கள் சமுதாயத்தின் மீது  அன்பும் நம்பிக்கையும் உள்ளவரானால் வெற்றி சர்வ நிச்சயம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com