

இன்றைய போட்டி நிறைந்த உலகில், அறிவுத்திறன் மட்டும் ஒருவரை வெற்றியாளராக மாற்றிவிடுவதில்லை. மற்றவர்களைக் கையாளுவதிலும், நம்மை நாம் வெளிப்படுத்தும் விதத்திலும் இருக்கும் நுணுக்கமான ஆளுமைத் திறன்களே நம்மை ஒரு தனித்துவமான மனிதராகக் காட்டுகின்றன.
1. நிதானமாகப் பேசுங்கள்
பேசும்போது வார்த்தைகளை தெளிவாகவும் நிதானமாகவும் உச்சரித்து பேசவேண்டும். வேக வேகமாக பேசுவது ஒருவரை பதற்றமானவராக காட்டும். நிதானமான பேச்சு உங்கள் கருத்துக்களில் நீங்கள் நம்பிக்கையுடன் இருப்பதை உணர்த்து.ம் மற்றவர்களை அதிக மரியாதையுடன் உங்களை கவனிக்க வைக்கும்.
2. மௌனத்தின் வலிமை
யாராவது உங்களை சங்கடப்படுத்தும் விதமாகப் பேசினால் அல்லது பதில் கூறத் தயங்கும் ஒரு கேள்வியைக் கேட்டால், உடனடியாகப் பதில் கூற வேண்டாம். சில வினாடிகள் மௌனமாக இருந்து அவர்கள் கண்களைப் பாருங்கள். அந்த அமைதி, எதிராளியைத் தன் தவறை உணரச்செய்யும் அல்லது பதற்றமடையச் செய்யும்.
3. கண்களின் மொழி
நேர்காணலாக இருந்தாலும் சரி, நண்பர்களுடனான உரையாடலாக இருந்தாலும் சரி, பேசும்போது நேராகக் கண்களைப் பார்த்துப் பேசுவது உங்கள் துணிச்சலைக் காட்டும். இது உங்களை ஒரு நேர்மையான மற்றும் ஆளுமைமிக்க மனிதராகச் சித்தரிக்கும்.
4. புன்னகையும் முதல் சந்திப்பும்
ஒருவரை முதன்முதலில் சந்திக்கும்போது, ஒரு சிறிய புன்னகையுடன் கைகுலுக்குங்கள். அது ஒரு நேர்மறையான பிம்பத்தை உருவாக்கும். உங்களைச் சந்திப்பது அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது என்ற உணர்வை இது ஏற்படுத்தும்.
5. பெயர்களை நினைவில் கொள்ளுங்கள்
மனிதர்களுக்குத் தங்கள் பெயரை பிறர் சொல்லக் கேட்பது மிகவும் பிடிக்கும். உரையாடலின்போது ஒருவரது பெயரைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்துவது, அவர்கள் மீது நீங்கள் காட்டும் அக்கறையைக் குறிக்கும். இது உடனடி மரியாதையை, நட்புணர்வை உருவாக்கும் ஒரு ரகசியமாகும்.
6. உடல் மொழி
இருக்கையில் கூனிக்குறுகி அமர்வதைத் தவிர்த்து, நிமிர்ந்து உட்காருங்கள். நேரான, நிமிர்ந்த உடல் மொழி உங்களை அணுகக் கூடியவராகவும், தன்னம்பிக்கை மிக்கவராகவும் காட்டும். நிற்கும்போது கைகளைக் கட்டிக்கொண்டு நிற்பதைத் தவிர்ப்பது நல்லது.
7. சிறந்த உரையாடல்
தான் மட்டும் பேசிக்கொண்டிராமல் மற்றவர்களையும் பேச அனுமதியுங்கள். "இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" என்பது போன்ற கேள்விகளைக் கேட்பது, அவர்களை முக்கியமானவர்களாக உணரச்செய்யும். சிறந்த உரையாடல் என்பதுதான் மட்டும் பேசுவதல்ல, மற்றவர்களைப் பேச வைப்பதே!
8. 'இல்லை' என்று சொல்லப் பழகுங்கள்
உங்களால் முடியாத ஒரு விஷயத்திற்குத் தயங்காமல் 'இல்லை' என்று சொல்லுங்கள். எல்லாவற்றிற்கும் 'ஆம்' என்று சொல்பவர்கள் எளிதில் மதிக்கப்படுவதில்லை. உங்கள் எல்லைகளை வரையறுப்பது உங்கள் ஆளுமையின் வலிமையைக் கூட்டும்.
9. மன அழுத்த மேலாண்மை
வேலைப்பளு மற்றும் நெருக்கடியான சூழல்களில் பதற்றமடையாமல் நிதானமாகச் செயல்படும் திறன் இது. சவாலான நேரங்களில் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி, தெளிவான முடிவுகளை எடுப்பவர்கள் பணியிடத்தில் பெரும் மரியாதையைப் பெறுவார்கள்.
1௦. விமர்சனங்களை ஏற்கும் பக்குவம்
மற்றவர்கள் சொல்லும் குறைகளை அல்லது ஆலோசனைகளைத் தனிப்பட்ட தாக்குதலாக எடுத்துக்கொள்ளாமல், நம்மைத் திருத்திக் கொள்வதற்கான வாய்ப்பாகக் கருதுவது மிகச்சிறந்த பண்பு. இது ஒருவரைத் தொடர்ந்து வளரச்செய்யும்.
இந்த ஆளுமை ரகசியங்கள் அனைத்தும் ஒரு இரவில் வந்துவிடாது. ஆனால், இவற்றைப் அன்றாட வாழ்க்கையில் மெல்லப் பயிற்சி செய்தால், எந்தவொரு கூட்டத்திலும் நீங்கள் ஒரு தவிர்க்க முடியாத ஆளுமையாக உருவெடுப்பீர்கள் என்பதில் ஐயமில்லை!