

சில சமயங்களில், ஏன் என்றே தெரியாமல் ஒரு இனம் புரியாத சோகம், வெறுமை அல்லது கவலை வந்து நம்மை ஆட்டிப்படைக்கும். காரணமே இல்லாமல் எதற்கெடுத்தாலும் எரிச்சல் வரும். எதிலும் ஆர்வம் இல்லாமல் போகும். ‘ஏன் இப்படி இருக்கிறது?’ என்று அளவுக்கு அதிகமாக யோசிப்பது இன்னும் கூடுதலான மன அழுத்தத்தையே உருவாக்கும்.
உண்மையில், இது மனதின் நிரந்தரப் பிரச்னை அல்ல. நம் மூளையில் சுரக்கும் வேதிப்பொருட்களின் ஒரு தற்காலிகச் சமநிலையின்மை மட்டுமே. இதிலிருந்து மீள, உலகப் புகழ்பெற்ற நரம்பியல் நிபுணர்கள் பரிந்துரைக்கும் நான்கு நவீன உத்திகளைப் பற்றி இங்கே பார்ப்போம்.
1. 30 வினாடி குளிர்ந்த நீர் சிகிச்சை:
நமது மூளையில் உள்ள 'அமிக்டலா' என்ற பகுதிதான் பயம் மற்றும் சோகம் உருவாகக் காரணமாக இருக்கிறது. இதற்கு ஒரு திடீர் அதிர்ச்சியைக் கொடுப்பதன் மூலம் இந்த நிலையை மாற்றமுடியும்.
பயிற்சி: முகத்தில் மிகக் குளிர்ந்த நீரைத் தெளிக்க வேண்டும் அல்லது ஓர் ஐஸ்கட்டியை உள்ளங்கையில் 30 வினாடிகள் வைத்திருக்க வேண்டும்.
பலன்: திடீரென உடல் வெப்பநிலை மாறும்போது, மூளை தனது கவனத்தை முழுவதுமாக அந்த மாற்றத்திற்குத் திருப்பும். இதனால் தேவையற்ற எண்ண ஓட்டங்கள் உடனடியாக நின்று, உடல் ஒருவித அமைதி நிலைக்குத் திரும்பும்.
2. 5-4-3-2-1: காரணமே இல்லாமல் வருத்தமோ, கோபமோ, சோகமோ மனதில் எழும்போது, மனம் கடந்த காலத்திலோ அல்லது எதிர்காலத்திலோ உலவிக்கொண்டிருக்கும். அதை இந்த நிமிடம் அல்லது நிகழ்காலத்திற்குச் சரியாகக் கொண்டு வரவேண்டும்.
பயிற்சி: உங்களைச் சுற்றியுள்ள 5 பொருட்களைப் பாருங்கள்; 4 ஒலிகளைக் கேளுங்கள்; 3 பொருட்களைத் தொட்டு உணருங்கள்; 2 வாசனை அல்லது மணங்களை நுகருங்கள்; 1 பொருளின் சுவையை நினைத்துப் பாருங்கள் (அல்லது ஒரு மிடறு தண்ணீர் குடிக்கலாம்).
பலன்: இந்தப் பயிற்சி உங்கள் ஐம்புலன்களையும் தூண்டி, மூளையைத் தற்போதைய சூழலில் நிலைநிறுத்தும். இதனால் காரணமில்லாத மனச்சோர்வு சட்டென்று விலகும்.
3. நிமிர்ந்த நடை மற்றும் வெற்றிப் பாவனை:
ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக ஆய்வுகளின்படி, நமது உடல் மொழி நமது ஹார்மோன்களை நேரடியாக மாற்றுகிறது. சோகமாக இருக்கும்போது நாம் பொதுவாகக் கூன் போட்டு அமர்ந்திருப்போம்.
பயிற்சி: கைகளை இடுப்பில் வைத்துக்கொண்டு, தோள்களை உயர்த்தி நிமிர்ந்து நில்லுங்கள். ஒரு நிமிடம் இப்படி இருந்தால், உடலில் 'கார்டிசோல்' என்னும் அழுத்த ஹார்மோன் குறைந்து தன்னம்பிக்கை பிறக்கும்.
பலன்: உடல் நிமிரும்போது, "நாம் வலிமையாக இருக்கிறோம்" என்று மூளை நம்பத் தொடங்கி, மகிழ்ச்சியான வேதிப்பொருட்களைச் சுரக்கச் செய்யும்.
4. நன்றியுணர்வுடன் கூடிய உற்சாகம்:
நமது மூளையில் 'செரோட்டோனின்' அளவு குறையும்போதுதான் வெறுமை உணர்வு உண்டாகிறது. இதைச் செயற்கையாகத் தூண்ட ஒரு எளிய வழி இருக்கிறது.
பயிற்சி: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த மிகச்சிறிய நல்ல விஷயம் ஒன்றை நினைத்துப் பாருங்கள். அது நீங்கள் பருகிய சுவையான காபியாகவோ, நீங்கள் செய்த சிறு நற்செயலாகவோ அல்லது யாரோ ஒருவரின் புன்னகையாகவோ இருக்கலாம். அதை ஒரு காகிதத்தில் எழுதுங்கள்.
பலன்: மனதில் நன்றியுணர்வு ஏற்படும்போது மூளையின் ஒரு பகுதி சுறுசுறுப்பாகி, உடனடி மன மாற்றத்தை ஏற்படுத்தும்.
மனச்சோர்வு என்பது தற்காலிகமான ஒன்றுதான். அதை உடனடியாக விரட்டியடித்துவிட்டு உற்சாக மனநிலைக்கு வர வேண்டியது அவசியம். இந்த நான்கு நுட்பங்களைப் பயன்படுத்தினால் உடனே ஒரு நல்ல மாற்றத்தை நீங்கள் உணரலாம்.