

சாணக்கியர் அரசியலுக்கு இலக்கணம் வகுத்தவர். அரசருக்கு மட்டுமின்றி சாதாரண குடிமக்களுக்கும் அவர் போதனைகளை கூறியுள்ளார். வாழ்க்கையின் ஒவ்வொரு செயலிலும் வெற்றி பெறுவதற்கு நாம் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளைப் பற்றி அவர் போதித்துள்ளார். அவர் எழுதிய அர்த்தசாஸ்திரம் என்ற நூல் ஒரு அரசன் அல்லது அரசியல்வாதி எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கான முழுமையான வழிகாட்டியாக விளங்குகிறது. இந்த நூல் அரசியல், பொருளாதாரம், திருமணம் வாழ்க்கை, நட்பு போன்ற வாழ்க்கையின் முக்கியமான செயல்பாடுகளில் நாம் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை விளக்கி உள்ளது.
2000 ஆண்டுகளைக் கடந்தும் சாணக்கியரின் நீதி வழிமுறைகள் இன்றளவும் மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. சாணக்கியரின் சிந்தனைகள் ஒவ்வொன்றும், பல நூற்றாண்டுகளை கடந்தும் இன்றும் வாழ்க்கைக்கு தேவையான முக்கியமான அறிவுரைகளாக இருக்கிறது. அவரின் வாக்கின்படி ஒவ்வொரு தனிநபருக்கும் ஏதேனும் ஒரு எதிரி இருக்க வாய்ப்புள்ளது. ஆனால், அந்த எதிரியை யாரென்று கண்டுபிடிக்காவிட்டாலும், அவரின் நடவடிக்கைகளை கண்டுகொள்ளாமல் விட்டாலும் அது நமது அழிவுக்கு வழிவகுக்கிறது. வாழ்க்கையில் நாம் செய்யும் மிகப்பெரிய தவறுகளில் ஒன்றாக இது இருக்கும்.
எதிரிக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் போதும், உங்களுக்கு எதிராக சதி செய்து உங்களை அழிக்க தயாராக இருப்பார்கள். அதனால், எதிரிகளை அறிந்துகொள்வதும் அவர்களது நடவடிக்கைகளை கண்காணிப்பதும், வாழ்க்கையில் வெற்றிபெற பெரிய வழியாக இருக்கும். எதிரி என்பவர் சொந்தப் பகை வைத்திருப்பவர் மட்டுமல்ல, உங்களை போட்டியாக நினைப்பவரும் எதிரிதான். தொழிலில் போட்டியாக இருப்பவர், அலுவலகத்தில் உங்களை வேலையை விட்டு தூக்க நினைப்பவர்களும் எதிரிதான். இதற்காக சாணக்கியர் வழங்கியுள்ள அறிவுரைகளை பார்ப்போம்.
நீங்கள் பழகுபவருடன் கவனமாக இருங்கள்:
ஒரு மனிதனின் எதிர்காலமும் அவரின் வெற்றியும் அவரது நண்பர்களால் தீர்மானிக்கப்படுகிறது. உங்களது பெரும்பாலான நேரங்கள் அனைத்தும் குடும்பத்தினை தவிர நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுடன் செலவிடப்படுவதால் உங்களின் நல விரும்பிகள் யார்? உங்களின் எதிரிகள் யார்? என்பதை அறிந்து கொள்வது அவசியம். தவறான சகவாசம், உங்களின் பலவீனங்களை உங்களது எதிரி அறிந்து கொள்ள வாய்ப்பாக அமைகிறது. எனவே, நீங்கள் யாருடன் நேரத்தைச் செலவிடுகிறீர்கள் என்பதில் எப்போதும் கவனமாக இருக்கவேண்டும்.
உங்கள் பேச்சைக் குறையுங்கள்:
பலருக்கும் பலமாகவும் பலவீனமாகவும் இருப்பது அவரது பேச்சு தான். கடுமையாக பேசுவதும், நியாயம் இல்லாமல் பேசுவதும் உங்களை சுற்றி உள்ளவரை உங்களை விட்டு பிரித்துவிடும். நீங்கள் கவனக்குறைவாக விட்ட வார்த்தைகளை, உங்களின் எதிரி சரியாக பயன்படுத்திக்கொண்டு உங்களுக்கு எதிரான ஆயுதமாக மாற்றுவார். குறைவாக பேசுவதும் இனிமையாக பேசுவதும், உங்கள் நண்பர்களையும் உங்களை சுற்றி உள்ள உறவுகளையும் வலுப்படுத்த உதவும்.
தவறான பழக்கங்களை கைவிடுங்கள்:
போதை பழக்கம் ஒருவரின் அறிவையும் திறனையும் பாதித்து , அவரின் சிந்தனையை குறைத்துவிடுகிறது. போதையில் முழுகிக் கொண்டிருக்கும் ஒரு நபரால் எந்த ஒரு நல்ல முடிவும் எடுக்க முடியாது. இந்த பழக்கமும் அதன் விளைவுகளும் உங்கள் எதிரிக்கு சாதகமாக மாறிவிடும். அதனால் போதை உள்ளிட்ட கெட்ட பழக்கங்களிலிருந்து விடுபட தொடங்குங்கள்.
எதிரியை புரிந்துகொள்ளுங்கள்:
எதிரியை எப்போதும் குறைவாக மதிப்பிடக் கூடாது, எந்த போரிலும் வெற்றிபெற, எதிரியின் பலத்தை அறிந்துகொள்வது அவசியம். உங்கள் எதிரிகளின் இயல்பு, பலம் மற்றும் பலவீனங்களை நீங்கள் அறிந்தால், அவர்களை எதிர்கொள்வது எளிதாக இருக்கும். எதிரியின் செயல்பாடுகளை எப்போதும் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும்.
சாணக்கியரின் இந்த அறிவுரைகளை பின்பற்றினால் எந்த ஒரு செயலிலும் எதிரியை வென்று, உங்கள் பாதையில் முன்னேறிக்கொண்டே இருக்கலாம்.