

நம்மில் பலருக்கும் மற்றவரிடம் வேலை செய்வதைவிட, நமக்குப் பிடித்தமான ஒரு தொழிலைச் சொந்தமாகத் தொடங்கவேண்டும் என்ற கனவு இருக்கும். ஆனால், அதை எப்படித் தொடங்குவது, எங்கு ஆரம்பிப்பது என்ற தயக்கம் நம்மைத் தடுக்கும். ரேச்சல் பிரிட்ஜ் எழுதிய "How to Work for Yourself" என்ற புத்தகம், இந்தத் தயக்கங்களை உடைத்து ஒரு வெற்றிகரமான தொழில்முனைவோராக மாறுவதற்கான எளிய வழிமுறைகளை வழங்குகிறது.
1. சிறிய தொடக்கம்:
பலர் ஒரு புதுமையான ஐடியா கிடைத்த பிறகுதான் தொழில் தொடங்க வேண்டும் என்று காத்திருப்பார்கள். மிகப்பெரிய அளவில் யோசனை வந்த பிறகுதான் தொழில் தொடங்கவேண்டும் என்று நினைக்காதீர்கள். உங்களுக்கு நன்றாகத் தெரிந்த வேலையை அல்லது தொழிலைத் தொடங்கலாம். ஆரம்பமே பிரம்மாண்டமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. சிறிய தொடக்கமே போதுமானது.
2. பல பொறுப்புகள்:
சொந்தத் தொழில் என்றால் நீங்கள் வெறும் முதலாளி மட்டுமல்ல. ஆரம்பக் காலத்தில் விற்பனை, விளம்பரம், கணக்கு வழக்கு என அத்தனையையும் நீங்களே கவனிக்க வேண்டியிருக்கும். அனைத்துத் துறைகளிலும் அடிப்படை அறிவை வளர்த்துக்கொள்வது அவசியம்.
3. பணப்புழக்கமே உயிர்நாடி:
வெறும் ஆர்வம் மட்டும் ஒரு தொழிலைக் காப்பாற்றிவிடாது. நிறுவனத்திற்குத் தொடர்ந்து வருமானம் வருகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பெரிய கனவுகளைவிட, கையில் இருக்கும் பணப்புழக்கமே தொழிலைத் தடையின்றி நகர்த்தும்.
4. சிறிய அளவில் தொடங்குங்கள்:
உடனே வேலையை ராஜினாமா செய்துவிட்டுப் பெரிய முதலீட்டில் இறங்குவது ஆபத்தானது. முதலில் பகுதி நேரமாக செய்து பாருங்கள். அதில் ஓரளவு வெற்றி கிடைத்த பிறகு முழு நேரமாகத் தொடங்கலாம்.
5. நிதி மேலாண்மை:
வரி செலுத்துதல், லாப நஷ்டக் கணக்கு, விலை நிர்ணயம் போன்றவற்றில் அடிப்படைத் தெளிவு இருக்கவேண்டும். பண விஷயத்தில் காட்டும் கவனக்குறைவு எவ்வளவு பெரிய தொழிலையும் முடக்கிவிடும்.
6. விளம்பரம் என்பது கட்டாயம்:
“நான் தரமான பொருளைத் தயாரிக்கிறேன், மக்கள் என்னைத் தேடி வருவார்கள்" என்பது பழைய காலம். இன்றைய உலகில் உங்களை நீங்களே முன்னிலைப்படுத்திக்கொள்ள வேண்டும். மார்க்கெட்டிங் செய்யத் தயங்கினால் உங்கள் தொழில் வெளியுலகிற்குத் தெரியாமலே போய்விடும்.
7. தனிப்பட்ட பிராண்டை உருவாக்குங்கள்
தொழில் என்பது ஒரு உறவு போன்றது. உங்கள் மீதான நம்பகத்தன்மை, நேர்மை மற்றும் சொன்ன நேரத்திற்கு வேலையை முடித்துக் கொடுக்கும் குணம் ஆகியவைதான் உங்களுக்கான ஒரு 'பிராண்ட்' மதிப்பை உருவாக்கும்.
8. நேர மேலாண்மை:
சொந்தத் தொழில் என்றால் எப்போது வேண்டுமானாலும் வேலை செய்யலாம் என்ற சுதந்திரம் உண்டு. ஆனால், அந்தச் சுதந்திரமே உங்கள் எதிரியாகவும் மாறலாம். ஒரு மேலதிகாரி இல்லை என்ற குறையை உங்கள் சுய ஒழுக்கத்தின் மூலம் சரிசெய்ய வேண்டும்.
9. லாபமும், நஷ்டமும்:
சுய தொழிலில் ஒவ்வொரு மாதமும் ஒரே மாதிரியான வருமானம் வராது. சில மாதங்கள் லாபம் கொட்டும், சில மாதங்கள் சோதனையாக இருக்கும். இந்த நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்ளும் மனவலிமை உங்களுக்கு வேண்டும்.
10. தொடர் கற்றலே வெற்றியின் ரகசியம்
சந்தை மாறிக்கொண்டே இருக்கிறது. புதிய தொழில்நுட்பங்கள், கருவிகள் மற்றும் உத்திகளை உடனுக்குடன் கற்றுக்கொள்வதன் மூலமே போட்டியில் நிலைத்து நிற்க முடியும்.
11. மற்றவர்களின் உதவி:
சுய தொழில் என்பது ஒரு தனிமைப் பயணமல்ல. வழிகாட்டிகள் மற்றும் ஒத்த கருத்துடைய நண்பர்களுடன் தொடர்பில் இருங்கள். தெரியாத விஷயங்களை கேட்டுத் தெரிந்துகொள்வது உங்கள் பயணத்தை எளிதாக்கும்.
12. வெற்றிக்கான இலக்கை தீர்மானித்தல்:
அதிக வருமானம் ஈட்டுவது மட்டும்தான் வெற்றி என்பதில்லை. உங்களுக்குக் கிடைக்கும் சுதந்திரம், மனநிம்மதி அல்லது நீங்கள் உருவாக்கும் தாக்கம் இதில் எது உங்கள் வெற்றி என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.
சுயதொழில் என்பது ஒரு சாகசப் பயணம் போன்றது. ரேச்சல் பிரிட்ஜ் சொல்வது போல, சரியான திட்டமிடலும், தளராத உழைப்பும் இருந்தால், நீங்களும் 'பாஸ்' ஆகலாம்.