

உலகப் பணக்காரர்களில் அமெரிக்காவைச் சேர்ந்த ஹென்றி ஃபோர்டு முக்கியமானவர். அவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வேலைத்தேடி தொழில் செய்து வாழ்க்கையில் முன்னேறிய கார் கம்பெனி அதிபர்.
ஒரு முறை பத்திரிகை நிருபர் ஒருவர், அவரைப் பேட்டி எடுக்கும்போது, "தங்கள் வெற்றிக்கு அடிப்படை என்ன? நீங்கள் எப்பொழுது கோடீஸ்வரர் ஆனீர்கள்? என்று கேட்டார்.
அதற்கு ஹென்றி ஃபோர்டு, "நான் உங்களுக்கெல்லாம் தெரியும் முன்பே, சிறுவனாக இருந்தபோதே கோடீஸ்வரன்தான்." என்று பதிலளித்தார்.
நிருபர் குழப்பத்துடன் "நீங்கள் இளம் வயதில் வறுமையில் சிரமப்பட்டீர்களே?" என்று கேட்க, அதற்கு ஹென்றி ஃபோர்டு "புரியவில்லையா? நான் எப்போது கோடீஸ்வரனாக நினைத்தேனோ, அன்றே என்னைக் கோடீஸ்வரனாகப் பார்த்துக்கொண்டேன். அதனால்தான் கோடீஸ்வரனுக்குரிய தன்னம்பிக்கையுடன் செயல்பட முடிந்தது." என்று சொன்னார்.
"நீ எதுவாக எண்ணுகிறாயோ அதுவாக ஆவாய்" என்பது கீதாச்சாரம்.
ஹென்றி ஃபோர்டு சிறுவயதிலேயே தனது இலக்கைத் தெளிவாகக் குறித்துக் கொண்டார். தான் வருங்காலத்தில் நிச்சயம் ஒரு கோடீஸ்வரன் ஆவேன் என்ற தன்னம்பிக் கையுடன் உழைத்தார். எனவே அவரால் கோடீஸ்வரனாக உயர முடிந்தது.
"உலகைச் சுற்றி எண்பது நாட்கள்" என்ற உலக பிரசித்தி பெற்ற நூலை எழுதியவரும், விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட கற்பனை கதைகளை எழுதி உலகப் புகழ்பெற்ற 'ஜுல்ஸ் வெர்னி' வேறு துறைகளில் சம்பாதிப்பதற்கு வாய்ப்பு இருந்தும் தாமாகவே எழுத்து துறையை தேர்ந்தெடுத்துக் கொண்டார்.
'ஒரு பலூனில் ஐந்து வாரங்கள்' என்ற கற்பனை நாவலை எழுதி 14 பதிப்பாளர்களிடம் கொடுத்த போதும் அதை திருப்பிக் கொடுத்து விட்டார்கள். வெர்னி நொந்து போய் கோபத்தில் அந்த கையெழுத்து பிரதியை அடுப்பில் தூக்கி வீசினார். ஆனால் அவருடைய மனைவி அதனைக் காப்பாற்றி அதை ஒரு பதிப்பாளரிடம் அனுப்பி வைத்தார்.
பதிப்பகத்தார் ஒரு பலூனில் ஐந்து வாரங்கள் என்ற புத்தகத்தை வெளியிட அமோகமாக விற்பனையாகி, உடனடியாக 20 உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.
ஜுல்ஸ் வெர்னி வேறு தொழில்களைப் பார்க்க வாய்ப்பு இருந்தும் தனக்குப் பிடித்தது என்பதற்காக எழுத்து துறையில் ஈடுபட்டு அதில் மிகப்பெரிய போராட்டம் நடத்தி, தனது தன்னம்பிக்கையிலும், விடாமுயற்சியிலும் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளராகி ஏராளமான பணமும், புகழும் சம்பாதித்தார்.
தன்னம்பிக்கையையும் அதற்கேற்ற உழைப்பும் மனிதனை எவ்வாறு உயர்த்தும் என்பதற்கு இவர்கள் உதாரணம்.