

பயணம். நம் வாழ்வில் இன்றியமையாத ஒரு விஷயம். ஒரே இடத்தில் அதே மனிதர்களை திரும்பத்திரும்ப பார்த்து பேசி பழகி வாழும்போது ஒரு கட்டத்தில் காரணமே இல்லாமல் நமக்கு சலிப்பும் சோர்வும் ஏற்படுவதை உணர்கிறோம். எந்த ஒரு விஷயத்தையும் திரும்பத் திரும்ப செய்துகொண்டே இருந்தால் நம் மனதில் ஒருவித சோர்வும் சலிப்பும் எழுவது இயற்கையே. இதற்காகத்தான் பயணம் நம் வாழ்வில் அவசியமாகிறது.
சமீபத்தில் ஒரு ஆய்வில் அடிக்கடி பயணம் செய்வதன் மூலம் நமது மன உளைச்சல், பதற்றம், மனச்சோர்வு அகியவை வெகுவாகக் குறைந்து மனமானது உற்சாகமடைந்து நமது ஆயுளையும் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கச்செய்கிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது உண்மையாக இருக்குமா என்றால் நிச்சயம் உண்மைதான். பயணம் நமக்கு ஒரு புது உலகத்தைக் காண்பிக்கிறது. பயணம் செய்வதன் மூலம் நமக்கு புதுப்புது அனுபவங்கள் கிடைக்கின்றன. புதிய சூழ்நிலை, புதிய மனிதர்களை சந்தித்தல், புதிய உணவுகள் முதலானவை நமது மனதிற்கு ஒருவித உற்சாகத்தைத் தரும்.
பயணங்கள் நமது மனதை விசாலமாக்கும். எல்லோரும் நம்மவர்கள் என்ற ஒற்றுமை உணர்வையும் ஏற்படுத்தும். நம்மைச் சுற்றி உள்ளவர்களை எப்படி அனுசரித்து நடப்பது என்பதையும் நமக்குக் கற்றுக்கொடுக்கும்.
தான் வசிக்கும் இடத்தை விட்டு எங்குமே செல்லாதவர்களின் அணுகுமுறைக்கும் அடிக்கடி பயணிப்பவர்களின் அணுகுமுறைக்கும் அதிக வித்தியாசம் இருக்கும். அடிக்கடி பயணிப்பவர்கள் பொதுவாக விட்டுக்கொடுத்து வாழும் மனப்பான்மை உள்ளவர்களாக இருப்பார்கள். எத்தகைய சூழ்நிலையிலும் பதட்டப்படாதவர்களாக இருப்பார்கள். எல்லோரிடத்திலும் நட்புணர்வோடும் புன்னகை முகத்தோடும் பழகுபவர்களாக இருப்பார்கள். இத்தகையவர்களுக்கு நேர்மறை சிந்தனை சற்று அதிகமாகவே இருக்கும். காரணம் அவர்கள் பயணங்களின்போது வாழ்க்கையின் மற்றொருபுறத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கிறது.
பரந்து விரிந்த இந்த உலகில் நாம் மகிழ்ச்சியாக வாழ்கிறோமா? நமது வாழ்க்கை எப்படி இருக்கிறது? பிறர் வாழ்க்கைத் தரத்தைவிட நம் வாழ்க்கைத் தரம் எந்த அளவில் உள்ளது? என்பதை பயணங்களின்போது சந்திக்கும் பல மனிதர்களின் வாழ்வோடு ஒப்பிட்டுப் பார்த்துப் புரிந்துகொள்ளும் வாய்ப்பு பயணங்களின் போதுதான் கிடைக்கும்.
பயணங்களின்போது பொருளாதார ரீதியில் நம்மைவிட உயர்ந்த நிலையில் உள்ளவர்களையும் நம்மைவிட குறைந்த நிலையில் உள்ளவர்களையும் மிகவும் சிரமப்படுபவர்களையும் காணும் வாய்ப்பு கிடைக்கிறது. இந்த உலகம் எவ்வளவு பிரம்மாண்டமானது என்பதையும் அதில் நாம் ஒரு சிறுபுள்ளி கூட இல்லை என்பதையும் நாம் பயணங்களின் மூலம் அறிந்துகொள்ளலாம். இதை அறியும்போது பயணங்கள் நம் ஒவ்வொருவரின் மனதிலும இயல்பாகவே பதிந்து கிடக்கும் “நானே பெரியவன்” என்ற அகந்தை (Ego) மெல்ல மெல்ல அகலும்.
மனம் மகிழ்ச்சி அடைந்தால் வியாதிகளும் வயோதிகமும் நம்மை நெருங்க பயப்படும். முடிந்தவரை அடிக்கடி பயணம் செய்யுங்கள். பயணம் என்பது உங்கள் ஊரிலிருந்து வேறொரு ஊருக்குச் செல்வதாகும். எனவே பயணங்கள் நீண்ட தூரமாக இருக்கவேண்டிய அவசியமில்லை.
உங்கள் ஊரிலிருந்து அருகில் இருக்கும் சுற்றுலாத் தலங்களுக்கு அல்லது உங்கள் மாவட்டத்திற்குள் இருக்கும் சுற்றுலாத்தலங்களுக்கு ஒரு மாதத்திற்கு ஒருமுறை உங்கள் குடும்பத்தாரோடு செல்லுங்கள். வாய்ப்பு கிடைக்கும் போது நீண்ட தூரப் பயணங்களையும் மேற்கொள்ளுங்கள். பயணம் என்பது உங்கள் வாழ்க்கையை வண்ணமயமாக மாற்றும் என்பதில் ஐயமில்லை.