சின்னச் சின்ன விதைதான் பெரிய பெரிய விருட்சம்!

Motivation Image
Motivation ImageImage credit - pixabay.com

பெரிய பெரிய காரியங்களைச் சாதிக்க வேண்டும் என்று கனவு காண்கிற சிலர் எதையுமே தொடங்க மாட்டார்கள்.

பிரம்மாண்டமான ஆலமரம் சிறிய விதையிலிருந்துதான் உருவானது. ஆடு தாண்டும் அகலத்தில் பிறந்த சின்னக் காவிரிதான் யானை தாண்ட முடியாத அகண்ட காவிரி ஆனது. எல்லாம் சின்னச் சின்ன தொடக்கங்களால்தான் ஏற்பட்டன என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

மாற்றுத் துணி இல்லாத 5 சன்னியாசிகளின் சங்கல்பம் தான் இன்று உலகெங்கும் விரிந்து கிடக்கும் ராமகிருஷ்ணா மடம். கங்கை கரையோரத்தில் சின்ன அளவில் தொடங்கப்பட்ட ராமகிருஷ்ணா மடம் இன்று கோடி கோடி பக்தர்களையும் கோடி கோடிகளில் சொத்துக்களையும் உடைய அற நிறுவனம் ஆனது.

இப்போது பல்வேறு தொழிலில் பாதம் பதித்துப் பல கோடிகள் மூலதனங்கள் உடைய ஸ்ரீராம் சீட்டு நிறுவனம் தொடக்கத்தில் இருபது வாடிக்கையாளர்களுடன் சில ஆயிரம் முலதனத்தில்தான் தொடங்கப்பட்டது.

தாஜ்மகால் ஒரே நாளில் கட்டப்பட்டதா? தஞ்சை பெரிய கோவில ஒரே நாளில் உருவாக்கப்பட்டதா.? கொஞ்சம் கொஞ்சமாகத்தான் எல்லா பெரிய விஷயங்களும் உருவாகின்றன. அடி அடியாகத்தான் கவிதைகள் பிறக்கின்றன. மந்திரத்தில் மாங்காய் மாதிரி எந்த காப்பியமும் கண நேரத்தில் பிறந்ததில்லை. உலகெல்லாம் என்ற ஒற்றை வரியிலிருந்துதான் பெரிய புராணம் பிறந்தது.

எனவே பெரிய பெரிய முடிவுகளை எதிர்பார்த்திருந்தாலும் சின்னச் சின்ன தொடக்கங்கள்தான் அவற்றின் ஆரம்பம் என்று அறிந்து கொள்ளுங்கள். ஒரே நாளில் எவனையும் தலைவனாக உலகம் உருவாக்குவதில்லை. உங்கள் ஊரை மாற்றி அமைக்க நீங்கள் நாலைந்து பேர் அது குறித்து மாய்ந்து மாய்ந்து பேசுவதை விடுத்து, கட்சி, சாதி, மதம் கடந்து நீங்கள் சின்ன அளவில் ‌ ஒன்று சேர்ந்து ஒரு சங்கம் அமைத்து நாளை நாடே மாறும்படியாக உருப்படியாக ஏதாவது செய்யுங்கள்.

இதையும் படியுங்கள்:
பஞ்ச நரசிம்மர் அருளும் திருக்கோயில் எங்குள்ளது தெரியுமா?
Motivation Image

ஏமாளித்தனமாக எவருக்காவது ரசிகனாகி அவன் உயர நீங்கள் பாடுபட வேண்டாம். உங்களைச் சுற்றியுள்ள சமூகம் உயர ஏதாவது செய்யுங்கள்.பெரிய பெரிய கட்சிகள் கூடச் சின்னச் சின்ன அறைகளில் தான் தொடங்கப்பட்டன. பெரிய பெரிய புரட்சிகள் கூட சின்னச் சின்ன சண்டைகளில் இருந்தே பிறந்தன. ஏழே ஸ்வரங்களில் இருந்துதான் எல்லா ராகங்களும் ஜனித்தன. இன்றைய இசைமேதைகளின் புகழ், பணம், கார், பங்களா, விருதுகள் என எல்லாமே ஏழு ஸ்வரங்களை சரியாக பிடித்ததால் கிடைத்தவை. சின்னச் சின்ன கூட்டங்களில் பத்து பேருக்கு பேசிய கிருபானந்த வாரியார் சுவாமிகள் பிற்காலத்தில் பத்தாயிரம் பேர் மத்தியில் பேசும் வாய்ப்பு பெற்றார். தொடக்கம் என்பது தான் பிரச்னை. எது செய்ய நினைத்தாலும் உடனே தொடங்குங்கள். வெற்றி நிச்சயம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com