நீங்கள் நீங்களாகவே இருங்கள்!
பாடுவதற்கு வாய்ப்பு கேட்டு போனவர் சொன்னார் "சார், நான் அப்படியே எஸ். பி. பாலசுப்ரமணியம் மாதிரி பாடுவேன்". அவர் வாய்ப்பு பறிபோனது.
இப்போது பாடுவதற்கு வாய்ப்பு கேட்டு வந்த வரை வாய்ப்பு தருபவர் "நீங்கள் எஸ்.பி. பி. மாதிரி பாடுவீர்களா?
வந்தவர்" சார். நான் என் குரலில் நன்னா பாடுவேன்" என்றார். உடனே அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இன்று சுயம்தான் வரவேற்கப்படுகிறது. அசல்தான் ஜெயிக்கும். நகல்கள் தோற்கும். உங்களுக்குள் இருக்கும் உங்கள் குணம்தான் அசல். அதுதான் உங்கள் வேர். அந்த வேர் மூலமாக மரமாக எழுவதும் ,மனிதனாக இருப்பதும் அடங்கியுள்ளது. வழிகாட்டுதல்களை ஏற்றுக் கொள்ளுங்கள். ஆனால் அவர்களாக மாறாதீர்கள்.
உங்களுக்குள் என்னென்ன திறமைகள் உள்ளன. பலம் என்ன. பலவீனம் என்ன? உங்களை எழவிடாமல் செய்யும் தீய குணங்களை பலவீனமாக்குங்கள். பலவீனத்தை பலமாக்க நல்லவர்களின் சொல், செயல் வழியில் நடவுங்கள். பாதை அவர்களுடையதாக இருக்கலாம். ஆனால் கால்கள் உங்களுடையதாக இருக்கட்டும். சீர்காழி என்றால் கோவிந்தராஜன்தான். குன்னக்குடி என்றால் வைத்தியநாதன்தான். அவர்களின்" தான்" என்ற பலத்தின் மூலமே வெறும் ஊர்களாய் இருந்ததை தனது சாதனைகளால் அடையாளமாக ஆக்கினார்கள்.
உங்கள் முகம் உங்கள் குரல் போல் உங்கள் எண்ணத்தை பிரதிபலிக்கும். அந்த எண்ணத்தின் மூலம் முகத்தை அழகு செய்யுங்கள். குரலை செம்மையாக்குங்கள். மனதை மேலும் பசுமையாக்குங்கள். உங்களுக்குள் ஒளிந்து கிடக்கும் குணங்களை பட்டியல் இடுங்கள். உங்கள் குணத்தில் கிடக்கும் கழிவுகளை அகற்றுங்கள். தண்ணீர் பாய்ச்சி நலமாக்குங்கள். பின் எப்போதும் நீங்கள் நீங்களாகவே இருங்கள்.
துறவி ஒருவர் சென்று கொண்டிருந்தபோது பாம்பு கடிக்க வந்தது. துறவி அதைப் பார்த்து "என்னைக் கடிப்பதால் உனக்கு எந்த பயனும் இல்லை. பின் ஏன் கடிக்க நினைக்கிறாய்" என்றார். கடிப்பது என் சுபாவம் என்றது பாம்பு" உன் பெயரோ நல்ல பாம்பு. உன் பெயர் போலவே நடந்துகொள். நான் ஒரு மந்திரம் சொல்கிறேன். நீ விடாமல் சொன்னால் கடவுள் உன் முன் தோன்றி வரம் தருவார்" என்று மந்திரம் உபதேசித்து விட்டுச் சென்றார்.
துறவி சொன்னமாதிரி மந்திரத்தைச் சொல்லி யாரையும் கடிக்காமல் பாம்பு இருந்தது. முதலில் பாம்புக்கு பயந்தவர்கள் இது கடிக்காத பாம்பு என்றதும் கல்லால் மக்கள் அடித்தார்கள். சிறுவர்கள் அதன் வாலைப் பிடித்து தூக்கி அடித்தனர். பாம்புக்கு வலித்தாலும் மந்திரமே கதி, கடவுள் வருவார் எனக் காத்துக் கிடந்தது. சிறுவர்கள் அட்டகாசம் அதிகமானதால் புழுவை விட கேவலமாக அது நெளிந்து கொண்டிருந்தது. துறவி அந்த வழியாக மீண்டும் வர அதன் நிலையைப் பார்த்து "உனக்கு என் இந்த கதி" என்றார். உடனே அது" சாமி. மந்திரமே முக்கியம் என சொல்லிக் கொண்டு யாரையும் கடிக்கவில்லை. இதனால் என்னைப் பார்த்து பயந்து ஓடியவர்கள் என்னை இம்சிக்கிறார்களே" என்றது.
துறவி சிரித்துக் கொண்டே "நான் உன்னிடம் அனாவசியமாக யாரையும் கடிக்காதே என்றுதானே சொன்னேன். உன்னைத் துன்புறுத்துபவர்களை சீறிப் பாய்ந்து பயமுறுத்த உன்னால் முடியாதா?. சீற வேண்டிய நேரத்தில் சீறு. சுபாவத்தை மாற்றாதே. நீ நீயாக இரு", என சொல்லிவிட்டு நகர்ந்தார். பாம்பு பழையபடி சீற ஆரம்பிக்க மக்கள் பயந்து ஒதுங்கினார்கள். பாம்பைப் போலவே நீங்களும் சுபாவத்தை மாற்றாதீர்கள்.