

குழந்தை முதல் பெரியவர்கள் வரை சிலர் காலை உணவை தவிர்ப்பது உண்டு. தவிர்ப்பதற்கான காரணம் இரவில் தாமதமாக தூங்கி காலையில் தாமதமாக எழுந்திருப்பதால்தான். அவசரமாக குளித்து, உடைமாற்றி வெளியில் செல்ல புறப்படும்பொழுது, சாப்பிடாமல் தவிர்த்துவிட்டு அவசர அவசரமாக கிளம்பிவிடுகின்றனர்.
குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகள் காலையில் மந்தமாக இருப்பதால் சாப்பிடுவதைத் தவிர்க்கின்றனர் அல்லது உணவு பிடிக்காததாலும் தவிர்ப்பவர்கள் உண்டு. எப்படியோ குழந்தைகளுக்கு பிடித்தமான உணவை விருப்பமறிந்து செய்து கொடுத்து, சாப்பிட வைப்பதுதான் பெற்றோர்கள் மேற்கொள்ள வேண்டிய முக்கியமான கடமை.
காலை உணவு நம் உடலை அளவாக வைத்துக் கொள்ளவும், தெளிந்த சிந்தனையையும் தருவதுடன் உணவு உட்கொள்ளும் காலத்தையும் மிச்சப்படுத்துகிறது. ஒரு நாளைக்கு தேவையான புரோட்டின், வைட்டமின்கள், கால்சியம் மற்றும் இரும்பு சத்துக்களை காலை உணவு நமக்கு அளிக்கிறது. காலை உணவை உட்கொள்ளும் குழந்தைகளைவிட காலை உணவை தவிர்க்கும் குழந்தைகளுக்கு தாகம் மற்றும் வைட்டமின்கள் சத்துக்கள் குறைவாக இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் வலியுறுத்துகின்றன.
சத்து குறைவானது பள்ளி செல்லும் குழந்தைகளுடைய நடவடிக்கைகளின் செயல் திறன் மந்தமடைய வழிவகுக்கிறது. பசியுடன் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் கல்வித் தரம் உண்மையில் மிகவும் குறைவாக உள்ளது என ஊட்டச்சத்து வல்லுநர்களில் ஒரு பிரிவினர் கருதுகின்றார்கள். காலை உணவை தவிர்ப்பதால் குழந்தைகளின் திறமை மற்றும் கல்வியாற்றில் பாதிக்கப்படுகிறது என்று ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.
சர்க்கரை கலந்த காலை உணவு மூளை சுறுசுறுப்பை மேம்படுத்துவதில் விந்தை புரிகிறது. பள்ளி செல்வதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னால் சர்க்கரை சத்துள்ள தானியங்களை காலை உணவாக எடுத்துக்கொண்டால் மூளை நினைவு திறனிலும் அதன் தொடர் செயல்பாடுகளில் எல்லாம் முக்கிய பங்கு வகிக்கின்ற 'அசிட்டில் கொலின்' என்று அழைக்கப்படும் நியூரோ ட்ரான்ஸ்மீட்டரை குளுக்கோஸ் சத்து தூண்டுகிறது. காலை உணவைத் தவிர்ப்பதால் ஏற்படும் சர்க்கரைச் சத்து இழப்பினால் குழந்தைகளுக்கும் பெரியவர் களுக்கும் நினைவாற்றல் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
காலை உணவைத் தவிர்ப்பவர்களைவிட காலை உணவு உட்கொள்ளும் பழக்கமுடையவர்கள் அதிகமான வைட்டமின் சத்துக்களான ஏ, இ டி இரும்பு மற்றும் சுண்ணாம்புச் சத்துகளைப் பெறுகிறார்கள். இதனால் எலும்பு மற்றும் தசைகள் வலுவடைவதால் அனீமியா போன்ற நோய்கள் வராமல் காத்துக்கொள்ள முடிகிறது. ஆதலால் குழந்தைகளுக்கு காலை உணவை அளித்து ஆரோக்கியமாக வளர வைக்க வேண்டியது பெற்றோர்களின் கடமையே.