
உயர்ந்து நிற்கும் கட்டடத்தின் எடை முழுவதையும் தாங்கிக் கொண்டு, அதன் அஸ்திவாரம் மண்ணுக்குள் அமைதியாய் இருக்கிறது. அழகையும் ஆடம்பரத்தையும் கட்டடத்துக்குத் தந்துவிட்டு, எந்த விளம்பரமும் இல்லாமல் அந்த அஸ்திவாரம் அடங்கியிருக்கிறது. ஆனால், அது இல்லாவிட்டால், கட்டடமே இல்லை.
மனிதன் செயற்கையாக உருவாக்கிய கட்டடங்களுக்கு மட்டுமல்ல இயற்கை உலகுக்கு வாரி வழங்கியிருக்கும் செடி, கொடி மரங்களுக்கும் நிலை அதுதான்.
மண்ணுக்குள் வேர் ஆழமாகச் செல்லச் செல்லத்தான், முளை செடியாகிறது; செடி மரமாகிறது; மரம் கிளை பரப்பிச் சென்று பயன் தருகின்றது. மிக ஆழத்தில் புதைந்து கிடக்கும் வேர்கள்தான், எந்தக் காற்றுக்கும் தலையசைத்தபடி மரத்தை நிமிர்ந்து நிற்க வைக்கின்றன.
உலகியல் வாழ்க்கையிலும் இந்த உண்மை அப்படியே பொருந்தத்தான் செய்கிறது. ஓர் உறவோ அல்லது நட்போ, ஓங்கி வாழ்வதற்கும் சரி; அல்லது சாய்ந்து வீழ்வதற்கும் சரி, கண்ணுக்குத் தெரியாத வேர்களே காரணமாக இருக்கின்றன!
மண்ணுக்குள் வேர்கள் புதைந்து கிடப்பதுபோல் மனதுக்குள் உண்மையும் அக்கறையும் புதைந்துகிடந்தால், எந்த உறவும் கால ஓட்டத்தில் கரைந்துபோவதில்லை.
பள்ளிப்பருவத்திலும் கல்லூரிப் பருவத்திலும் நட்பு அமைவதில் வியப்பேதுமில்லை. வாழ்க்கையின் மேடு பள்ளங்களும், தேவைகளும், மனதுக்கும் அறிவுக்கும் அறிமுகம் ஆகாமல் இருக்கும் பருவம் அது. உடன் பிறந்த அண்ணன் தம்பியோ அல்லது அக்காள் தங்கையோகூட, அந்தப் பருவத்தில் உறவை எண்ணாமல் நட்பாகப் பழக முடியும்.
வாழ்க்கை முழுக்க அந்த நட்புணர்வு அப்படியே தொடர, அஸ்திவாரம் பலமாக அமையவேண்டும். விட்டுக்கொடுத்தலும், புரிந்துகொள்ளலும், எதிர்பார்ப்பின்றிப் பழகுதலும், பொய்யின்றி இயல்பானதாக இருக்கும்போதுதான் உறவுகளின் வேர் உறுதியாகின்றது.
எந்தக் கருத்தைச் சொல்லவும் ஓர் அதிகாரத்தில் பத்து குறட்பாக்கள் போதும் என்றெண்ணிய வள்ளுவர் நட்பைப் பேச மட்டும் ஐந்து அதிகாரங்களில் ஐம்பது குறட்பாக்களைப் பயன்படுத்துகிறார்.
உறவு, தானாக அமைவது. ஆனால் நட்பு, நாமே உருவாக்கிக் கொள்வது. என்ன வெறுத்தாலும் விலக்கி வைக்க முடியுமே தவிர. உறவை வெட்டிவிட முடியாது.
இவர் எனது முன்னாள் மாமா...' என்றோ, 'சென்ற வருடம்வரை அவர் எனக்கு சித்தப்பாவாக இருந்தார்...' என்றோ ஒருவரைக் கைகாட்ட முடியுமா என்ன...?
ஆனால், நட்பினை அப்படிப் பிரித்தெடுக்கவும் முடியும்; வேண்டாதவரை விலக்கி வைக்கவும் முடியும்.
நமக்கான நட்பைத் தேர்ந்தெடுப்பதும், விலக்கி வைப்பதும் தமக்குள்ள உரிமை. அந்த உரிமையை அழகோடும் அளவோடும் பயன்படுத்தும்போதுதான், நட்பு நலம் பெறுகிறது.
எதிர்பார்ப்பில்லா அன்பு; உண்மையான அக்கறை; பொறாமையற்ற மனம்; வளர்ச்சியில் மகிழ்ச்சி; சிறு தவறுகளைப் பெரிது படுத்தாத பெருந்தன்மை போன்ற உயரிய குணங்களின் கலவையால் ஆன அஸ்திவாரமே, நட்பு என்னும் கோபுரத்தைத் தாங்கி நிற்கும்.