

இன்றைய ஓட்டப்பந்தய வாழ்க்கையில் 'அமைதி' என்பது எட்டாக்கனியாகிவிட்டது. நாம் தேடும் மகிழ்ச்சி பணத்திலோ அல்லது பதவியிலோ இல்லை, அது நம்முடைய பார்வையில் இருக்கிறது என்கிறார் ஜப்பானியத் துறவி சுன்கோ மசுனோ. சிக்கலான உலகத்தில் சிக்குண்டு தவிக்கும் நமக்காக, ஜென் தத்துவத்தின் அடிப்படையில் அவர் வழங்கும் 7 வாழ்க்கை மந்திரங்கள் பற்றி இந்தப் பதிவில் பாப்போம்.
எதிர்வினையாற்றுவதை நிறுத்துங்கள்:
அலுவலகத்தில் மேலதிகாரியின் வசவு அல்லது குடும்பத்தில் ஒருவரின் கசப்பான வார்த்தை அமைதியைக் குலைத்துவிடுகிறது. உண்மையில், ஒருவர் நம்மை நோகடிப்பதை விட, அதற்கு நாம் காட்டும் எதிர்வினைதான் அதிகம் பாதிக்கிறது. உணர்ச்சிகளின் ரிமோட் கண்ட்ரோலை அடுத்தவரிடம் கொடுக்காதீர்கள். யாராவது உங்களைச் சீண்டினால், உடனே பதிலடி கொடுக்காமல் ஒரு 10 நொடிகள் மௌனமாக இருங்கள். அந்தப் பத்து நொடி இடைவெளி, உங்களை ஒரு தெளிவான முடிவெடுக்க வைக்கும்.
ஆசைகளைச் சுருக்குங்கள்:
பணப்பற்றாக்குறை என்பது சம்பளம் போதாமையால் வருவதில்லை, தேவையற்ற ஆசைகளால்தான் வருகிறது. இ.எம்.ஐ மற்றும் கடன்களுக்குப் பின்னால் ஓடுவதை விட, தேவைகளைக் குறைத்துக் கொள்வதே உண்மையான சுதந்திரம். இந்த மாதம் ஒரு தேவையற்ற செலவை மட்டும் தவிர்த்துப் பாருங்கள். வங்கிச் சேமிப்பை விட, மன அமைதி அதிகரிப்பதை உணர்வீர்கள். 'எளிமை' என்பது வறுமையல்ல, அது ஒரு கலை.
தள்ளிப்போடுதல் எனும் தடை:
‘நாளை பார்த்துக் கொள்ளலாம்’ என்ற ஒற்றை வார்த்தை பலரது வாழ்க்கையை முடக்கிப் போட்டுள்ளது. உடற்பயிற்சியோ, புதிய திறமையைக் கற்பதோ எதுவாக இருந்தாலும் இப்போதே திட்டமிடுங்கள். இன்று கடைபிடிக்கும் சுயக்கட்டுப்பாடு தான், எதிர்காலத்தில் மிகப்பெரிய நன்மைகளைத் தரும். பெரிய இலக்குகள் கூடத் தேவையில்லை. ஐந்து நிமிட நடைப்பயிற்சி, பத்து நிமிடப் புத்தகவாசிப்பு போன்ற சிறிய செயல்களை இன்று தொடங்கலாம்.
மௌனத்தின் மொழி:
உறவுகளில் சிக்கல் வரும்போது நாம் செய்யும் மிகப்பெரிய தவறு, நம்மை நியாயப்படுத்த மீண்டும் மீண்டும் பேசுவதுதான். பல நேரங்களில் விளக்கங்களை விட மௌனம் அதிகப் பலன் தரும். உணர்ச்சிகள் கொந்தளிக்கும்போது பேசினால் வார்த்தைகள் காயப்படுத்தும். 30 நிமிடங்கள் ஒதுங்கி இருந்து, கோபம் தணிந்த பிறகு பேசுங்கள். அமைதி என்பது தோல்வியல்ல, அது முதிர்ச்சியின் அடையாளம்.
உத்வேகத்தை விடப் பழக்கமே முக்கியம்:
பலர் எதையாவது தொடங்க 'மோட்டிவேஷன்' தேடுகிறார்கள். ஆனால், மோட்டிவேஷன் என்பது மேகம் போன்றது. அது வரும், போகும். உங்களைக் காப்பாற்றுவது அன்றாடப் பழக்கவழக்கங்கள் மட்டுமே. இன்று ஜிம்முக்குச் செல்லப் பிடிக்காவிட்டாலும், ஒரு பழக்கத்தை உருவாக்குவதற்காக சென்று வாருங்கள். அந்தத் தொடர்ச்சிதான் ஒருநாள் வெற்றியாக உருவெடுக்கும். பழக்கங்களை ஒரு காலண்டரில் குறித்து வைத்துப் பின்தொடருங்கள்.
மாற்ற நினைக்காதீர்கள்:
வாழ்க்கையில் எல்லாவற்றையும் நாம் திட்டமிட்டபடி நடத்த முடியாது. மழையையோ, டிராஃபிக்கையோ நம்மால் மாற்ற முடியாது. மாற்ற முடியாத விஷயங்களை மாற்ற நினைப்பதுதான் மன அழுத்தத்தின் ஊற்றுக்கண். சில விஷயங்களை அப்படியே விட்டுவிடுங்கள். உங்களால் எதை மாற்ற முடியுமோ அதில் மட்டும் கவனம் செலுத்துங்கள். மீதியை இயற்கையிடம் விட்டு விடுவதுதான் நிம்மதி.
7. உங்கள் சூழலே நீங்கள்:
நீங்கள் யாருடன் பழகுகிறீர்கள், எதைப் படிக்கிறீர்கள் என்பதுதான் உங்களைத் தீர்மானிக்கிறது. எதிர்மறை எண்ணங்கள் கொண்ட மனிதர்களையும், நச்சுத்தன்மையான சமூக வலைதளப் பதிவுகளையும் தவிர்ப்பது மிக அவசியம். உங்கள் நட்பு வட்டத்தை மேம்படுத்துங்கள். நல்ல மனிதர்களோடும், ஆக்கப்பூர்வமான சிந்தனைகளோடும் நேரத்தைச் செலவிடும்போது, உங்கள் அடையாளம் தானாகவே உயரும்.
இந்த 7 விஷயங்களை உங்கள் அன்றாட வாழ்வில் ஒவ்வொன்றாகப் புகுத்திப் பாருங்கள். ஜப்பானியத் தத்துவங்கள் சொல்லும் அமைதி உங்கள் வாழ்விலும் மலரும்!