

உடல் அசதியாக இருப்பதற்கும் சோம்பேறித்தனத்திற்கும் வித்தியாசம் உண்டு. உடல் அசதியாக இருப்பதற்கு ஏதேனும் சத்து குறைபாடு காரணமாக இருக்கலாம். ஆனால் சோம்பேறித்தனம் என்றால், செய்ய முடிந்த செயலையும் செய்யாமல் தள்ளிப் போடுவதாகும்.
இந்த இரண்டில் நீங்கள் எந்த வகையறா என்று முதலில் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். இந்த பதிவில் சோம்பேறித்தனத்தை முறியடிக்க என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.
சோம்பேறித்தனம் என்பது முழுக்க முழுக்க நம்முடைய மனநிலையை சார்ந்தது. நம்மால் ஒரு விஷயத்தை செய்ய முடியும், ஆனால் செய்ய மாட்டோம். கடினம் என்று ஒரு விஷயத்தை செய்வதற்கு முன்னதாகவே நம் மூளையானது கணக்குகள் போட்டு நம்மை அமைதி படுத்திவிடும்.
அதற்கு முதலில் நீங்கள் செய்ய வேண்டிய அந்த செயலின் முக்கியத்துவத்தையும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் சிந்திக்க வேண்டும். ஒருமுறை கண்ணை மூடி, எந்த அளவுக்கு உங்களைச் சுற்றி உள்ள நபர்களும், பொருட்களும், சாதனங்களும் உங்களை அவற்றுக்கு ஏற்றார்போல பயன்படுத்திக் கொள்கிறது என்பதை சிந்தியுங்கள்.
உங்கள் வீட்டில் வைத்திருக்கும் டிவி, பயன்படுத்தும் ஸ்மார்ட் போன், கம்ப்யூட்டர், இணையதளம், என எங்கே சென்றாலும் விளம்பரங்களே நிறைந்துள்ளது. பெரும்பாலும் உங்களுக்கு இலவசமாகக் கிடைக்கும் அனைத்திலுமே நீங்கள்தான் ப்ராடக்டாக உள்ளீர்கள். இங்கே விளம்பரங்கள் இல்லாமல் உங்களால் செயல்பட முடியாது. எந்த ஒரு தளத்திலும் விளம்பரம் போடுவதற்கும் பணம் செலுத்த வேண்டும். விளம்பரம் இன்றி அந்த தளத்தைப் பயன்படுத்துவதற்கும் பணம் செலுத்த வேண்டும். இப்படி இரு புறமிருந்தும் அவர்கள் பணத்தைப் பெற்றுக்கொண்டு உங்களை ஒரு ப்ராடக்டாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
இதேபோல் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் என்று நீங்கள் எங்கே காலடி எடுத்து வைத்தாலும் ஒரே விளம்பரம்தான். அதுதான் டிஜிட்டல் மார்க்கெட்டிங். இந்த அளவுக்கு நம்மை சுற்றியுள்ள விஷயங்கள் நம்மை அவர்களுக்காக பயன்படுத்திக் கொள்ளும்போது, நாம் எந்த ஒரு செயலும் செய்யாமல் சோம்பேறிகளாக அமர்ந்து கொண்டிருந்தால், தேங்கிய நீராக ஒரே இடத்தில் இருக்க வேண்டியதுதான்.
உங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் உலகத்தை நீங்கள் பயன்படுத்தும் முடிவை எடுத்தால், இந்த சோம்பேறித்தனம் எல்லாம் காணாமல் போய்விடும்.
நேரத்தை வீணடிப்பதை நினைத்து நீங்களே பயப்பட ஆரம்பித்து விடுவீர்கள். வாழ்க்கையில் முன்னேறி செல்வதற்கான முயற்சிகளை எடுக்கத் தொடங்குவீர்கள்.
-கிரி கணபதி