
நாம் இந்த உலகில் ஒரே ஒருமுறைதான் வாழ்கிறோம் அல்லது வாழப்போகிறோம். இந்த உலகில் மூன்று வகைப்பட்ட மனிதர்கள் உள்ளனர்.
முதல் வகை மனிதர்கள் - வாய்ச்சொல் வீரர்கள்.
இரண்டாவது வகை மனிதர்கள் - செயல் வீரர்கள்.
மூன்றாவது வகை மனிதர்கள் - சாதைனையாளர்கள்.
1-முதல் வகை மனிதர்கள் வாய்ச்சொல் வீரர்கள்.
இந்த முதல் வகையை சேர்ந்த வாய்ச்சொல் வீரர்கள், உலகில் நடந்த மற்றும் நடந்துகொண்டு இருக்கும் நிகழ்வுகளைப் பற்றிய முழுமையான அறிவு இல்லாதவர்கள்.
இன்றைய உலக மக்கள் தொகையில், 99 சதவீதம் பேர் வாய்ச்சொல் வீரர்கள். இவர்கள் உலகில் நிகழ்ந்த மற்றும் நிகழ்ந்து கொண்டு இருப்பவைகளைப் பற்றி முழுமையாக அறியாதவர்கள்.
இத்தகைய நிலையில் உள்ள 99 சதவீத மக்கள் சமுதாயத்தில் சாதாரண மனிதர்களாக வாழ்க்கையைத் தொடங்கி, சாதாரண மனிதர்களாக வாழ்ந்து முடித்துவிடுகின்றனர்.
இத்தகைய வாய்ச்சொல் வீரர்கள் தான் உண்டு, தன் குடும்பம் உண்டு, தன் வேலை அல்லது தொழில் உண்டு என்று மனம் எல்லை கட்டிய நிலையில் மிகக்குறுகிய வட்டத்தில் வாழ்பவர்கள்.
இந்த வாய்ச்சொல் வீரர்கள் தனக்கு என்று மிகச்சிறிய சுயநல உலகத்தை ஏற்படுத்திக்கொண்டு, அந்த உலகில் வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள்.
இத்தகைய வாய்ச்சொல் வீரர்கள், கிணற்றுத் தவளையாக இந்த உலகில் வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள்.
2-இரண்டாவது வகை மனிதர்கள் செயல் வீரர்கள்.
இன்றைய சமுதாயத்தில் உள்ள 100 சதவீத மக்களில் வாய்ச்சொல் வீரர்களான 99 சதவீத மக்கள்போக, மீதம் உள்ள ஒரு சதவீத மக்களே செயல் மற்றும் சாதனைகள் செய்ய மிஞ்சுபவர்கள்.
அந்த 1 சதவீத மாறுபட்ட மக்களில், 0.999 சதவீத மக்கள்தான், சமுதாய அமைப்பில் வரும் வாய்ப்புகள் மற்றும் உலக நிகழ்வுகளை மிக உன்னிப்பாகக் கவனிக்கின்றனர்.
இத்தகைய செயல்வீரர்கள் உலகில் நிகழ்ந்த மற்றும் நிகழ்ந்து கொண்டு இருப்பவைகளைப் பற்றிய விழிப்பு உணர்ச்சி உள்ளவர்கள்.
3-மூன்றாவது வகை மனிதர்கள் சாதனையாளர்கள்.
இந்த உலகில் உள்ள வாய்ப்புகளைக் கூர்ந்து நோக்கும் 1 சதவீத மக்களில், 0.999 சதவீத விழிப்புணர்ச்சி உள்ள மக்கள்போக, மீதம் உள்ளவர்கள் 0.0001 சதவீத மக்கள் மட்டுமே. அவர்கள்தான் தங்களது உயரிய வாழ்க்கைக் கனவை தங்களுடைய வாழ்நாளில் நனவாக்குகின்றனர்.
இத்தகைய மூன்றாவது வகை மனிதர்களான சாதனையாளர்கள் இந்த உலகில் நிகழும் மாற்றங்களை உன்னிப்பாகப் பார்ப்பதுடன், வரும் காலங்களில் நிகழ இருக்கும் மாற்றத்தை தொலைநோக்குப் பார்வை கொண்டு அகக் கண்ணில் பார்ப்பவர்கள்.
இந்த மூன்றாவது வகையை சேர்ந்த சாதனையாளர்கள் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்பவர்கள்.
இத்தகைய சாதனையாளர்கள், அடுத்தவர்கள் சிந்திக்கும் முன் வேகமாக சிந்தித்து சமுதாய மறுமலர்ச்சி மற்றும் சாதனைகள் பல நிகழ்த்துபவர்கள்.
இந்த மூன்றாவது வகை மனிதர்கள்தான் இந்த உலகில் வெறும் வாய்ச்சொல் வீரர்களாகவோ, மற்றும் செயல் வீரர்களாகவோ மட்டும் இருந்துவிடாமல், சாதனை வீரர்களாக, உருமாற்றம் அடைந்து சாதனைகள் பல செய்து சமுதாயக் காவலராக இருக்கிறார்கள்.
இந்த உலகில் உள்ள மக்களில் 0.0001 சதவீத மக்கள்தான் சாதனையாளர்களாக மிளிர்கிறார்கள்.
சுருங்கச் சொன்னால் பத்தாயிரத்தில் ஒருவர்தான் சாதனையாளராக இந்த உலகத்தில் உருப்பெறுகிறார்கள்.
கனவு கண்டவர்கள், பகல் கனவு கண்டவர்கள், தங்கள் கனவில் நினைத்ததை, உலகில் மாற்றி அமைத்ததின் மூலம் சாதனையாளர்களாக பரிணமிக்கிறார்கள்.
இத்தகைய மூன்றாவது வகை சாதனை மனிதர்கள்தான், இன்றைய உலகிற்கு மிகுந்த அளவில் தேவைப் படுகின்றார்கள்.
தெளிவான முடிவு எடுங்கள். அதை செயல்படுத்துங்கள்.... சாதனை படையுங்கள். வாழ்வில் எடுத்த தெளிவான முடிவில் உறுதியைச் சேர்த்து அதன் வழி வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுங்கள்.
இப்போ நீங்கள் சொல்லுங்கள்…
வாய்ச்சொல் வீரராக இருக்கப்போகிறீர்களா..?
செயல்வீரராக இருக்கப்போகிறீர்களா..? ..?
சாதனை வீரராக இருக்கப்போகிறீர்களா.. ?