
வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு தன்னம்பிக்கை மிக இன்றியமையாதது. தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டால் நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்பதை "தன்னம்பிக்கையே வெற்றி" என்று கூறுவார்கள். பின்னர் "சிகரங்களை தொடுவோம்" என்பார்கள் குன்றுகளை தொடுவோம் என்று எங்கும் சொல்ல மாட்டார்கள்.
அத்தோடு நிற்காமல் "முன்னேற்றமே மூச்சுக் காற்று" என்று கூறுவார்கள் அதாவது நாம் உயிரை வைத்துக்கொண்டு இருக்க வேண்டுமாயின், முன்னேறிக்கொண்டே இருக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் உயிர் வாழ்வதில் எவ்விதப்பயனும் இல்லை என்று சொல்லாமல் சொல்வதுதான் இது.
இப்போது, அவை எல்லாவற்றிற்கும் அடிப்படை காரணம் நம் மனம் தான். நம் மனத்தை, நம் எண்ணங்களை நெறிப்படுத்த வேண்டும். வைரக்கல் தோண்டி எடுக்கும்போது சுடர்விடாமல் சாதாரண வெங்கை கல் போல்தான் இருக்கும் பின்னர் அதிலுள்ள தேவை அற்ற பகுதிகளை செதுக்கிவிட்டால் சுடர்விடும்.
அதுபோல், மனதில் பல எண்ணங்கள் தோன்றிக் கொண்டே இருக்கும். அவற்றில் வேண்டாதவற்றை நீக்கி விடவேண்டும் என்பதோடு அவற்றை மேலும் கூர்மை ஆக்கினால், அந்த எண்ண அலை எதையும் பாய்ந்து சென்று வெற்றிப்பாதைக்கு நம்மை இட்டுச் செல்லும்.
எல்லோரும் இலட்சியக்கனவு காணவேண்டும். அடிக்கடி அப்படிப்பட்ட கனவுகள் மனதில் மலர்ந்து கொண்டே இருக்க வேண்டும். அவை ஆழமாக உள்மனதில் பதிய வேண்டும். பின்னர் நம்முடைய நடைமுறையாலும், எண்ணங்களாலும் அந்த இலட்சியத்தை கட்டாயம் அடையமுடியும்.
அந்தக் கனவை நனவாக்க தேவையான திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். வாழ்வில் முன்னேற்றம் தோன்றுவதற்குச் சிந்தனையில் மாற்றம் ஏற்பட வேண்டும். மனமாற்றம் என்பது சிந்தனையில் ஏற்படும் மாற்றத்தின் விளைவுதான்.
சிந்தனையே செயலாகிறது செயலே பழக்கம் ஆகிறது பழக்கமே வாழ்க்கையாகிறது.
ஆகவே உங்கள் சிந்தனையை தெளிவுபடுத்துங்கள். ஒரு சிந்தனை துளி உங்கள் மனதில் உருவாகும்போதே அது ஏன் உருவாக்குகிறது என்றும் அதை செயல் செயலாக்கினால் என்ன விளைவு ஏற்படும் என்று யோசித்துப் பாருங்கள்.
சிந்தனை ஏற்படுவதற்கான காரணமும் அச்சிந்தனையை செயலாக்கினால் ஏற்படும் விளைவும் அனைவருக்கும் நன்மை உண்டாக்கக் கூடியதாக இருந்தால் மட்டுமே அந்த சிந்தனையை செயலாக்குங்கள்.
ஆகவே மனதில் உண்டாகும் சிந்தனைகளை சிற்பிபோல செதுக்கி வைத்து வாழ்வில் வெற்றி காணுங்கள்.