
வெற்றி என்பது அங்குலக் கணக்கிலோ, பவுண்டுகளிலோ, வைத்தோ கணக்கிடப்படுவதில்லை. தேர்ந்தெடுக்கப் படுபவர் களின் மனநிலை எவ்வளவு விசாலமாக இருக்கிறது என்பதை வைத்தே கணக்கிடப்படுகிறது. எந்த அளவுக்கு மனம் விரிவடைந்து நோக்குகிறது என்பதே வெற்றியைக் கணக்கிடுகிறது.
'ஒரு பிரச்னை சூழ்ந்திருக்கிறது" என்று சொல்லும்பொழுது, மகிழ்ச்சியற்ற சூழலின் பிம்பம் ஒன்று பதிகிறது. அதற்கு மாறாக, கேட்பவர்கள் மனத்தில் ஒரு வேடிக்கை நிரம்பிய அல்லது ஒரு "நமக்கு ஒரு புதிய சவால் வந்திருக்கிறது" என்று சொல்லுங்கள். விளையாட்டு அல்லது மகிழ்ச்சியான ஒன்றின் பிம்பம் பதிகிறது.
"இதனால் நமக்கு பெருத்த செலவு ஏற்பட்டது" என்று சொல்லிப் பாருங்கள். திரும்பி வர முடியாத பணம் செலவிடப்பட்டதை ஒரு பிம்பமாக உணருவார்கள். இது மகிழ்ச்சியான சூழல் அல்ல. அதற்கு மாறாக, "நாம் ஒரு பெரிய முதலீட்டைச் செய்திருக்கிறோம்" என்று சொல்லுங்கள். கேட்பவர் மனத்தில் லாபத்தைக் கொண்டு வரப்போகும் சூழல் பிம்பமாக உருவாகும். அது மகிழ்ச்சி தரும்.
பெரும் பெரும் சிந்தனையாளர்கள் எல்லோருமே, நேர்மறையானதும், உயர்வை நோக்கியே பார்க்கும் சிந்தனைகளை, நம்பிக்கை மிகுந்த சிந்தனைகளையே சொல்லி வருவார்கள். தங்கள் மனத்திலும் சரி, கேட்பவர் மனத்திலும் சரி.இவை நேர்மறையான பிம்பங்களை உருவாக்கும். பெரிதான நம்பிக்கையை விதைப்பதற்கு, நாம் பெரும் நம்பிக்கையையே விதைக்கும் வார்த்தைகளையும், சொற்றொடர்களையும் உபயோகிக்கப் பழகிக்கொள்ள வேண்டும்.
எப்பொழுதுமே நேர்மறையான ஆரோக்கியமான உணர்வுகளை காண்பிக்கும் சொற்களையே உபயோகிக்க கற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் பேசும் நண்பர்களிடம் எல்லாம் உற்சாகமூட்டும் அல்லது உத்வேகத்தை உண்டு பண்ணும் சொற்களையே உபயோகியுங்கள்.
நேர்மறையான சொற்களே பிறரை உற்சாகப்படுத்தும். சாத்தியப்படுத்தும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பிறரை ஒரு நல்ல காரியத்திற்காக புகழுங்கள். உங்களைச் சுற்றி இருக்கும் ஒவ்வொருவரும் இந்த புகழ் வார்த்தைகளுக்காகத்தான் ஏங்கி நிற்கிறார்கள்.
நேர்மறையான சொற்களையே உபயோகித்து, ஒரு செய்தியையோ அல்லது திட்டத்தையோ அல்லது யோசனையையோ விளக்குங்கள். "இப்ப உங்க எல்லோருக்கும் ஒரு நல்ல செய்தி கொண்டு வந்திருக்கேன்... ஒரு மிக அருமையான சந்தர்ப்பத்தை நம் எல்லோருக்கும் இப்ப கிடைச்சிருக்கு. இப்ப நான் அதைப் பற்றி பேசப் போறேன்" என்று ஆரம்பியுங்கள். அவர்கள் மனம் உற்சாகத்தில் துள்ளிக் குதித்துக் கேட்கத் தயாராகும்.
நிச்சயமான வெற்றியே கிடைக்கும் என்று சூளுரைத்தாற்போலப் பேசுங்கள் கேட்பவர்கள் கண்கள் பிரகாசிக்கும். வெற்றியே கிட்டும் என்று வாக்களியுங்கள், நிமிர்ந்து உட்காருவார்கள். உங்களுக்கு ஆதரவும் கிடைக்கும். கோட்டைகளைக் கட்டுங்கள் சமாதிகளை எழுப்பாதீர்கள்.