

அரசன் ஒருவனிடம் விலை மதிக்க முடியாத பெரிய வைரக்கல் ஒன்று இருந்தது. தன்னுடைய நாட்டின் பெருமையாகவே அதனை கருதி வந்தான். இந்நிலையில் தலைமுடி போல கீறல் ஒன்று அந்த வைரக்கல்லில் விழுந்தது.
இதனைக் கண்ட மன்னன் துடிதுடித்துப் போனான். வைரக்கல்லின் அழகே போனதாக நினைத்து வருந்திய மன்னன், தன் நாட்டில் உள்ள நகை விற்பன்னர்களை வரவழைத்து ஆலோசனைக் கேட்டான்.
வைர வியாபாரிகள் அனைவரும், வைரம் தன்னுடைய மதிப்பை இழந்துவிட்டது. இதை வைத்து ஒன்றும் செய்வதற்கில்லை. இன்னும் விரிசல் கொடுக்கும் எனக்கூறினார்கள்.
ஆனால் கடைசியாக வந்த ஒரு ஏழை பொற்கொல்லன் அரசே இந்த கீறலை வைத்து வைரத்தின் மதிப்பை பல மடங்கு உயர்த்த முடியும் எனக்கூறினான்.
வைரக்கல் அவனிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் சில நாட்களுக்குப் பின் சிறிய நகை பேழையுடன் பொற்கொல்லன் திரும்பி வந்தான். மூடியை திறந்து பார்த்த அரசன் வைரத்தின் மீது அழகான ரோஜா ஒன்று செதுக்கப்பட்டிருந்ததை பார்த்து பிரமித்துவிட்டான்.
அரசனுக்கு கவலை அளித்த கீறல் ரோஜாவின் காம்பாக மாறி காட்சியளித்தது. இது கதைதான் என்றாலும் நமக்கு கஷ்டம் என்று தோன்றுபவை காலப்போக்கில் இன்பத்தை தரும் என்பதை உணர்த்துகிறது.
ஒருவருக்கு ஊக்கம், ஆர்வம், தன்னம்பிக்கை, பயிற்சி, முயற்சி, தீவிர பயிற்சி, விடாமுயற்சி, தற்காலிக தோல்விகளால் துவளாமை, தொடர்ந்து ஈடுபடும் போர் குணம், வெற்றியை அடைந்தே தீருவேன் என்கிற உறுதி உள்ளவர்கள் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைந்தேதீருவார்கள்.
சிந்தனையாளர் எமர்சன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம். எமர்சனிடம் ஒருவர் உங்கள் வயது என்ன? எனக்கேட்டார். அதற்கு அவர் 360 ஆண்டுகள் எனக் கூறினார். இதைக் கேட்டு பிரமித்த அந்த மனிதர், எனக்கு சரியாக கேட்கவில்லை திரும்பவும் உங்கள் வயதை கூறுங்கள் எனக் கேட்டார்.
அப்பொழுதும் எமர்சன் சத்தமாக 360 ஆண்டுகள் என்றார். இதற்கு அந்த மனிதர் உங்களுக்கு 60 வயதுக்கு மேல் இருக்காது எனக் கூறியதை கேட்ட எமர்சன், நீங்கள் சொல்வது சரிதான். எனக்கு 60 வயதுதான் ஆகிறது. ஆனால் 360 ஆண்டுகளில் நான் எப்படி வாழ முடியுமோ அப்படி இந்த 60 ஆண்டுகளை பயன்படுத்தி வாழ்ந்து இருக்கிறேன் என கூறினார். இதை கேட்ட அந்த மனிதர் அமைதியாகி சிந்திக்க ஆரம்பித்தார்.
காலத்தின் மதிப்பை அறிந்தவர்கள் காலம் கடந்த பின்பும் வரலாற்றில் புகழப்படுகிறார்கள். ஆகவே இதை படிக்கும் ஒவ்வொருவரும் காலத்தின் மதிப்பை அறிந்து மகிழ்ச்சியாக வாழுங்கள்.