

பிரச்னைகளும் கஷ்டங்களும் நிரம்பியதுதான் வாழ்க்கை. என்றும் எல்லையற்ற நிதி அவரவர் மனதுக்குள்ளயே கொட்டி கிடக்கிறது என்று நம்முடைய ஞானிகள் சொன்னார்கள். மனிதன் வாழ்க்கையில் சோர்ந்து இடிந்து போய் விடக்கூடாது என்பதற்காக "உன்னையே நீ அறிவாய்" என்றும் கூறினார்கள்.
சில காரியங்களை வாழ்க்கையில் சாதிக்க விரும்பும் நாம் அதற்கான முயற்சிகளில் ஈடுபடுகின்றபோது, ஏற்படுகின்ற கஷ்டங்களையும் பிரச்சனைகளையும் கண்டு மலைத்து நிற்கிறோம். அதோடு நம்முடைய சக்தியை நாம் உணராத காரணத்தினால் நம்மால் ஆகுமா எனவும் கேட்டு தயங்குகிறோம்.
வெற்றி பெறுவதற்கு தேவையான அனைத்தும் நம்மிடம் இருந்தாலும், வெற்றியை நாம் வெளியில் தேடி அலைவது 'வெண்ணையை கையில் வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்த 'கதையாக போய்விடும்.
ஒரு ஊரில் 30 வருடங்களுக்கும் மேலாக ஒரு பிச்சைக்காரன் ஒரு குறிப்பிட்ட இடத்திலேயே இருந்தபடி பிச்சை கேட்டு வந்தான். ஒரு நாள் அவன் இறந்தபோது அனாதை பிணத்தை புதைப்பதற்கு ஊர் மக்கள் இடம் தேடினார்கள்.
அவன் எந்த இடத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பிச்சை கேட்டானோ அதே இடத்தில் அவனை புதைப்பது என்ற முடிவுக்கு வந்து, அந்த இடத்தில் குழியை தோண்டினார்கள்.
அப்போது அனைவரும் ஆச்சரியப்படும்படியாக அங்கே புதையல் இருந்தது. தன்னுடைய கால்களுக்கு அடியிலேயே புதையல் இருப்பதை அறியாமல் 30 வருடங்களாக அந்த இடத்திலேயே நின்று பிச்சை கேட்டு இருக்கிறான்.
பிச்சை எடுக்க அந்த இடத்தை தேர்ந்தெடுத்தவன் அதற்கு பதிலாக தோண்டும் வேலையை அந்த இடத்தில் செய்திருந்தால் கூட புதையலை கண்டுபிடித்திருப்பான். அல்லது அந்த இடத்தில் நிலத்தை தோண்டி மரத்தை பயிர் செய்தால் பிற்காலத்திலாவது பலன் கிடைக்கும் என அவன் எண்ணவில்லை. ஆகவே முயற்சிக்கும்போது தான் நமக்கு அருகில் உள்ளது கூட கைக்கு எட்டுகிறது.
நம்மில் பெரும்பாலானவர்கள் அவனை போலத்தான். நம்மிடம் இருப்பதை உணராமல் வெளியில் எங்கே, என்ன கிடைக்கும் என்று தேடிக் கொண்டிருக்கிறோம். நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு பெரிய புதையல் இருக்கிறது. புதையலின் அடையாளத்தை கண்டு அதனைப் பெற ஒவ்வொருவரும் முயற்சிக்க வேண்டும்.
நம்முடைய ஆற்றலைக் கொண்டு சகல வெற்றிகளையும் பெறவேண்டியவர்களாக இருக்கிறோம். ஆகவே எல்லையற்ற நிதி நம் மனதுக்குள்ளே கொட்டி கிடக்கும்போது அதனை அறிய முற்பட்டு முயற்சி செய்யும் பாதையில் இறங்க வேண்டும்.