
நாம் எல்லோருக்குமே வாழ்க்கையில் வெற்றி பெறவும் மென்மேலும் மேன்மை அடையவும் ஆசைதான். அதற்கான வழியிலேயே அனைவரும் பயணம் செய்தாலும் இலக்கை அடைவது ஒரு சிலர்தான். இடையிலேயே தங்கள் தீர்மானத்தை பலரும் கைவிட்டு விடுவதால் அந்த இடத்திலேயே தேங்கி விடுகின்றனர்.
வாழ்க்கையில் வெற்றிபெற என்ன வெய்ய வேண்டும், வேலையில் செயல்திறனை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும், நீண்ட நேரம் களைப்பில்லாமல் வேலை பார்க்க என்ன செய்யவேண்டும் என்று விரும்புபவர்கள் கீழ்க்கண்ட அம்சங்களைப் பின்பற்றலாம்.
1-முறையான சாப்பாடு
அதிக சத்துள்ள உணவைத்தான் சாப்பிட வேண்டும் என்றில்லை. எந்த உணவையும் முறையான நேரத்தில் முறைப்படி சாப்பிட வேண்டும். கண்ட கண்ட நேரத்தில் சாப்பிடுவது, நொறுக்குத் தீனி தின்பது போன்றவை உடல் நலத்தைக் கெடுத்துவிடும்.
2-அலுவலக மேஜை சுத்தம்
வேலை பார்க்கும் இடத்தில் சுத்தம், சுகாதாரம் பேணப்பட்டால் வெற்றி தானாக வரும். குப்பை கிடங்குபோல மேஜை இருந்தால் செய்யும் வேலையில் திறன் வெளிப்படாது. அதனால் மேஜையில் இடம் பெறும் பொருட்கள் தேவையானவையாகவும், அவை அதற்கென உள்ள இடத்திலும் இருக்க வேண்டும்.
3-இசை
பணியின் ஊடே மெல்லிசை கேட்பது வேலைத்திறனை மேம்படுத்தும். மிகக்குறைந்த ஒலியில் பிடித்தமான பாடல்கள், இசை, ராகம் போன்றவற்றை கேட்கும்போது சிறப்பான பணித்திறன் கிடைக்கும். தனியறையில் இருப்பவராக இருந்தால் கொஞ்சம் ஒலி அளவை அதிகரித்து வைத்துக்கொள்ளலாம். கூட்டாக அமர்ந்து வேலை பார்க்க வேண்டிய இடத்தில் தனி நபர்கள் பயன்படுத்தும் ஐபாட், மீடியா பிளேயர் போன்றவற்றை பயன்படுத்திக்கொள்ளலாம். அல்லது கம்ப்யூட்டரின் பின்னணியில் மெல்லிய இசையை ஒலிக்க விடலாம்.
4-மணம்
மனஅழுத்தம், களைப்பு, சோம்பேறித்தனம் எட்டிப் பார்க்கிறதா? எலுமிச்சை பழத்தை முகர்ந்து பார்த்தால் சோம்பல் ஓடிவிடும் எலுமிச்சை பழத்தில் உள்ள லினாலூல் என்ற ரசாயன மணம் நம் மூளைக்கு புத்துணர்வை அளிக்கக் கூடியது. அதுபோல புதினா செடி மணம், பிடித்தமான சென்ட் போன்றவையும் மனதை மாற்றக் கூடியவை. தேவைப்படும் நேரத்தில் இவற்றை முகர்ந்து பார்த்து மனக் குழப்பங்களில் இருந்து விடுபடலாம்.
5-இருக்கை உடற்பயிற்சி
அலுவலக இருக்கையில் அமர்ந்தவாறு உடற்பயிற்சிகள் மேற்கொள்வதால், வேலைத்திறன் அதிகரிக்கும். கைகளை மேலும் கீழும் அசைப்பது, தலையை அசைப்பது, உடலை முன்பின் வளைப்பது போன்றவற்றால் உடல் தகுதி மேம்பாடு அடையும்.
6-தியானம்
சிறிது நேரமாவது தியானம் செய்வது சிறப்பான வேலைத்திறனை அளிக்கும். காலை அல்லது மாலை நேரத்தில் 10 நிமிடம் தியானம் செய்தால் கூட பலமணி நேரத்திற்கு உற்சாகம் ஊற்றெடுத்துக் கொண்டே இருக்கும் என்பது நிரூபிக்கப் பட்டுள்ளது. அதனால் வெற்றி பெற நினைப்பவர்கள் கண்டிப்பாக தியானம் செய்ய வேண்டும்.
7-நன்றி
வெற்றி பெறவேண்டும் என்று விரும்புபவர்கள் கண்டிப்பாக பராமரிக்க வேண்டிய ஒரு டைரி நன்றி டைரி. நாள்தோறும் அதில் பலருக்கும் நன்றி கூறி எழுத வேண்டும். தங்களுக்கு நன்மை செய்தவர்களை நேரில் போற்றுவதுபோல அவர்களுக்கு நன்றி தெரிவித்து எழுதுவது சிறப்பானது.
8-மின்னணு சுதந்திரம்
எலக்ட்ரானிக் பொருட்களின் பிடியில் இருந்து சிறிது நேரமாவது மீண்டு சுதந்திரமாக இருங்கள். குறைந்த பட்சம் இரவிலாவது மின்னணு சுதந்திரமாக இருக்கப் பழகிக்கொள்ளுங்கள். எந்த நேரமும் செல்போன், கம்ப்யூட்டர், மியூசிக் சிஸ்டம் என்றிருக்காமல் சிறிது நேரமாவது எல்லாவற்றையும் துறந்தால் வெற்றி பெறலாம்.