பதற்றமான சூழ்நிலையிலும் பதறாத மனம்!
நண்பர்கள் இருவர் ஒருமுறை தொடர்வண்டியில் பிரயாணம் செய்துகொண்டிருந்தனர்.
ஒரு நண்பர் ஜன்னலோரத்து இருக்கையில் அமர்ந்திருந்தார். அப்போது அவர் தம் கையை ஜன்னலுக்கு வெளிப்புறமாக வைத்துக்கொண்டு வந்தார். திடீரென்று அவரது கைக்கடிகாரம் கழன்று இரயிலுக்கு வெளியே விழுந்துவிட்டது. அப்படி விழுந்ததும் அவருக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. இரயில் வண்டியோ தடதடவென்று ஓசையெழுப்பியபடி ஓடிக்கொண்டிருந்தது.
"ஐயோ, என் கைக்கடிகாரம் விழுந்துவிட்டதே மிகவும் விலையுயர்ந்ததாயிற்றே! என் தோழர் ஒருவர் எனக்கு அன்புப் பரிசாக வெளிநாட்டிலிருந்து அனுப்பியது இப்படி அநியாயமாகப் போய்விட்டதே!" என்று கூப்பாடு போட்டார்.
அந்த இழப்பை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
என்ன செய்ய முடியும்? தொடர்வண்டியோ வேகமாகப் போய்க் கொண்டிருந்தது. ஒரு கைக்கடிகாரத்துக்காக அபாயச் சங்கிலியைப் பிடித்து இரயிலை நிறுத்துவதென்பது ஆகாத காரியம்.
கடிகாரத்தைப் பறிகொடுத்தவர் பக்கத்திலிருந்த தம் நண்பரைப் பார்த்தார். எதையாவது இழக்கும்படி நேர்ந்தால் அருகில் இருப்பவர்கள் ஆறுதல் கூறவேண்டுமென்று நினைப்பது மனித இயல்பு. அவ்வாறே தம் நண்பர் ஆறுதல் கூறுவார் என்று எண்ணி இவர், அவரைப் பார்த்தார்.
ஆனால், அவர் இவரைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. இவருடைய தவிப்பையும் கூக்குரலையும் அவர் பொருட்படுத்தவில்லை.
முன்பாவது அவர், இவருடன் பேசிக்கொண்டு வந்தார். இப்போது அந்தப் பேச்சையும் நிறுத்திவிட்டார். ஆனால், அவருடைய உதடுகள் மாத்திரம் ஒன்று, இரண்டு... என்று எதையோ தொடர்ச்சியாக எண்ணிக்கொண்டிருப்பதாகத் தோன்றியது.
இவருக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. உற்ற நண்பன் பொருளைத் தவற விட்டுப் புலம்பிக் கொண்டிருக்கும்போது அவர் பாட்டுக்கு எதையோ முணுமுணுத்துக் கொண்டிருக்கிறாரே!
நண்பரின் ஆத்திரத்தை அவர் பொருட்படுத்தவேயில்லை. பதினெட்டு.. பத்தொன்பது.. இருபது.. அவருடைய கணக்குத் தொடர்ந்து கொண்டேயிருந்தது.
அடுத்த இரயில் நிலையம் வந்தது. இரயில் நின்றது. இதுவரை எதையோ கணக்கிட்டுக் கொண்டிருந்தவர், தம் நண்பரையும் இழுத்துக்கொண்டு போய் அந்த இரயில் நிலைய அதிகாரியைச் சந்தித்தார்.
அதிகாரியிடம், "ஐயா, என் நண்பருடைய வாட்ச், பிரயாணத்தின் போது தவறி இரயிலுக்கு வெளியே விழுந்துவிட்டது. இங்கிருந்து முப்பத்திரண்டு தந்திக் கம்பங்களைத் தாண்டி, முப்பத்திரண்டுக்கும் முப்பத்து மூன்றுக்கும் இடையில் அது கிடக்கும். மிகவும் விலையுயர்ந்த கைக்கடிகாரம் அது. அதை உங்கள் ஊழியர்கள் மூலம் தேடி எடுக்கச் செய்து எங்கள் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்" என்று வேண்டிக்கொண்டு தம் விலாசத்தையும் கொடுத்தார்.
அப்போதுதான் பொருளைத் தவறவிட்டவருக்குத் தம் நண்பர் ஒன்று இரண்டு என்று எதை எண்ணிக்கொண்டு வந்தார் என்பதும், ஏன் எண்ணிக்கொண்டு வந்தார் என்பதும் புரியவந்தன. பொதுவாக எல்லோருக்கும் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அந்தச் சூழ்நிலை யில் விழிப்புணர்வுடன் இருந்து சரியாகச் செயல்பட்ட நண்பரின் சாமர்த்தியத்தை மெச்சினார்.
இன்பம் துன்பம் இரண்டையும் சமமாக கருதுபவரால்தான் இக்கட்டான நேரங்களில் விழிப்புணர்வுடன் செயல்பட முடியும் என்பதற்கு மேற்கண்ட சம்பவமே உதாரணம்.