

வீடு என்பதை பெண்கள் ஆட்சிக்கு உட்பட்ட சிறிய நாடு என்றே கூறலாம். அந்த நாட்டை முழுமையாக ஆளக்கூடிய அரசி அந்த வீட்டின் தலைவிதான். குழந்தைகளுக்கு சிறந்த ஒரு எடுத்துக்காட்டாய் வாழ்ந்து நல்வழி காட்டுகிறாள். தாய் எவ்வழியோ குழந்தைகளும் அவ்வழியே.
ஜார்ஜ் ஹெர்பர்ட் ஒரு நல்ல தாய் நூறு பள்ளிகளுக்கு சமம் என்கிறார். நம் இந்திய நாட்டின் பழமொழி கூட 'தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை' என்று கூறுகிறது. ஒரு தாயினுடைய நற்பண்புகள்தான் குழந்தைகளை கவரும் வகையில் உள்ளது.
அன்பு, அடக்கம், நல்லொழுக்கம், நல்ல பண்பாடுகள் இவற்றையெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டிய இடமாக உண்மையிலேயே வீடுதான் இருக்கிறது. எங்கெல்லாம் பெண்கள் தாழ்ந்தவர்களாகவும், இழிந்தவர்களாகவும் மதிக்கப்படுகிறார்களோ அந்த இல்லமும் நாடும் ஒருபோதும் உயர்வானதாக மதிக்கப்படவே மாட்டாது.
அன்னையாக போற்றப்படுபவர் அமைதி, அன்பு ,அருள், அடக்கம், இனிமை, எளிமை, மரியாதை விட்டுக் கொடுக்கும் பண்பு போன்ற நற்பண்புகள் அமையப்பெற்று குழந்தைகள் போற்றி பின்பற்றக்கூடிய நல்லதோர் எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்ட வேண்டும்.
அவ்வாறு இருக்கும் வீடு ஒரு நல்ல கோவிலாக கருதப்படும். இல்லம் நல்ல உறைவிடமாக இல்லாமல் அன்பு இல்லமாக இயங்க வேண்டும். பெண்களே நாட்டின் கண்களாக இருப்பதால் தீரம் நிறைந்த செல்வங்களை, நாட்டின் வருங்கால காவலர்களை உருவாக்கும் திறன் படைத்தவர்களாக இருக்கிறார்கள்.
'வாழ்க்கைத் துணைநலம்' என்ற ஒரு அதிகாரத்தின் வாயிலாக திருவள்ளுவர் பெண்களின் மாண்பை மிகச்சிறப்பாக எடுத்துரைத்துள்ளார். 'தொட்டிலை ஆட்டும் கை தொல்லுலகை ஆளும் கை' என்பது ஒரு இனிய ஆங்கில பழமொழி.
வீரத்தாய்களால் மட்டுமே நாட்டை வீரக் கோட்டமாக மேம்படச் செய்யும் தகுதி உடைய வீரர்களை உருவாக்க முடியும் . 'மங்கையர்கள் மனைமாட்சியின் வித்தாவார்கள்' 'தாயினும் சிறந்த உயிரினம் உலகில் பிரிதில்லை' என்கிறார் அறிஞர் பெர்னாட்ஷா.
கிறிஸ்து பிறக்கும் காலத்திற்கு முன்பிருந்தே பெண்மை நனிசிறந்த நல்லறம் படைக்கும் தன்மையாக விளங்கி வருகிறது. வீட்டின் நலமும் நாட்டின் நலமும் பெண்களின் கரங்களில் தான் உள்ளன.
பெண் நினைத்தால் உலகினை அன்பும் ,அறமும் செழித்து ஓங்கும் தெய்வீக உலகமாக மாற்ற முடியும். அதை உணர்ந்து மகளிர் அனைவரும் செயல்பட்டு வெற்றி பாதையை அமைக்க வேண்டும் .அதுவே அவர்கள் உலகிற்கு ஆற்றும் நற்பணி. அப்பணியே அவர்களை மென்மேலும் உயர்த்தும்.
பெண்கள் முன்னேற்றம் பற்றி மிகச்சிறப்பாக பாடிய கவிஞர்களுள் தலைசிறந்தவரான பாரதியார், 'பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமே! என்று ஆனந்தமாக பாடினார்.
பெண்ணினத்தின் பெருமையைப் பற்றி பேசுவது மட்டும் நமது கடமை அல்ல. பெண்ணுக்குரிய மரியாதைகளை வழங்கி வாழ்க்கையில் மகிழ்ச்சியுடன் வாழ்வதே இல்லறத்தின் இனிய பண்பாகும். என்றென்றும் இல்லறமே நல்லறமாக விளங்கட்டும்.