
ஒரு நல்ல செயலை செய்யவேண்டும் என்று எண்ணும் பொழுதே அதை செய்துவிட வேண்டும். இது ஒரு நல்ல பழக்கம். இந்த மனப்பான்மையை வளர்த்துக் கொள்வது மிகவும் அவசியம்.
நல்ல செயலை தள்ளிப்போடுவது சில சமயம் மனம் மாறி அதனை செய்யாமல் விடுவதற்கு வழி வகுக்கும். நல்ல செயல்களை பிறகு செய்யலாம் என்று ஒத்தி வைப்பது கடைசியில் முடியாமலே கூட போய்விடும். எனவே நல்ல செயல்களை பிறகு செய்யாமல் உடனே செய்யவேண்டும். இப்படி செய்வதால் அவை விரைவாகவும், சிறப்பாகவும் முடிவடையும்.
காலமும், கடல் அலைகளும் யாருக்காகவும் காத்திருக்காது என்று சொல்வார்கள். நாளை நாளை என்று தள்ளிப்போடுவதால் ஏராளமான வேலைகள் நம் முன் பூதாகரமாக வளர்ந்து நிற்கும். அவற்றை முடிக்க முடியாமல் தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தால் மலைத்து விடுவோம்.
அத்துடன் அவற்றை முடிக்க வேண்டும் என்கின்ற முயற்சியும் இறுதியில் தோல்வியில் முடியும். எனவே எதையும் பின்னர் செய்யலாம் என்று தள்ளிப்போடாமல் நினைத்த நல்ல செயல்களை அன்றே முடித்துவிடுவது நல்லது.
எந்த செயலும் உரிய காலத்தில் செய்யப்பட வேண்டும். பருவம் தவறி செய்யப்படும் செயல்கள் சிறப்பாக இருக்காது. இதைத்தான் நம் முன்னோர்கள் 'பருவத்தே பயிர் செய்' என்று கூறியுள்ளனர். அந்தந்த நேரத்தில் அந்தந்த செயல்களை செய்வதால் செயல்கள் நல்லபடியாக காலதாமதம் ஆகாமல் நிறைவடையும்.
சுவாமி விவேகானந்தர் அவர்கள் 'நேரத்தை வீணாக்கும் பொழுது கடிகாரத்தைப் பார். அதில் ஓடுவது முள் அல்ல உன் வாழ்க்கை' என்று கூறியுள்ளார். நாளை என்பது நம் கையில் இல்லை. எனவே இன்றே, இப்பொழுதே எண்ணுகின்ற நல்லதை செய்து முடித்துவிட வேண்டும்.
நல்லதை செய்வதற்கு நேரம் காலம் பார்க்க வேண்டியதில்லை. நல்லதை செய்வதற்கு பல வழிகள் உள்ளன. அதற்கு நம் உள்ளத்தில் முதலில் நல்ல எண்ணங்கள் இருக்க வேண்டும். அத்துடன் நல்லதே செய்ய முயற்சி செய்ய வேண்டும்.
உதவிகள் செய்வதும், மற்றவர்கள் கஷ்டப்படும்பொழுது அவர்களுக்கு ஆறுதல் அளிப்பதும், ஆதரவற்றோருக்கு கை கொடுப்பதும் என நல்லதை செய்ய நல்ல மனம் இருந்தாலே போதும். மனதில் அன்பு, கருணை, பொறுமை, இரக்கம், உண்மை போன்ற பண்புகள் இருந்தால் நல்லதை செய்ய மனம் விழையும்.
நாம் செய்யும் ஒவ்வொரு செயலும், பேசும் வார்த்தைகளும், நினைக்கும் எண்ணங்களும் நல்லதாக இருப்பது அவசியம். நல்ல சிந்தனைகள் மற்றும் செயல்கள் மூலம் நம்மால் மற்றவர்களையும் நல்லவர்களாக மாற்ற முடியும். நல்லது செய்வதன் மூலம் ஒருவரின் வாழ்க்கையில் நல்ல தாக்கத்தை உண்டு பண்ண முடியும். சமூகத்தில் நல்ல பெயரும், மதிப்பும் மரியாதையும் உயரும்.
பிறருக்கு உதவி செய்ய ஒரு வாய்ப்பு கிடைப்பதன் மூலம் நம் மனமும் விசாலமடையும். சமுதாயத்திலும் ஒரு நல்ல மாற்றத்தை உண்டாக்க முடியும். எனவே நேரம் காலம் பார்க்காமல் நல்ல செயல்கள் செய்வது ஒருவருடைய வாழ்க்கையை சிறப்பாக்குவதுடன் சமுதாயத்தில் நேர்மறையான தாக்கத்தையும் உண்டு பண்ணும்.
நல்லதை செய்வதற்கு மனம் இருந்தால் போதும் நேரம் காலம் பார்க்க வேண்டாம் என்பது உண்மைதானே நண்பர்களே!